சினிமா

தமிழ்ச் சமூக வாழ்க்கையின் திரை இலக்கியமாக மாறிய ‘மல்லிப்பூ’ பாடல்: ‘மல்லிப்பூ’ வெற்றிக்கு இதுதான் காரணம்!

பிழைப்புக்காக வெளியூர் செல்லும் தலைவனை விட்டு தனிமையில் தவிக்கும் தலைவியின் நிலையை காலங்காலமாக தமிழ்ச்சமூகம் பேசி வருகிறது.

தமிழ்ச் சமூக வாழ்க்கையின் திரை இலக்கியமாக மாறிய ‘மல்லிப்பூ’ பாடல்: ‘மல்லிப்பூ’ வெற்றிக்கு இதுதான் காரணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

என்னை விட்டுப் பிரிந்து

போன கணவன் வீடு திரும்பல!"

பிரிவுத்துயர் எல்லா காலங்களிலும் காதலில் ஒரு முக்கியமான அங்கம்.

இருந்தும் இல்லாத ஓர் உணர்வு ஏகாந்தப் பொழுது போல் இருளும் வெளிச்சமும் கலந்த உன்மத்தத்தை அளிக்கும் நிலை அது.

"மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே" அத்தகைய ஏகாந்த மனநிலைக்கான பாடல்!

'மல்லிப்பூ' பாடல் ஒரு டூயட் இல்லை. குத்துப்பாட்டு இல்லை. நாயக அறிமுக பாடலும் இல்லை. நாயகன் அல்லாத வேறு ஒருவர்தான் பாட்டை கேட்கிறார். நாயகனுட்பட்ட பலரும் சேர்ந்து பாடலை ரசிக்கின்றனர். ஆடுகின்றனர். பின் பிரிவுக்காக வருந்துகின்றனர். தமிழ் சினிமா சூழலில் ஒரு பாடல் 'ஹிட்' அடிக்கும் எந்த வரையறைக்கும் உட்படாத பாடல் அது.

பிரிவை காட்சிப்படுத்துவது முதன்முறையும் அல்ல.

சங்க இலக்கிய தலைவன் போருக்கு செல்லும் காலத்தில் தலைவி பசலை நோய்க் கண்டு ஏக்கத்தில் உழலுவாள். கிட்டத்தட்ட 'தளபதி' படத்தில் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' என்கிற பாடலை அந்த பாணியில்தான் மணிரத்னம் வடிவமைத்திருப்பார். அதிலும் போர்க்கள இரவில் தகிக்கும் குளிரில் காதல் விரகத்தை நெருப்பு மூட்டி தணிக்கும் ரஜினியின் காட்சி அகநானூற்றின் உள்ளடக்கத்தை கண்ணில் கொண்டு வந்து நிறுத்தும்.

தமிழ்ச் சமூக வாழ்க்கையின் திரை இலக்கியமாக மாறிய ‘மல்லிப்பூ’ பாடல்: ‘மல்லிப்பூ’ வெற்றிக்கு இதுதான் காரணம்!

பிழைப்புக்காக வெளியூர் செல்லும் தலைவனை விட்டு தனிமையில் தவிக்கும் தலைவியின் நிலையை காலங்காலமாக தமிழ்ச்சமூகம் பேசி வருகிறது. குறிப்பாக மல்லிப்பூ பாடலில் காட்டப்படுகிற வாழ்க்கை ஒரு கொடுஞ்சூழல். வருமானம் ஈட்டவென போகும் உழைக்கும் வர்க்கம் ஓரறைக்குள் அடைந்து வாழ வேண்டிய நிர்பந்தம் கொண்ட சூழல் அது. காதல், ரகசியம், பிரிவு என எந்த மனதும் கொள்ளக் கூடிய சிக்கலை அடுத்த மனது கேட்டுவிடும் அளவுக்கான நெருக்கத்தில் மனிதர்கள் குவித்து வைக்கப்படும் நிலை அது.

அங்கு ஒருவரது மனைவி பாடும் காதல் பாடல்தான் அனைவரும் தங்களின் காதலை கற்பனை செய்து கொள்வதற்கான பாடலாக இருக்கும். பாடலின் இறுதி வரிகளில் நிரம்பியிருக்கும் பிரிவுத்துயர், மொத்த கூட்டத்துக்கும் பரவி, பாடலை பார்க்கும் நம்மையும் பற்றுவதுதான் அப்பாடல் கொண்டிருக்கும் சிறப்புத்தன்மை.

