சினிமா

Life is beautiful.. போரிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, தப்பியோடுதல் வீரம் அல்ல!

தப்பியோடுதல் (Escapism) போரிலும் சரி வாழ்க்கையிலும் சரி வீரம் அல்ல!

Life is beautiful.. போரிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, தப்பியோடுதல் வீரம் அல்ல!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

Life is beautiful என ஒரு படம்!

ஹிட்லரால் முகாமில் ஒரு யூத குடும்பம் அடைத்து வைக்கப்படுகிறது. குடும்பத் தலைவன் மனைவியுடன் தொடர்பு கொள்ள ஒலிபெருக்கியில் பிடித்த பாடலை போட்டுவிடுவான். சிப்பாய்கள் தேடுகையில் ஒளிந்து கொள்வான். கடுமையான உழைப்புச் சுரண்டல் மறுபக்கம் நேரும்.

அவனுடைய மகனும் முகாமில் அடைக்கப்பட்டிருப்பான். ஆனால் அவன் இருத்தப்பட்டிருக்கும் வரலாற்றுச் சுமை நிறைந்த காலத்தின் கோரம் தெரிந்தால் துவண்டு விடுவான் என தகப்பன் அங்கு நடப்பவை எல்லாமும் ஒரு விளையாட்டு எனவே மகனுக்குச் சொல்லி வருவான்.

இறுதியில் நாயகன் செய்யும் மீறல்களை சிப்பாய்கள் கண்டுபிடித்து விடுவார்கள். உடனே மகனை யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்று தபால் பெட்டி போன்ற சிறு பெட்டிக்குள் அடைத்து 'இதுவும் விளையாட்டுதான். ஒரு பீரங்கி வண்டி வரும் வரை வெளியே வரக் கூடாது. வந்தால் பாயிண்டுகள் போய் விடும்' என நாயகன் சொல்ல மகனும் ஒப்புக் கொள்கிறான். அந்தப் பெட்டியில் சிறு இடைவெளி இருக்கும். அதன் வழியாக வெளியே நடப்பதை மகன் பார்த்துக் கொண்டிருப்பான்.

Life is beautiful.. போரிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, தப்பியோடுதல் வீரம் அல்ல!

வெளியே சிப்பாய்கள் தகப்பனை பிடித்து விடுவார்கள். அவனைக் கொல்வதற்கு அழைத்துச் செல்வார்கள். மகன் இருக்கும் பெட்டியைக் கடக்கும்போது காமெடியாக காலை தூக்கி வைத்து நடந்து செல்வான் நாயகன். மகன் பெட்டிக்குள்ளிருந்து சிரிப்பான். பெட்டியைக் கடந்ததும் ஒரு மறைவுக்கு தகப்பனை சிப்பாய்கள் அழைத்துச் செல்வர். தோட்டாக்கள் சத்தம் கேட்கும். அவ்வளவுதான். அந்த தகப்பனின் மரணம் கூட காண்பிக்கப்படாது.

முகாம் வாழ்க்கை என்றப் பெருந்துயருக்கு முன் தகப்பனின் மரணம் ஒரு சிறு விஷயம்தான் என அச்சம்பவம் கடக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் வாழ்க்கை இதுதான். கொடுந்துயரங்களை கொண்டதே வாழ்க்கை. அத்தகைய வாழ்க்கை அழகானது என்பதே துயரங்களிலேயே ஆகச் சிறந்த துயரம்.

வாழ்க்கை வெற்றிகளால் நிரப்பப்பட்டது அல்ல. பல தோல்விகளும் சில வெற்றிகளும் கொண்டதே வாழ்க்கை. அதற்கு ஒருவர் தயாராக வேண்டுமெனில் வெற்றி பெறுவதை மட்டுமே இலக்காக அவர் தயார் செய்யப்படுத்தப்படக் கூடாது. அப்படி செய்யப்பட்டால் வாழ்க்கை அவரைப் புரட்டி எடுத்து விடும். தோல்வியையும் துயரங்களையும் சிரித்தபடி எதிர்கொள்வேன் என்பதோ 'சிரிப்பு தெரபி' வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் என்பதெல்லாம் அபத்தங்கள்.

