சினிமா

சாதியத்தின் முக்கிய உரையாடலை மீண்டும் தமிழ்நாட்டில் முன்னெடுத்த ‘மாமன்னன்’.. இறுதியில் வென்றதா ?

 சாதியத்தின் முக்கிய உரையாடலை மீண்டும் தமிழ்நாட்டில் முன்னெடுத்த ‘மாமன்னன்’.. இறுதியில் வென்றதா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சாதிக்கொடுமையை எதிர்த்து தொடர்ந்து படங்கள் எடுத்து வருபவர் மாரி செல்வராஜ். ஏற்கனவே அவர் எடுத்த பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டு படங்களும் சாதிய ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டன. நல்ல வரவேற்பையும் பெற்றன. அவரின் அடுத்தப்படமாக உதயநிதி ஸ்டாலினுடன் மாமன்னன் படம் அறிவிக்கப்பட்டது. செய்தி வெளியான நாள்தொட்டே படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாள்தோறும் அதிகரித்துக் கொண்டிருந்தது.

தேர்தலில் திமுக வெற்றி பெற்று அமைச்சராகவும் உதயநிதி செயல்பட தொடங்கினார். கூடுதலாக மாமன்னன் தான் தன்னுடையை கடைசி படமாக இருக்குமெனவும் அறிவித்திருந்தார். மாமன்னனில் வடிவேலு நடிக்கும் செய்தி வெளியானது. அதுவும் நகைச்சுவைக்காக இல்லாமல் படத்தின் பிரதான பாத்திரமாகவே வடிவேலுதான் இருக்கப் போகிறார் என்ற செய்தியும் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் செய்தி, ஃபகத் ஃபாசில் நடிக்கும் செய்தி, மாமன்னன் அரசியல் சார்ந்த படம் என்கிற செய்தி, தேவர்மகன் படத்துடன் பொருத்தி வெளியான செய்திகள் என தொடர்ந்து இப்படம் குறித்து வெளியான செய்திகள் எல்லாமுமே ஆர்வத்தை தூண்டிக் கொண்டிருந்தன.

 சாதியத்தின் முக்கிய உரையாடலை மீண்டும் தமிழ்நாட்டில் முன்னெடுத்த ‘மாமன்னன்’.. இறுதியில் வென்றதா ?

கடந்த ஜீன் 29ம் தேதி படம் வெளியானது. மாமன்னன் எம்எல்ஏவாக இருக்கிறார். அவரது மகன் அதிவீரன். அவர் மாமன்னனுடன் அதிகம் பேசிக் கொள்வதில்லை. காரணம் அவரது சிறுவயதில் நேர்ந்த ஒரு சாதிக் கொடுமை சம்பவம். அச்சம்பவத்துக்காக மாமன்னன் தன் கட்சியில் நியாயம் கேட்க, ஆனால் மாவட்டச் செயலாளர் மாமன்னனை பொறுமை காட்கும்படி சொல்லி பிரச்சினையை நீர்த்துப் போக வைத்து விடுகிறார். அதிலிருந்து மகன் அதிவீரனுக்கு மாமன்னன் மீது ஒரு மனத்தாங்கல்.

எம்எல்ஏவாக இருந்தாலும் ஊருக்குள் ஆதிக்க சாதிக்கு பம்மும் நிலையில்தான் மாமன்னன் இருக்கிறார். மாவட்டச் செயலாளரின் மகன் ரத்னவேலுவுக்கு முன் உட்காரவும் தயங்கும் நிலையில் சாதிவெறி அந்த ஊரில் கெட்டிப்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த தலைமுறையில் பிறந்து ஏற்கனவே ஒரு சாதிக் கொடுமைத் துயரை பார்த்து கோபம் கனன்று கொண்டிருக்கும் அதிவீரனோ அப்பாவை போல இல்லாமல், அதிரடியாக இருக்கிறார். அநீதியாக யார் நடந்து கொண்டாலும் பதிலடி கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் அப்பாவை ரத்னவேலுக்கு முன் நாற்காலியில் அமர வைக்கும் முயற்சியில் மோதல் வெடிக்கிறது. கட்சியை விட்டு நீக்கப்படுகிறான் ரத்னவேலு. முதலமைச்சர் மாமன்னன் பக்கம் நிற்கிறார். எனினும் ரத்னவேலு தன் சாதியைக் கொண்டு மாமன்னனை தேர்தலில் வீழ்த்த நினைக்கிறான். இறுதியில் மாமன்னன் வென்றாரா, அதிவீரனின் விருப்பம் நிறைவேறியதா என்பதே மிச்சக் கதை.

