சினிமா

கேவலமான பாத்திரத்தில் நடித்திருக்கும் கேரள சூப்பர்ஸ்டார்.. ‘புழு’ படத்தின் கதை என்ன?

ஒரே பாத்திரம். மிகக் கேவலமான ஒரு பாத்திரம். கொண்டாடப்படும் 'மாஸான’ கெட்டவனாகக் கூட அல்ல.

கேவலமான பாத்திரத்தில் நடித்திருக்கும் கேரள சூப்பர்ஸ்டார்.. ‘புழு’ படத்தின் கதை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

மலையாள சினிமா உலகம் பொறாமைப்படத்தக்க பல விஷயங்களைக் கொண்டவோர் உலகம். கதைத்தன்மையில் தொடங்கி, களம், நடிப்பு எனப் பல விஷயங்களில் கோலோச்சும் திரையுலகம் மலையாள சினிமா உலகம் ஆகும். அது கொண்டிருக்கும் பெருமைகளில் மற்றுமொன்றாக வந்து சேர்ந்திருக்கிறது ‘புழு’ திரைப்படம்!

கேரள சூப்பர்ஸ்டாராக அறியப்படும் மம்முட்டி படத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக அல்ல, வில்லனாக நடித்திருக்கிறார். அதாவது கெட்டவனாக. இரட்டை வேடங்களாக நடித்து ஒரு பாத்திரம் நல்லவனாகவும் இன்னொரு பாத்திரம் கெட்டவனாகவும் நடிக்கும் பாணியில் அல்ல. ஒரே பாத்திரம். மிகக் கேவலமான ஒரு பாத்திரம். கொண்டாடப்படும் 'மாஸான’ கெட்டவனாகக் கூட அல்ல. குறிப்பாக சாதியத்தில் ஊறிப் போன ஒரு பிற்போக்குப் பாத்திரத்தில் மம்முட்டி நடித்திருப்பதுதான் மலையாள சினிமாவின் அற்புதங்கள் என்று சொன்னோமே, அவற்றில் ஒன்றாக இப்படத்தை ஆக்கியிருக்கிறது.

மம்முட்டியின் நடிப்பு எப்படி இருக்கிறது எனப் பேசும் கட்டத்தை எல்லாம் பல வருடங்களுக்கு முன்பே அவர் தாண்டி விட்டார். அநேகமாக இப்படம் அவருக்கு ஒரு தேசிய விருது கொடுக்க வேண்டும். ஆனால் கொடுக்கப்படுமா எனத் தெரியவில்லை. ஏனெனில் படம் கிழித்திருப்பது சாதியத்தை. மம்முட்டி நடித்திருப்பது சாதி போற்றும் ஒரு பார்ப்பனராக.

மகனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முன்னாள் போலிஸ் மம்முட்டி. மனைவி இறந்துவிட்டார். பிறருடன் மகன் பழகுவதை கண்டிக்கிறார். பார்ப்பன வாழ்க்கை முறையான ‘கலப்பின்மையை’ போதித்து வளர்க்கிறார். அவரது தங்கை ஒரு பட்டியல் சாதி நாடகவியலாளரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதனால் மம்முட்டி தங்கையுடன் பேசுவதில்லை. தூர வைத்துவிட்டார். வீடு வேறெங்கும் கிடைக்காமல், மம்முட்டி தங்கியிருக்கும் குடியிருப்பிலேயே ஒரு வீட்டுக்கு தங்க வருகிறது தங்கையின் குடும்பம்.

கேவலமான பாத்திரத்தில் நடித்திருக்கும் கேரள சூப்பர்ஸ்டார்.. ‘புழு’ படத்தின் கதை என்ன?

கலப்பின்மை போற்றும் வைதிக மரபு மம்முட்டி, கலப்புத் திருமணம் செய்துள்ள தங்கை, அப்பாவின் கட்டுப்பாடு பிடிக்காத மகன், இவற்றுக்கிடையில் ஒரு நிலத்தகராறு மம்முட்டிக்கு உண்டு. தன்னை யாரோ கொல்ல முயலுவதாக மம்முட்டி நம்புகிறார். இறுதியில் என்னவாகிறது என்பதை Sonyliv-ல் காண்க.

மம்முட்டி பாத்திரத்தின் தங்கையாக பார்வதி நடித்திருக்கிறார். அவர் கலப்புத் திருமணம் செய்து கொள்பவராக அப்புண்ணி சசி நடித்திருக்கிறார். மூவருக்கும் இடையேயான அகச்சிக்கல்கள் அவர்தம் அற்புதமான அலட்டலற்ற நடிப்புகளின் வழியாக வெளிப்படுத்துவதைக் காண்பதே அலாதி அனுபவமாக இருக்கிறது.