Life is beautiful.. போரிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, தப்பியோடுதல் வீரம் அல்ல!

துயரத்தையும் தோல்வியையும் எதிர்கொள்ள வேண்டும். அவற்றை உள்வாங்க வேண்டும். அவற்றை முழுமையாக கிரகிக்க வேண்டும். ஆனால் அவை நம்மை பாதிக்கவிட்டுவிடக் கூடாது. அதுவே சூட்சுமம்.

தோல்வியையும் துயரத்தையும் எதிர்கொள்ளாமல், கையாளாமல் எதிர்திசையில் ஓடிக் கொண்டே இருப்பதும் 'வாழ்க்கை கொண்டாட்டமானது, கொண்டாட்டமானது' என ஜெபித்துக் கொண்டே இருப்பதும் உண்மையைப் பார்க்க மறுத்து ஓடி ஒளிதல் (escapism) மட்டும்தான். அது உதவாது ஏன் தெரியுமா?

மனதை இயக்கும் மூளை வேற லெவல் கில்லாடி!

நாம் ஏன் ஓடுகிறோம், கொண்டாடுகிறோம், சிரிக்கிறோம், மறுக்கிறோம் என்பன எல்லாவற்றையும் நாம் அறிவதற்கு முன்னமே மூளை அறிந்திருக்கும். 'ஏ நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா' என உங்கள் மனதின் ஒரு மூலையில் ஒரு புதைகுழியை உருவாக்கிக் கொண்டே இருக்கும். மூளைக்கும் அது எதிர்கொள்ள வேண்டிய உணர்வுகளுக்கும் சவால் விடுக்காமல், அந்த உணர்வுகளை ஏற்பதே சரியாக இருக்க முடியும். ஆரோக்கியமான வழியும் ஆகும்.

புத்தர் அப்படித்தான் உருவாகிறார். 'உலகின் துன்பம் எல்லாவற்றுக்கும் பற்றுதான் காரணம்' என அவர் சொன்னதற்கு பின்னணி அவர் அத்தகைய பற்றின் சுமையை உணர்ந்தார். அனுபவித்தார். விலகும் முயற்சிகள் பல எடுத்தார். தோற்றார். உறவு இருந்தாலும் பற்றற்று எப்படி இருக்க முடியுமென பரீட்சித்தார். முடிவில் பற்றறுத்தலின் தேவையைக் கண்டுபிடித்தார்.

தினமும் காலை கைகொட்டி சிரிக்கும் therapy-யை புத்தர் செய்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என யோசித்துப் பாருங்கள்!

எனவே விஷயம் ஒன்றுதான். வாழ்க்கையின் எதிலிருந்தும் நீங்கள் தப்பியோடலாம். ஆனால் வாழ்க்கையிடமிருந்து தப்பியோட முடியாது.

வாழ்க்கை அதிக தோல்விகளாலானது.

பூர்த்தியாகாத ஆசைகள் நிறைந்தது. நரிகளும் ஓநாய்களும் வசிக்கும் இடம். பொருளாதாரக் கயிறுகள் கழுத்தை இருக்கும். பொருளாதாரம் ஈட்டும் சக்கரத்துக்குள் உழன்று உண்மையான மனிதர்களை போலிகளுக்காக அது இழக்கச் செய்யும். போலிகளை கண்டுணர்ந்து மனக்கோப்பையில் தனிமை தளும்பி உங்களை அதில் குதிக்கக் கேட்கும்.

Life is beautiful.. போரிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, தப்பியோடுதல் வீரம் அல்ல!

தப்பியோடுதல் (Escapism) போரிலும் சரி வாழ்க்கையிலும் சரி வீரம் அல்ல!

வெற்றி என்பது தொடர் தோல்விகளை திடமாக நின்று எதிர்கொண்டு, அதை உங்களுக்குள் புக விட்டு, அதில் நீங்கள் பங்குபெறாமல் தியானமாக அதை வெறுமனே கவனித்து, புன்னகையுடன் கடந்து செல்வதே!

சிரிப்புகள் வலிகளில் கருக் கொள்பவை. நாம் சூடும் பூக்கள் கொய்யப்பட்டவை!

    banner

    Related Stories

    Related Stories