மல்லிப்பூ பாடலில் ஓர் அற்புத சுவாரஸ்யம் இருக்கிறது. பாடலை முதலில் கேட்டபோது பாடகரின் அடர்ந்த குரல் கொள்ளும் சோகம் எவரையும் தாக்கக் கூடியதாக இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. முதல் பல்லவி முடிந்த பிறகு எழும் அந்த நாதஸ்வர இசைதான் பாடலுக்கான உச்சம் எனலாம். அது பாடலின் இசையை ஓர் உயரத்துக்குக் கொண்டு சென்றாலும் வேறு ஏதோவொன்று அதனுள் இருப்பதாக மட்டும் தோன்றிக் கொண்டே இருந்தது.

ஓர் இலக்கியம் என்பது தனியான துண்டான கலையாக இருப்பதால் உருவாவதில்லை. ஒரு சமூகத்தின் நீண்ட மரபில் உள்ள அம்சங்களை நினைவுபடுத்தி அவற்றுடன் வினையாற்றி தொடர்கையில்தான் அது இலக்கியமாகிறது.

தமிழ்ச் சமூக வாழ்க்கையின் திரை இலக்கியமாக மாறிய ‘மல்லிப்பூ’ பாடல்: ‘மல்லிப்பூ’ வெற்றிக்கு இதுதான் காரணம்!

மல்லிப்பூ பாடலின் நாதஸ்வர இசை உச்சம் பெறும் ஒரு தருணத்தில் அந்த மரபை நமக்கு நினைவுபடுத்துகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் தெரிந்தேதான் அந்த நினைவூட்டலை அந்த ராகத்தில் வைக்கிறார்.

நாதஸ்வர இசையை மெய்மறந்து கேட்கையில் சட்டென பொறி தட்டுகிறது. எங்கோ கேட்டது போல் தோன்றுகிறது. மீண்டும் மீண்டும் அந்த இசையை போட்டுக் கேட்கையில் தமிழ்சினிமாவின் நனவில் என்றோ எழுதப்பட்ட பாடல் நிழலாடுவது தெரிகிறது. அந்த நிழலைப் பிடித்து சென்று தோண்டிப் பார்க்கையில் அங்கு அஞ்சலி தேவி கணவன் பிரிந்து துயரைப் பாடிக் கொண்டிருக்கிறார்.

டவுன்பஸ் படத்தில்,

'சிட்டுக்குருவி சிட்டுக்குருவி

சேதி தெரியுமா

என்னை விட்டுப் பிரிந்து

போன கணவன் வீடு திரும்பல'

என்ற பாடல் வரியின் ராகத்தை நாதஸ்வரத்தில் ரஹ்மான் நினைவுபடுத்துகிறார். ஆச்சரியம் அதோடு நின்றுவிடவில்லை. டவுன்பஸ் பாடல் வரிகளை ஒத்த வரிகள்தான் மல்லிப்பூ பாடலையும் நிரப்புகின்றன.

கவிஞர் தாமரையா, ஏ.ஆர்.ரஹ்மானா அல்லது கவுதமா, யார் காரணம் எனத் தெரியவில்லை. ஆனால் டவுன்பஸ் பட பாடலின் ஓர் அழகான ட்ரிப்யூட்டாக இப்பாடல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மல்லிகை, கோலம், வாசல் தெளித்தல், கோழி கூவுதல் என பல தமிழ்ச்சமூக வாழ்க்கைக் குறியீடுகளை வைத்து தலைவனை தேடும் ஏக்கத்தில் தலைவி பாடுவதாக கவிஞர் தாமரை எழுதியிருப்பது இப்பாடலை இன்னும் தமிழ்ச்சமூகத்தின் நெருக்கமாகக் கொண்டு வந்திருக்கிறது.

'மல்லிப்பூ' பாடல் தமிழ்ச்சினிமா சமீபத்தில் கொடுத்திருக்கும் ஆகச்சிறந்த பாடல் என சந்தேகமின்றி சொல்லலாம்.

அகநானூற்று தலைவன் தொடங்கி வெளியூருக்குச் சென்று உழைக்கும் எளியன் வரையிலான திரைகடலோடி திரவியம் தேடும் தமிழ்ச்சமூக வாழ்க்கையின் திரை இலக்கியமாக மாறியுள்ளது 'மல்லிப்பூ' பாடல்.

banner

Related Stories

Related Stories