சினிமா

விறுவிறுப்பான த்ரில்லர் திரைக்கதை.. பரபரப்பான அனுபவத்தை தரும் ‘ஈஷோ’ திரைப்படம்.. #MovieReview!

ஜெயசூர்யா நடிப்பில் குறைவான பட்ஜெட்டில் சமூகப் பிரச்னையைப் பேசும் ‘ஈஷோ’ படம் எப்படி இருக்கிறது ? அலசலாம்.

விறுவிறுப்பான த்ரில்லர் திரைக்கதை.. பரபரப்பான அனுபவத்தை தரும் ‘ஈஷோ’ திரைப்படம்.. #MovieReview!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஈசோ விமர்சனம் :

வணிக வெற்றிக்கு ஸ்டார் நடிகர்களையோ, பிரம்மாண்ட பட்ஜெட்டையோ எதிர்பார்க்காமல் நல்லக் கதைக்களத்தை மட்டும் நம்பி எக்கச்சக்க நல்ல திரைப்படங்களைக் கொடுத்துவருகிறது மலையாள சினிமா.

அந்த வரிசையில், ஜெயசூர்யா நடிப்பில் குறைவான பட்ஜெட்டில் சமூகப் பிரச்னையைப் பேசும் ‘ஈஷோ’ படம் எப்படி இருக்கிறது ? அலசலாம்.

மலையாள நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் சோனி லிவ் ஓடிடியில் நேரடி பிரீமியராக வெளியாகியிருக்கும் மலையாளப் படம் ‘ஈஷோ. மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது.

விறுவிறுப்பான த்ரில்லர் திரைக்கதை.. பரபரப்பான அனுபவத்தை தரும் ‘ஈஷோ’ திரைப்படம்.. #MovieReview!

படத்தின் கதைக்குப் போகலாம்.. இரண்டு மகள்களுக்கு தந்தையான ராமச்சந்திரன் பிள்ளை என்பவர் ஏ.டி.எம் செக்யூரிட்டியாக பணியாற்றிவருபவர். இவர், பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட இரண்டு சிறுமிகளின் வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பார். குற்றம் சாட்டப்பட்டவரின் கையில் அதிகாரம் இருப்பதால், ஏ.டி.எம் செக்யூரிட்டியான ராமச்சந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டப்படும்.

அதன்படி, அடுத்த நாள் காலை சாட்சி சொல்ல நீதிமன்றம் செல்ல விடாமல் தடுக்க, இரவோடு இரவாக கொலை செய்துவிட அடியாளை அனுப்புவார். இரவு நேரத்தில் நைட் வாட்ச்மேனாக ஏ.டி.எம் வாசலில் இருக்கும் ராமச்சந்திரனை ஈஷோ என்பவர் சந்திப்பார். யார் இந்த ஈஷோ? நல்லவனா அல்லது கெட்டவனா? சாட்சி சொல்ல வேண்டிய கொலை வழக்கு என்ன? அடுத்த நாள் காலை நீதிமன்றத்தில் ராமச்சந்திரன் பிள்ளை சாட்சி சொன்னாரா என்பதே கதைக்களம்.

ராமச்சந்திரன் பிள்ளை கேரக்டரில் ஜாஃபர் இடுக்கி மற்றும் ஈஷோ ரோலில் ஜெயசூர்யா நடித்திருக்கிறார்கள். ஒரு நாள் இரவில் படத்தின் முழு கதையும் நடக்கிறது. இரண்டு பேருமே போட்டிப் போட்டு நடித்திருக்கிறார்கள். தளர்ந்த தோற்றத்துடன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜாஃபர் இடுக்கி. அதுபோல, வில்லத்தனத்துடன் பயமுறுத்துகிறார் ஜெயசூர்யா.

விறுவிறுப்பான த்ரில்லர் திரைக்கதை.. பரபரப்பான அனுபவத்தை தரும் ‘ஈஷோ’ திரைப்படம்.. #MovieReview!

Amar Akbar Anthony படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மலையாள நடிகர் Nadirshah. காமெடியை மையமாகக் கொண்டு படங்களை எடுக்கும் இவர், இந்தமுறை கொஞ்சம் சீரியஸான ஒரு கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். சிறுமிகளுக்கு நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமையை மையமாக் கொண்டு த்ரில்லர் ஜானரில் ஒரு கதையைக் கொடுத்திருக்கிறார். பரபரக்கும் த்ரில்லர் திரைக்கதைக்காக சமூகப் பிரச்னையை ஊறுகாயாக தொட்டுக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

ஒரு நாள் இரவில் நடக்கும் கதை, அதற்குள் இருவருக்குள்ளுமான உரையாடல், கொலை செய்யப்படும் திக் திக் நிமிடங்களென த்ரில்லருக்கான அத்தனை அம்சங்களையும் படம் கொண்டுள்ளது. ஒரே லொக்கேஷனுக்குள் முழு கதையையும் நகர்ந்தாலும் எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்டது ப்ளஸ்.

நிறைய இடங்களை எளிதில் கணித்துவிட முடியும். படத்தின் க்ளைமேக்ஸூம் இப்படியாகத்தான் போய் முடியப் போகிறது என்றும் முன்னரே யூகித்துவிடலாம். இருப்பினும், கதைக்குள் பேசப்படும் சமூகப் பிரச்னையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் சிறுமி மட்டுமின்றி, மொத்த குடும்பத்தையும் இந்த சமூகம் எப்படியாக நடத்துகிறது, அதன் விளைவு எப்படியாக மாறுகிறது என்று சொன்ன இடம் சிறப்பான நகர்வு. மற்றபடி, விறுவிறுப்பான திரைக்கதையுடன் பரபரப்பான அனுபவத்தை தரும் த்ரில்லர் படமாக ஈஷோ இருக்கும். பார்க்கலாம். !

banner

Related Stories

Related Stories