2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை விதித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மியூசிக் அகாடமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் பெயரில் சங்கீத கலாநிதி விருதை, 2005ம் ஆண்டு முதல் மியூசிக் அகாடமி வழங்கி வருகிறது. ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசுத் தொகையுடன் கூடிய இந்த விருது, நடப்பாண்டு பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டி.எம்.கிருஷ்ணாவுக்கு, விருது வழங்குவதற்கு தடை விதிக்கக் கோரி, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என தடை விதித்து உத்தரவிட்டது.
அதே சமயம், அவரது பெயரை பயன்படுத்தாமல் விருதை வழங்கலாம் என இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மியூசிக் அகாடமி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் உயிலில் அவரது பெயரில் விருது வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்படவில்லை எனவும்,சிலைகள், நினைவு சின்னம் அமைக்ககூடாது என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விருதுக்குரியவர்கள் ஆங்கில நாளிதழ் குழுமம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் தனபால் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது , வழக்கை திங்கட்கிழமை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதால், வழக்கை நீதிபதிகள் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.