சினிமா

’விராட பர்வம்’.. காதல் படமா? அல்லது இடதுசாரி இயக்க வரலாற்று படமா?: சினிமா விமர்சனம்!

காதல் படங்களுக்கே உரிய தொய்வு படத்தில் இல்லை. அரசு - நக்சலைட் முரணியக்கம் திரைக்கதையை விறுவிறுப்பாகி விடுகிறது.

’விராட பர்வம்’.. காதல் படமா? அல்லது இடதுசாரி இயக்க வரலாற்று படமா?: சினிமா விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

விராடப் பர்வம் என ஒரு தெலுங்குப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. அப்பட வெளியீடுக்கு முன்பு வெளியான ட்ரெயிலரே நல்ல வரவேற்பு பெற்றது. நக்சலைட்டுகளின் போராட்டத்தை களமாகக் கொண்ட கதை என்பதாலும் ஆந்திராவில் இடதுசாரி இயக்க வரலாறு ஒன்று இருப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ட்ரெய்லர் எகிற வைத்தது.

கதை என்ன?

மிக எளிய மீரா கதைதான். நாயகனை காதலிக்க விரும்பித் தேடிச் செல்லும் நாயகியே பிரதானப் பாத்திரம். நாயகன் நக்சலைட். கிட்டத்தட்ட 'உயிரே' படத்தின் ரிவர்ஸ் வெர்ஷன். நாயகனை மானசீகமாக காதலிக்கும் நாயகி அவனைத் தேடிச் செல்கிறாள். தேடலில் அரசியல்படுகிறாள். காதல், தாய்ப்பாசம் எல்லாம் பூர்ஷ்வா கட்டுமானம் என்கிறான் நாயகன். ஆனால் ஒரு தளர்ந்த கணத்தில் தாயின் பாசத்துக்காக கண்ணீர் கசிகிறான். நாயகியின் காதல் வெப்பத்தில் தன்னை மறக்கிறான். பிறகு மீண்டும் தூண்டப்பட்டு இறுக்கம் கொள்கிறான்.

’விராட பர்வம்’.. காதல் படமா? அல்லது இடதுசாரி இயக்க வரலாற்று படமா?: சினிமா விமர்சனம்!

திரைக்கதை எப்படி?

ஒரு லட்சியவாத நாயகனைத் தேடித் சென்று நாயகி காதலிக்கும் கதை என்பதால் அபத்தமான காதல் வழிசல்களுக்கு அதிக வாய்ப்புகள் கொண்ட திரைக்கதை. எனினும் பெரியளவில் அபத்தங்கள் நேரவில்லை. நாயகி காதலுணர்வு பெறுவது சிகப்பு சிந்தனையாளர்களின் எழுத்துகளால் என்பதால் செயற்கை அதீதம் மட்டுப்படுத்தப்பட்டதோ என்னவோ! மேலும் நாயகனைத் தேடும் படலத்தினூடாக இடதுசாரிக் குழு இயங்கும் முறையை அறிந்து கொள்வதும் திரைக்கதையில் நடக்கிறது. காவல்துறை மற்றும் அரசின் ஒடுக்குமுறையும் அவற்றோடு சேர்ந்து விரிகிறது. காவலர்களுக்குத் தெரியக் கூடாதென நடு ராத்திரியில் தையல் மிஷினில் ரகசியமாக கொடியைத் தைத்துக் கொடுக்கும் எளியரின் வீரமும் காதல் தேடலைத் தாண்டி நம்மை நிரப்புகிறது.

காதல் படங்களுக்கே உரிய தொய்வு படத்தில் இல்லை. அரசு - நக்சலைட் முரணியக்கம் திரைக்கதையை விறுவிறுப்பாகி விடுகிறது.

’விராட பர்வம்’.. காதல் படமா? அல்லது இடதுசாரி இயக்க வரலாற்று படமா?: சினிமா விமர்சனம்!

ஆக்கம்:

கதை கொண்டிருக்கும் இடதுசாரிய அரசியலுக்குள் நாம் கலந்து விட்டால் பல அற்புதத் தருணங்களைப் படம் அளிக்கிறது. பல்லாண்டுகளாக காணாத தாயைக் காணுகையில் வீரவணக்கக் கவிதையை தாய்க்கு நாயகன் வாசித்துக் காட்டுவது அத்தகையவோர் தருணம். அரசியலில் கலக்காவிட்டாலும் பிரச்சினை இல்லை, நாயகியின் பாத்திரத்துடன் நாம் இணைந்து விடுகிறோம். அவளுக்கும் இடதுசாரியம் தெரியாது. நமக்கும் இடதுசாரியம் தெரியாது. இருவரின் நோக்கமும் நாயகனை அடையும் புள்ளியில் இணைந்து விடும். நாயகி நாயகனைத் தேடும் வழியில் அரசியல்படுவது போல நாமும் அரசியல்படுகிறோம்.

இயக்கம்:

இயக்குநர் இடதுசாரியத்தின் மீது சேற்றை வாரி இறைத்திருக்கக் கூடிய களம். ஆனால் இறைக்கவில்லை. அவர்களது அரசியலின் நியாயத்தை தெளிவாக முன்வைக்கிறார். அரசின் பாசாங்கை அம்பலமாக்குகிறார். ஒரே ஒரு நியாயமான விமர்சனத்தை இடதுசாரிகள் மீது வைக்கிறார். ஆனால் அந்த விமர்சனத்தைக் கொண்டு அவர் இடதுசாரியத்தை வெட்டி வீழ்த்திவிடவில்லை.

’விராட பர்வம்’.. காதல் படமா? அல்லது இடதுசாரி இயக்க வரலாற்று படமா?: சினிமா விமர்சனம்!

படத்தைத் தாங்கிப் பிடிப்பது சாய் பல்லவி மட்டும்தான். நடிப்பு, நடனம், கோபம் என பின்னுவது மட்டுமின்றி chase காட்சியில் என்ன வேகத்தில் ஓடுகிறார்.. அடேங்கப்பா!

விராடப் பர்வம், காதலும் மனிதமும் இணையும் பருவம்

banner

Related Stories

Related Stories