பொதுவாக மலையாளப் படத் திரைக்கதைகளில் ஒரு நிதானம் இருக்குமென்றாலும் இப்படத்தின் நிதானம் பழைய மலையாள சினிமாக்களின் கதை சொல்லல் பாணியைக் கொண்டிருக்கிறது. வெகு நிதானமாக சாதிய அடுக்குமுறையின் அழுத்தம் நமக்குள் இறக்கப்படுகிறது. அதன் நிதானம்தாம் சாதியின் கோரமாக புரிகிறது. சமூக யதார்த்தம் என நம்மை அறைகிறது.

படத்தின் முடிவு பலருக்கு புரியவில்லை என்றும் தட்டையாக இருக்கிறது என்றும் எதிர்பாராத திசையில் முடிந்ததைப் போலிருக்கிறது என்றும் பலவித விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. அதற்கான விடை படத்தில் காண்பிக்கப்படும் மேடை நாடகமான ‘தட்சகன்’ புராணக் கதையில் இருக்கிறது.

கேவலமான பாத்திரத்தில் நடித்திருக்கும் கேரள சூப்பர்ஸ்டார்.. ‘புழு’ படத்தின் கதை என்ன?

தட்சகன் என்பவன் நாகர்களின் அரசன். அவன் வாழ்ந்து வந்த வனத்தை அர்ஜுனன் கண்ணனின் வேண்டுகோளுக்கு ஏற்ப அழிக்கிறான். தட்சகன் மட்டும் தப்பி விடுகிறான். வம்சத்தையே அழித்த அர்ஜுனனின் வம்சத்தை வஞ்சம் தீர்க்க முடிவு செய்கிறான் தட்சகன். அர்ஜுனனின் பேரனான பரீட்சித்து மகராஜா ஒருமுறை வேட்டைக்கு சென்ற நேரத்தில், தண்ணீர் கேட்டு செவிமெடுக்காமல் தவத்தில் இருந்த ஒரு துறவியின் மீது கோபத்தில் செத்தப் பாம்பைப் போட்டு விடுகிறான். அந்தக் கோபத்தில் அத்துறவியின் மகன் சாபமிடுகிறார். அடுத்த ஏழு நாட்களில் ஒரு பாம்பு தீண்டி பரீட்சித்து சாவான் என்பதே சாபம்.

சாபத்தைக் கேள்விப்பட்டதும் பயத்தில் பதவி விலகி மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு ஓடுகிறான் பரீட்சித்து. நாகங்கள், பாம்புகள் இல்லாத இடத்தை பூமியில் தேடுகிறான். யாரையும் நம்ப மறுக்கிறான். பார்ப்பனர்களின் பேச்சை மட்டும் நம்புகிறான். ஒரு கட்டத்தில் பாம்புகள் வர முடியாத இடமென கடலுக்கு நடுவே சென்று ஒளிந்து கொள்கிறான். அங்கு அவனுக்கு பார்ப்பனர்கள் மட்டுமே துணை இருக்கின்றனர். 7ம் நாள் வருகிறது. அது வரை எந்தப் பிரச்சினையும் பரீட்சித்துக்கு ஏற்படவில்லை. உணவாக பழம் கொடுக்கப்படுகிறது. அந்தப் பழத்துக்குள் ஒளிந்திருக்கும் சிறு புழு அவனைக் கடித்து விஷம் கக்குகிறது. பரீட்சித்து உயிரிழக்கிறான். அந்தப் புழுதான் தட்சகன்!

இந்தப் புராணக் கதையைத் தழுவிதான் ‘புழு’ படம் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தினூடாகதான் சாதியம் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, படத்தின் பிரதானக் களம் சாதியம் அல்ல. சாதியத்தை பிரதானக் களமாக நினைத்துப் பார்ப்பதால்தான் முடிவில் சுரத்து தெரியாமல் இருக்கிறது. புராணக் கதை தெரிந்து படம் பார்த்தால், புரியக் கூடும்.

மம்முட்டிதான் பரீட்சித்து மகாராஜாவெனில், யார் தட்சகன் என்பதும் அழிக்கப்படும் நாகர் குலம் எது என்பதும் பொருத்திக் கதையைப் புரிந்து கொள்ள முடியும்.

banner

Related Stories

Related Stories