இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மதம் சார்ந்த பிரசாரங்களை மேற்கொண்டு வந்தது. பாஜக ஆர்.எஸ்.எஸ்., இந்துத்வ உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பாக வட மாநிலங்களில் மதம் சார்ந்த வெறுப்பை விதைத்துள்ளது. அதன் எதிரொலியாக அங்கே குஜராத் உள்ளிட்ட பல கலவரங்கள் அரங்கேறியுள்ளது. இந்த கலவரங்கள் காரணமாக பல மக்கள் உயிரிழந்துள்ளனர்.
பாஜக ஆளும் குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த சமயத்தில் குஜராத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் பலரும் தங்கள் உடல் உறுப்புகளை இழந்ததோடு, உயிர்களையும் இழந்துள்ளனர். இதில் இஸ்லாமிய பெண் பில்கிஸ் பானு இந்துத்வ அமைப்பினரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். தற்போது வரை நீதிக்காக காத்திருக்கும் அவரது செய்தியை நாடு அறிந்த ஒன்றே!
இப்படி பாஜக தங்கள் அரசியல் நோக்கத்திற்காக மத உணர்வுகளை விதைப்பது மட்டுமின்றி, பிற மத வெறுப்புகளையும் விதைத்து வருகிறது. இதனாலே வட மாநிலங்களில் சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல்கள் அரங்கேறி வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இது மேலும் அதிகரித்தே காணப்படுகிறது.
தற்போது வரை மோடி மற்றும் பாஜகவினர் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பேச்சை பேசி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று அரசியலமைப்பில் இருக்கும் நிலையில், ஒரே மதத்தை கொண்டு வருவதற்கான தீவிர முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. பாஜக மத அரசியலில் ஈடுபட்டு வருவதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், தற்போது நடிகை வித்யா பாலனும் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு பிரபல நடிகை வித்யா பாலன் அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது, "நாங்கள் நிச்சயமாக மிகவும் துருவமுனைக்கப்பட்டுள்ளோம் என்று நினைக்கிறேன். முன்பு ஒரு நாடாக இருந்த இந்தியாவுக்கு மத அடையாளம் என்ற ஒன்று இல்லாமல் இருந்தது. ஆனால், இன்று என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
இது அரசியலில் மட்டுமல்ல, சமூக ஊடகங்களிலும் நடக்கிறது. நாம் மதரீதியாக பிளவுப்படுத்தப்பட்டுள்ளோம். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பிரிவினைப்படுத்தப்படும் பிரச்சாரம் அதிகரித்துள்ளது. இதை பார்க்கவே வேதனையாக உள்ளது" என்றார்.