சினிமா

புரையோடிப் போன சாதியமும்.. ருசியான கறியும்: ’சேத்துமான்’ படத்தின் கதை என்ன?

ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியான 'சேத்துமான்' அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

புரையோடிப் போன சாதியமும்.. ருசியான கறியும்: ’சேத்துமான்’ படத்தின் கதை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஓ.டி.டி தளங்களின் வரவு நல்லப் படங்களின் வரவைக் கூட்டியிருக்கிறது என்றால் அது மிகையில்லை. திரையரங்குகளில் வெளியாகி கமர்ஷியல் படங்களுடன் போட்டி போட வேண்டியக் கட்டாயத்தில் நிறுத்தப்பட்டு ஓடாமல் தோற்று வீழும் சோகமான காட்சிகளையே கடந்த காலங்களில் கண்டிருக்கிறோம். ஆனால் ஓ.டி.டி தளங்கள் இத்தகைய நேர்மையான முயற்சிகளுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான மரியாதையைப் பெற்றுத் தருகின்றன.

சமீபத்தில் அதே போல் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியாகி பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் படம்தான் 'சேத்துமான்'.

கோயம்புத்தூர் அருகே ஓர் ஊரில் வசிப்பவர் பூச்சியப்பன். பட்டியல் சாதியைச் சேர்ந்தவர். ஊருக்குள் ஒருமுறை ஆதிக்கச் சாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் மகனையும் மருமகளையும் இழந்தவர். பேரன் மட்டுமே மிச்சம். பேரனைப் படிக்க வைத்து ஆளாக்கி விட வேண்டுமென்பதே அவருக்கு இருக்கும் ஒரே லட்சியம்.

பூச்சியப்பன் கூடை முடைந்து விற்கிறார். எனினும் ஊருக்கு பெரிய மனிதரான வெள்ளையன் ஏவும் வேலைகளையும் செய்யும் நிலையில்தான் அவரின் சமூக நிலை இருக்கிறது. வெள்ளையனுக்கும் அவனது பங்காளிக்கும் நிலத்தகராறு. எப்போதுமே முட்டிக் கொள்ளுமளவு பகை கொண்டவர்கள்.

ஒருநாள் வெள்ளையனுக்கு விநோத ஆசை. பன்றிக்கறி சாப்பிட விரும்புகிறார். ஆனால் நண்பர்கள் முகம் சுளிக்கின்றனர். ஒரு பன்றியை அடித்து அதை கூறுகளாக்கி விற்க நண்பர்கள் தேடுகிறார் வெள்ளையன். யாரும் முன் வரவில்லை. ஏனெனில் பன்றிக்கறி பட்டியல் சாதியினர் உணவு. ஆனாலும் வெள்ளையன் விடவில்லை. தொடர்ந்து முயன்று நண்பர்களை சேர்த்து விடுகிறான். பூச்சியப்பன் துணையுடன் பன்றியையும் வாங்கி விடுகிறான். விருந்துக்கு நாள் குறிக்கப்படுகிறது.

புரையோடிப் போன சாதியமும்.. ருசியான கறியும்: ’சேத்துமான்’ படத்தின் கதை என்ன?

பூச்சியப்பனின் பேரனும் விருந்து சமைக்க உடன் வர விரும்பி விடுமுறை எடுத்து வருகிறான். பன்றியை கொல்கிறார்கள். மஞ்சள் பூசுகிறார்கள். பிறகு கறித் துண்டுகளாக பன்றி வெட்டப்படுகிறது. பன்றிக்கறி சமைக்கப்படுகிறது.

விருந்தில் என்னவாகிறது என்பது மிச்சக் கதை.

நம் சமூகத்தில் சாதியின் ஊடாட்டம் முன்பைப் போல் பெரியளவுக்கு வெளிப்படுவதில்லை எனினும் அதன் இருப்பு தெரியும் தருணங்கள் எண்ணற்றவை அன்றாடம் நேர்ந்து கொண்டே இருக்கின்றன. பன்றிக்கறி பட்டியல் சாதியினர் உண்ணும் ஒரே காரணத்தால் பொதுச் சமூகத்தால் நிராகரிக்கப்படும் உணவு வகை. ஆனால் அதன் ருசியில் மயங்கிய ஆதிக்க சாதியினன் ஒருவன் அதை உண்ணுவதற்கு முயற்சி எடுக்கும் போது இந்தச் சமூகம் எத்தனை இலகுவாக அதை எதிர்கொள்கிறது என்பதையும் அம்முயற்சி நிறைவேறும்போதும் அது எப்படியான சிக்கலாக மாறும் என்பதையும் இப்படம் அற்புதமாகக் காட்டியிருக்கிறது.

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'வறுகறி' என்னும் சிறுகதையைத்தான் படமாக ஆக்கியிருக்கிறார்கள். எழுத்து திரைக்கு நன்றாகவே இடம்பெயர்த்தப்பட்டிருக்கிறது.

பா.ரஞ்சித் தயாரிப்பில் தமிழ் இயக்கியிருக்கும் சேத்துமான் படம் சோனி லைவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி இருக்கிறது. பார்த்துவிடுங்கள்.

banner

Related Stories

Related Stories