சினிமா

47 ஆண்டுகளுக்குப் பிறகும் சினிமாவைக் கற்றுக் கொடுக்கும் படம்.. Godfather!

காட்ஃபாதர் எப்போதுமே வியக்க வைக்கும் படம். அலுத்தே போகாத படம். சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் அரசியலுக்கும்!

47 ஆண்டுகளுக்குப் பிறகும் சினிமாவைக் கற்றுக் கொடுக்கும் படம்.. Godfather!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

Godfather திரைப்படம் வெளிவந்து 47 வருடங்கள் ஆகின்றன. சினிமாவுக்கு அது அறிமுகப்படுத்திய மொழி இன்றுமே எவரையும் ஈர்க்கவல்லது. நாம் பேசுகிற நான்லீனியர் படங்களுக்கெல்லாம் தொடக்கம். திரைக்கதை எழுதுகையில் வரும் சீன்களையும் சீக்வென்ஸ்களையும் அழகாக கோர்த்த லாவகம். செயற்கையாகவே ஒரு வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக உருவாக்க முடியும் என முதன்முதலாய் காண்பித்த திரைப்படம்.

பூடகம், குறியீடு என பல உள்ளார்ந்த பொருள்கள் தொடர்ந்து கிடைக்கும் அட்சயம் காட்ஃபாதர் படம் எனக்கு.

47 ஆண்டுகளுக்குப் பிறகும் சினிமாவைக் கற்றுக் கொடுக்கும் படம்.. Godfather!

அப்பாவின் தொழிலையும் வாழ்க்கைமுறையையும் வெறுக்கும் மகன், அந்த வெறுப்புக்கு எதிரான விருப்பை உள்ளார்ந்து கொண்டிருப்பான். அப்பாவின் வாழ்க்கை மீது கொண்ட விருப்பு அவரை போல் தன்னை ஆக்கிட கூடாது என்ற பயத்தையும் கொண்டிருக்கும். அப்பாவின் மேல், அம்மாவின் மேல் நாயகத்தன்மையை கொண்டிருக்கும் குழந்தைகள்தான் நாம் அனைவரும். அது பச்சையான ரசிகனுக்கான மன உணர்வு என நினைத்து, அவ்வுணர்வை வெறுக்கிறோம். புறக்கணிக்கிறோம். பின்னர் ஒரு வாய்ப்பை வாழ்க்கை வழங்கும்போது நாம் அவர்களாக ஆகிறோம். குடும்ப மதிப்பு, உறவு என்ற சமூக பிணைப்புகளின் வழியாக வெறுப்பாக காட்டப்படும் விருப்பு சரியாகக் கடத்தப்படுகிறது. பச்சையான நிலப்பிரபுத்துவ வாரிசுரிமை பாணி.

அப்பாவின் தொழிலுக்கு வரக்கூடாது என பேசிய மைக்கெல், அப்பாவின் ஓய்வுக்கு பிறகு அதே தொழிலுக்கு வருகிறான். உத்தம வில்லன் படத்தில் நடிகர் கமல் மீது வெறுப்பை உமிழும் மகன், கமல் இறக்க போகிறார் என தெரிந்ததும் ‘அப்பாவோட முழுத்திறமையை வெளிப்படுத்தற திரைக்கதை எழுதுறதே தன் ஆசை’ என, தான் கொண்டிருந்த வெறுப்புக்கு அடிப்படையான விருப்பத்தை வெளிப்படுத்தும் வகை.

அங்கிருந்து மைக்கெலுக்கும் அவர் அப்பா டான் கார்லியோனுக்கும் இடையிலான உறவு குடும்ப ரீதியாக எப்படி ஒரு சமூக உற்பத்தி முறையை தொடர்கிறது என தெளிவாகவும் அற்புதமாகவும் காண்பிக்கப்பட்டிருக்கும்.

47 ஆண்டுகளுக்குப் பிறகும் சினிமாவைக் கற்றுக் கொடுக்கும் படம்.. Godfather!

இன்னொரு படிமமாக, படத்தில் வசீகரிக்கும் விஷயம் இருவகை உற்பத்தி முறைகளின் வாழ்க்கைகள் பல வழிகளில் முரண்பிடித்து பின் சேர்ந்து கொள்ளும் நுட்பம்.

