சினிமா

“பாடல் எழுதும் எண்ணம் இருந்தால்..” - மாரிமுத்துவின் கையெழுத்தை பகிர்ந்து கவிஞர் மகுடேசுவரன் பகிர்வு !

மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கையெழுத்தை பகிர்ந்து கவிஞர் மகுடேசுவரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“பாடல் எழுதும் எண்ணம் இருந்தால்..” - மாரிமுத்துவின் கையெழுத்தை பகிர்ந்து கவிஞர் மகுடேசுவரன் பகிர்வு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தேனி மாவட்டம் பசுமலை என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜி.மாரிமுத்து. ஆரம்பத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், அஜித்தின் வாலி படம் தொடங்கி ரஜினியின் ஜெயிலர் படம் வரை குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர் நீச்சல்' என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாகியுள்ளார். இவர் தற்போது சமூக வலைதள பக்கத்தில் மீம் டெம்ப்லேட்டாக வலம் வருகிறார். இந்த சூழலில் நேற்று காலை 8.30 மணியளவில் எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவரது உடல் நேற்று சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், திரை பிரபலங்கள், ரசிகர்கள், தி.க.தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், திரை நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், சூர்யா, கமல் உள்ளிட்ட பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

“பாடல் எழுதும் எண்ணம் இருந்தால்..” - மாரிமுத்துவின் கையெழுத்தை பகிர்ந்து கவிஞர் மகுடேசுவரன் பகிர்வு !

தொடர்ந்து இன்று இவரது உடல் சொந்த ஊரான பசுமலை கிராமத்தில் இறுதி சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்த சூழலில் மறைந்த நடிகர் மாரிமுத்து உதவி இயக்குநராக இருந்த சமயத்தில் கவிஞர் மகுடேசுவரனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தை பகிர்ந்த கவிஞர், நீண்ட பதிவுடன் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில், "கவிஞர் திரு. மகுடேஸ்வரன் அவர்களுக்கு, நான் இயக்குநர் வஸந்த் அவர்களின் உதவி இயக்குநர். இயக்குநருக்கு நீங்கள், அனுப்பி வைத்த கவிதை நூல் கிடைத்தது. தங்களுக்கு திரைப்படத்தில் பாடல் எழுதும் எண்ணம் இருந்தால் - தன்கள் விருப்பட்தை இயக்குநருக்கு எழுதுங்கள். இயக்குநரின் இசைவுடன்தான் உங்களுக்கு இந்த கடிதத்ததை எழுதுகிறேன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

“பாடல் எழுதும் எண்ணம் இருந்தால்..” - மாரிமுத்துவின் கையெழுத்தை பகிர்ந்து கவிஞர் மகுடேசுவரன் பகிர்வு !

இதுகுறித்து கவிஞர் மகுடேசுவரன் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு :

"இயக்குநர், நடிகர் மாரிமுத்தின் மறைவு எதிர்பாராதது. அதிர்ச்சியளிப்பது. நிலையாமையை எண்ணிக் கண்கலங்கவைப்பது. ஆழ்ந்து இரங்குதலன்றி வேறில்லை. அவருடைய ஒளிவுமறைவற்ற பேச்சு யாவரையும் ஈர்க்கவல்லது. அண்மையில் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் இடம்பெற்ற அவருடைய நீண்ட நேர்காணலில் திரைத்துறையின் பன்முகங்களைத் தயக்கமின்றிக் கூறிச் சென்றார்.

முதற்கண் அவர் வைரமுத்தின் உதவியாளராக அறியப்படுகிறார். வைரமுத்திற்கு உதவியாளராக வல்லவர் அழகிய கையெழுத்தினைக் கொண்டவராக இருத்தல் வேண்டும். மாரிமுத்தின் கையெழுத்து உண்மையிலேயே அழகியது. மெய்யெழுத்துகட்கு மேற்புள்ளியிடும் இடத்தில் வட்டமாகச் சுழற்றியிடும் பழக்கம் எனக்கும் உண்டு. கையெழுத்து அழகாக இருக்க வேண்டுமெனில் மெய்யெழுத்துகளை அவ்வாறு எழுதிப் பாருங்கள். இயக்குநர் என்றே எழுதுகிறார். நிறுத்தற்குறிகள் தெளிவாக இடப்பட்டுள்ளன.

இணைப்பில் உள்ள மடல் மறைந்த மாரிமுத்து எனக்கு எழுதியது. தொண்ணூற்று ஏழாம் ஆண்டில் எழுதப்பட்டது. அவருடைய கையெழுத்தின் அழகினை உலகோர் அறிய வேண்டும் என்பதற்காகவே இதனை வெளியிடுகிறேன். உள்ளேயுள்ள செய்திகள் யாவும் காலங்கடந்துபோய்விட்டன. உதவி இயக்குநரான போராட்டக் காலத்திலேயே தமக்கென்று மடல்தாள் அச்சிட்டுக்கொண்டுள்ளார். இத்தன்மை ஒருவருடைய திட்டமிட்டதும் தெளிவானதுமான அணுகுமுறை.

“பாடல் எழுதும் எண்ணம் இருந்தால்..” - மாரிமுத்துவின் கையெழுத்தை பகிர்ந்து கவிஞர் மகுடேசுவரன் பகிர்வு !

