சினிமா

தமிழ் சூழலை நேர்த்தியாக வடித்திருக்கும் மலையாள படம்.. மம்முட்டியின் 'நண்பகல் நேரத்து மயக்கம்' ஒரு பார்வை!

மலையாளத்தில் இருந்து மற்றொரு படம். இம்முறை யதார்த்தம் என்பதை தாண்டி வேறு ஒரு களத்தில் பயணிக்கும் படம். நண்பகல் நேரத்து மயக்கம்!

தமிழ் சூழலை நேர்த்தியாக வடித்திருக்கும் மலையாள படம்.. மம்முட்டியின் 'நண்பகல் நேரத்து மயக்கம்' ஒரு பார்வை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

லிஜோ ஜோஸ் பெலிசேரி மலையாள சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குநராக இருப்பவர். அவருடைய படங்களை ‘அங்கமாலி டைரிஸ்’-க்கு முன், பின் என இரு வகைகளாக பிரிக்கலாம். அத்தகைய பெருமாற்றத்தை அவர் சமீபத்தில் எடுத்து வரும் கதைத் தேர்வுகளும் களங்களும் கொண்டிருக்கின்றன. அங்கமாலி டைரிஸ் படத்துக்கு பிறகு அவர் எடுத்த இ.மே.யோ, ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற படங்கள் யாவும் obscure வகையை சேர்ந்த படைப்புகளாக கொள்ளலாம். இருண்மை படைப்புகள் என்று கூட சொல்லலாம்.

நேரடியாக ஒரு கதையை எளிமையாக புரிவது போல் எடுக்காமல் ஒரு கதையைக் கொண்டு பல படிமங்களை கோர்த்து பல தத்துவ விசாரங்களை ஆராயும் தன்மை கொண்டவற்றையே இருண்மை படைப்புகள் என்கிறோம். குறிப்பாக லிஜோ ஜோஸ் பெலிசேரியின் சமீபத்திய படைப்புகள் மனிதப் பரிணாமத்தில் ஆன்மத் தேடலை கொள்ளும் படைப்புகளாக இருக்கின்றன. ஓர் எளிய சினிமா ரசிகனுக்கு பெரும்பாலும் அவரின் படங்கள் மலைப்பையும் திகைப்பையும் சோர்வையும் தரவல்லவை.

தமிழ் சூழலை நேர்த்தியாக வடித்திருக்கும் மலையாள படம்.. மம்முட்டியின் 'நண்பகல் நேரத்து மயக்கம்' ஒரு பார்வை!

அவரது இயக்கத்தில் வெளியாகி இருக்கும் சமீபத்திய படம்தான் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’! மலையாள திரையுலகின் உச்சநட்சத்திரமான மம்மூட்டி நாயகனாக நடித்திருக்கிறார்.

மதிய வேளை தூக்கம் என பொருள் படும் இத்தலைப்பு வெறும் தூக்கத்தை மட்டும் கொண்ட கதை அல்ல. தூக்கத்தின் வழி மனித விழுமியங்கள் மாறினால், நம் நம்பிக்கைகளும் சமூகமும் அரசியலும் எப்படி அபத்தமாகின்றன என்பதை இப்படம் காட்டுகிறது.

வேளாங்கண்ணியிலிருந்து கேரளாவுக்கு ஒரு மலையாள நாடகக் குழு வேனில் திரும்பிச் செல்கிறது. வழியில் உண்ணுகின்றனர். ஆண்கள் மது அருந்துகின்றனர். தமிழ்நாட்டை பற்றிய இளக்காரப் பார்வையையும் வெளிப்படுத்துகின்றனர். வேனில் சென்று கொண்டிருக்கும்போது பாடல்கள் ஒலிபரப்பாகின்றன. தமிழ் பாடல்களும் மலையாளப் பாடல்களும் மாறி மாறி ஒலிக்கின்றன. ஒரு கட்டத்தில் வேனில் இருப்பவர்கள் அனைவரும் கண்ணசந்து உறங்குகின்றனர்.

தமிழ் சூழலை நேர்த்தியாக வடித்திருக்கும் மலையாள படம்.. மம்முட்டியின் 'நண்பகல் நேரத்து மயக்கம்' ஒரு பார்வை!

ஒரு கட்டத்தில் டிரைவர் சிறுநீர் கழிக்க வேனை பழனிக்கருகே உள்ள ஒரு கிராமத்துப் பக்கம் நிறுத்துகிறார். டிரைவர் இறங்கியதும் தூக்கம் கலையும் ஜேம்ஸும் (மம்மூட்டி) வேனிலிருந்து இறங்குகிறார். இறங்கியவர் விறுவிறுவென நடந்து செல்கிறார். அருகே உள்ள கிராமத்துக்குள் நுழைகிறார். எல்லா தெருக்களையும் மக்களையும் தாண்டி நடந்து செல்கிறார். ஒரு வீட்டருகே வந்ததும் கொடியில் காயும் லுங்கியை எடுத்து உடை மாற்றுகிறார். அந்த வீட்டுக்குள் செல்கிறார். கண் பார்வை அற்ற பாட்டி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். ஓர் அறைக்குள் நாயகி கட்டிலில் படுத்திருக்க, ஜேம்ஸ் நுழைகிறார். சட்டை மாற்றுகிறார். நாயகி அதிர்ந்து எழுகிறார். அப்பாவும் சத்தம் கேட்டு எழுகிறார். தேநீர் போட முயலுகிறார். பிறகு டிவிஎஸ் 50 வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி ஊருக்குள் செல்கிறார்.

வீட்டில் பாட்டியை தவிர எவருக்கும் என்ன நடந்தது எனப் புரியவில்லை. ஜேம்ஸ்ஸோ அந்த வீடு பரிச்சயமான வீடு போலவே நடந்து கொள்கிறார். வேனில் வந்தவர்கள் ஜேம்ஸ்ஸை தேடி ஊருக்குள் வருகிறார். வந்து பார்த்தால் ஜேம்ஸ், அந்த வீட்டில் வாழ்ந்து இறந்து போன சுந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போகின்றனர்.

தமிழ் சூழலை நேர்த்தியாக வடித்திருக்கும் மலையாள படம்.. மம்முட்டியின் 'நண்பகல் நேரத்து மயக்கம்' ஒரு பார்வை!

ஜேம்ஸ் எப்படி சுந்தரம் ஆனார், ஏன் அப்படி ஆனார், இறுதியில் என்னவாகிறது என்பதுதான் படத்தின் மிச்சக்கதை.

ஒரு மலையாளப் படம் இத்தனை நேர்த்தியாக தமிழ் கிராமத்துச்சூழலை வடித்திருப்பது பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் காட்சி கோணங்கள் யாவும் கண்களில் ஒத்திக் கொள்ளும் ரகம். மம்மூட்டியின் நடிப்பு சொல்லவே வேண்டாம். விமர்சனங்களை மிஞ்சும் நடிப்பு.

மொழி, மாநிலம், பண்பாடு போன்ற அடையாளங்களில் வெறி கொள்ளும் அபத்தத்தை நகைச்சுவையாக சொல்லி தமிழ்மொழியின் அங்கமே மலையாளம் என்கிற மறைபொருளையும் கொடுத்து படத்தை முடிக்கிறார் லிஜோ ஜோஸ்.

அருமையான படம். திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

banner

Related Stories

Related Stories