மைக்கெல் கல்லூரியெல்லாம் படித்துவிட்டு வரும் ஒரு பக்கா முதலாளித்துவவாதி. அப்பா டான் கார்லியோன் சொந்தக்காலில் நின்று போராடி ஒரு பெரிய நிழலுகத்தையே படைத்து குடும்ப நலனை மட்டுமே முன்னிறுத்தி செயல்படும் பக்கா நிலப்பிரபுத்துவவாதி. மைக்கெலை காதலிக்கும் கே ஆடம்ஸ்ஸும் முதலாளித்துவ நுகர்வு பின்னணியை சேர்ந்தவர். அவருக்கு மைக்கெலின் அப்பாவை பார்க்கையில் மிரட்சிதான் ஏற்படும். ஒரு கொலையை செய்துவிட்டு, தலைமறைவு வாழ்க்கை வாழும் மைக்கெல் காதலியை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அங்கே ஒரு கிராமத்து பெண்ணை மணம் முடித்துக் கொள்வான். நிலப்பிரபுத்துவ கூறு! பின் அவள் இறந்தபிறகு, மீண்டும் கே ஆடம்ஸ்ஸை மணம் முடிக்க ஒப்புதல் கேட்பான். அப்பாவின் நிலப்புரபுத்துவ முறைகளை மறுப்பதாக கூறிவிட்டு பின் அதே தொழிலை முதலாளித்துவ முறை மற்றும் வன்மத்துடன் தொடரும் மைக்கேலை ஏற்க கே ஆடம்ஸ் தயங்குவாள். மைக்கெலை புரிந்துகொள்வதில் அவளுக்கு குழப்பம் இருக்கும்.

முழு விடுதலை அடைந்துவிட்டதாக நினைக்கும் இன்றைய முதலாளித்துவ பெண்கள், குடும்பமும் முதலாளித்துவம் தன்னை ஒடுக்கையில் மட்டும் மிகச்சரியாக கைகோர்ப்பதை பார்க்கையில் நேர்கிற அதே குழப்பம்!

47 ஆண்டுகளுக்குப் பிறகும் சினிமாவைக் கற்றுக் கொடுக்கும் படம்.. Godfather!

முதலாளித்துவ கார்ப்பரெட் சிந்தனையும் முறைகளும் வெகு அழகாக நிலப்பிரபுத்துவ நிறுவனங்கள் மற்றும் சிந்தனைகளுடன் கைகோர்க்கும் இயல்பின் வார்ப்புதான் மைக்கெல்.

Don Corleone-ஐ பற்றி பேசுகையில் கூட்டாளிகளிலிருந்து எதிரிகள் வரை, ‘He was a reasonable man' என கூறுவார்கள். அதாவது உணர்வு, வாக்கு, நம்பிக்கை போன்ற விஷயங்களை வைத்துக் கொண்டு தனக்கான வேலைகளை சாதித்துக் கொள்ளும் தன்மை. நிலப்பிரபுத்துவம்! எவரையும் பொருட்படுத்தாமல் தன் குற்றங்களுக்கான நியாயங்களை எப்போதும் கொடுத்துவிட முடியுமென்கிற முதலாளித்துவ அறிவு மமதை மைக்கெலிடம் நிரம்பியிருக்கும்! ஆனால் அந்த அறிவு டான் கார்லியோன் கட்டிய மொத்த சாம்ராஜ்யத்தையும் எப்படி நாசமாக்குகிறது என்பதுதான் மொத்த காட்ஃபாதர் படங்களின் அடிப்படையும்! அதாவது முதலாளித்துவத்தின் அகங்காரம் எப்படி வீழ்கிறது என்பதே காட்ஃபாதர் படங்கள் முன்னிறுத்தும் முக்கியமான விஷயம்.

வந்தேறிகள் கொள்ளும் பாதுகாப்பின்மை எப்படி அவர்கள் அதிகாரத்துக்கு இருத்திக்கொள்ள வேகமாக ஓட வைக்கிறது என்ற அரசியலெல்லாம் இருக்கும். இது போல பல விஷயங்கள் இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். மார்லன் பிராண்டோ, அல் பெசினோ போன்ற பிரம்மாண்டங்களின் நடிப்பு வேறு.

காட்ஃபாதர் எப்போதுமே வியக்க வைக்கும் படம். அலுத்தே போகாத படம். சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் அரசியலுக்கும்!

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் படம் இருக்கிறது

banner

Related Stories

Related Stories