என் கவிதைத் தொகுதிகள் அச்சாகி அணியமானதும், அவற்றில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படிகளைக் கவிதையில் ஈடுபாடுடைய புகழ்மக்கள், மூத்த பெருங்கவிஞர்கள் என அனைவர்க்கும் அனுப்பிவிடுவேன். மற்றோர் ஐம்பது படிகளை இதழ்களின் மதிப்புரைகட்கும் அனுப்புவேன். என்னுடைய ஐந்தாம் கவிதைத் தொகுதியான ‘மண்ணே மலர்ந்து மணக்கிறது’ வெளியாகின்ற வரைக்கும் இந்நடைமுறையிலிருந்து சிறிதும் பிறழ்ந்ததில்லை.

என்னுடைய இரண்டாம் கவிதைத் தொகுப்பான ‘அண்மை’ தொகுதியும் அவ்வாறு இயக்குநர் வசந்திற்கு அனுப்பப்பட்டது. அவ்வமயம் அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மாரிமுத்து உள்ளிட்ட இயக்குநர் குழுவினரால் அது படிக்கப்பட்டிருக்கிறது. தமது புதிய பட முயற்சியில் இறங்கியிருந்த இயக்குநர் வசந்த் புதிய பாடலாசிரியரை நோக்கிய தேட்டத்திலும் அவ்வமயம் இருந்தார்.

அந்தக் குழு புதிய பாடலாசிரியராக அறிமுகப்படுத்த என்னை அணுகியது. அதற்காக எழுதப்பட்ட மடல்தான் இது. ‘உங்கள் நூல் கிடைத்தது, பாட்டெழுத விரும்புகிறீர்களா, இயக்குநரைத் தொடர்புகொள்ளுங்கள், உரிய தொடர்புவழி கீழே’ என்பதுதான் மடலின் சுருக்கம். இவ்வழைப்பின் தொடக்க எண்ணம் மாரிமுத்திடமோ, வசந்திடமோ எழுந்திருக்கலாம். புகழ்பெற்ற பாடலாசிரியரின் முன்னாள் உதவியாளர் என்ற முறையில் என் கவிதைகளில் சில தடயங்கள் மாரிமுத்திற்குக் கிடைத்திருக்கலாம். ‘ஏன்ங்க, இவரைக் கேட்டுப் பார்ப்போமா ?’ என்று தொடங்கியிருக்கலாம். ‘கேட்டுப் பாருங்கள்’ என்று வசந்தும் இசைந்திருக்கக் கூடும். அடுத்து வந்ததுதான் இம்மடல்.

இதனைக் கண்டதும் கடிதத்தில் உள்ள தொலைபேசி எண்ணிற்கு அழைத்தேன். வசந்த் எடுத்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் மகிழ்ச்சியோடு தம் திட்டத்தை விளக்கினார், “இதோ பாருங்க, அடுத்த படத்துக்குப் புதுசா ஒரு மியூசிக் டைரக்டர். புதுசா ஒரு பாடலாசிரியர்னு போகப்போறேன். மியூசிக்கே புதுசா இருக்கணும். லைன்சும் புதுசா இருக்கணும். வைரமுத்திற்கு அப்புறம் அந்த சீட் யாராலும் நெருங்கமுடியாதபடி அப்படியே காலியா இருக்கு. அதைப் பிடிக்கிற அளவிற்கு நீங்க எழுதணும். நான் முதல்ல நல்ல நல்ல டியூன்ஸ் பிடிச்சிடறேன். அப்புறம் நீங்க வந்து எழுதிக்கொடுத்துடுங்க” என்றார். “ஆகட்டும்ங்க” என்று என் இசைவைத் தெரிவித்துவிட்டு வைத்துவிட்டேன்.

பிறகு இயக்குநரிடமிருந்து எவ்வழைப்பும் இல்லை. நானாக அழைத்தபோதும் இயக்குநரைப் பிடிக்க முடியவில்லை. ஆறேழு திங்கள்கள் கழித்து ஒரு திரைப்பட இதழில் செய்தி வந்தது. வசந்த் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு இன்னார் பாடல்கள் எழுதவுள்ளார் என்பதுபோல் செய்தியிருந்தது. எனக்குச் சூழ்நிலை விளங்கியது. நான் சென்னையில் இல்லை. ஊரிலிருந்தபடியே எதிர்பார்த்திருந்தது தவறு. களத்தில் இல்லாமல் வெறுமனே எதிர்பார்த்து அமர்ந்திருந்தால் எப்படி வினைப்பயன் கிடைக்கும் ? வாய்ப்புகளின் அருகில் இருந்தாலொழிய யாரையும் குறைசொல்ல முடியாது.

இரண்டாண்டுகள் கழித்து வசந்த் இயக்கிய, மாரிமுத்து உதவி இயக்குநராய்ப் பணியாற்றிய அந்தப் படம் வந்தது. படத்தின் பெயர் பூவெல்லாம் கேட்டுப்பார். புதிய இசைமையப்பாளர் ‘யுவர் ஷங்கர் ராஜா’. அப்படத்திற்குப் பாடல்களை எழுதியவர் நண்பர் பழநிபாரதி. ஒருவேளை நேரில் காணும் வாய்ப்பு அமைந்திருப்பின் மாரிமுத்திற்கு இம்மடலுக்காக நன்றிநவில எண்ணியிருந்தேன். அவர் மறந்திருக்கக்கூடும். நினைவூட்டிச் சொன்னால் நினைவிற்கும் வரலாம். என்ன செய்வது, காலம் கடந்துவிட்டது !"

banner

Related Stories

Related Stories