 சாதியத்தின் முக்கிய உரையாடலை மீண்டும் தமிழ்நாட்டில் முன்னெடுத்த ‘மாமன்னன்’.. இறுதியில் வென்றதா ?

இந்திய அரசியலமைப்பு அவையில் பாபாசாகெப் அம்பேத்கர் பேசுகையில் ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டார்:

”26 ஜனவரி 1950 அன்று நாம் முரண்பாடுகள் கொண்ட வாழ்க்கைக்குள் நுழையவிருக்கிறோம்”. அனைவருக்கும் வாக்குரிமை அளித்து அரசியலில் நாம் சமத்துவத்தை அங்கீகரித்து விட்டோம். ஆனால் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியிலான சமத்துவம் நிராகரிக்கப்படும் துயரச்சூழலை அவர் நினைவுபடுத்துகிறார். சமூக ரீதியிலான அசமத்துவம்தான் சாதி. சாதியை ஒழித்து பொருளாதார சமத்துவத்தை உருவாக்க முயலாவிட்டால் அரசியல் ஜனநாயகம் காணாமல் போய்விடும் என கவலை தெரிவித்திருந்தார்.

இந்தியா குடியரசானதிலிருந்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் மூலமாக இந்த அரசியல் ஜனநாயகத்தை தக்க வைக்கும் முயற்சி நடந்து வருகிறது. எனினும் ஆயிரம் ஆண்டு காலம் ஊறிப் போன சாதியை மறுபக்கத்தில் அதை உடைப்பதற்கான முயற்சியையும் தொடர்ந்து செய்து வருகிறது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களும் திமுகவும் அரசியல் ஜனநாயகத்தின் வழியாக சமூக ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தை கட்டமைக்கும் முயற்சியைத்தான் சமூகநீதி அரசியலின் வழியாக செய்து கொண்டிருக்கின்றன. இந்திய துணைக்கண்டத்திலேயே ஒப்பீட்டளவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருப்பதற்கு காரணமாகவும் அத்தகைய அரசியல் இலக்குத்தான் இருக்கிறது.

இத்தகைய பின்னணியில்தான் மாமன்னன் படம் மிக முக்கியமானதாக மாறுகிறது.

 சாதியத்தின் முக்கிய உரையாடலை மீண்டும் தமிழ்நாட்டில் முன்னெடுத்த ‘மாமன்னன்’.. இறுதியில் வென்றதா ?

குறிப்பாக சனாதனத்தை போற்றும் பாஜக போன்ற கட்சியின் ஆட்சியில் சாதி இன்னும் அதிகமாக கூர்மைப்படும் சூழலே அதிகம். கூடுதலாக திமுகவின் மீதான அவதூறும் விஷமப் பிரசாரமும் முன்னெடுக்கும் வழக்கம். ஆளுநர், ஒன்றிய அரசு என அதிகார மையங்களிலிருந்தே பாபாசாகெப் விரும்பிய அரசியல் ஜனநாயகத்தை குலைக்கும் முயற்சிகள் எடுக்கப்படும் நிலையில், திமுகவின் அமைச்சராக இருக்கும் உதயநிதியே சுயவிமர்சனத்துக்கும் இடமளிக்கும் வகையில் மாமன்னன் படத்தை தயாரித்து நடித்திருப்பது இப்படத்துக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்துகிறது.

மாரி செல்வராஜின் மாமன்னன் படம் பெரும் கட்சிகளிலும் படிந்திருக்கும் சாதியத்தை பேசுகிறது. அதை களைவதற்கான முயற்சிகளை உவகையுடன் பேசுகிறது. மாமன்னன் படத்தின் முதல்பாதியை சமூக யதார்த்தமாகவும் இரண்டாம் பாதியை நம் அனைவருக்குமான கனவாகவும் விருப்பமாகவும் இயக்குநர் வடித்திருக்கிறார். சாதியத்தை பற்றிய முக்கியமான உரையாடலை மாமன்னனின் வழி மீண்டும் சமூக நீதியின் தலைநகரான தமிழ்நாடு முன்னெடுத்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories