சினிமா

மீண்டும் இணையும் படையப்பன் - நீலாம்பரி.. ரஜினியின் 169வது படத்தில் இவர்களா? #CinemaUpdates

ரஜினியின் 169வது படத்தில் நடிப்பவர்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இணையும் படையப்பன் - நீலாம்பரி.. ரஜினியின் 169வது படத்தில் இவர்களா? #CinemaUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ரஜினியின் 169வது படத்தில் இவர்களா?

கோலமாவு கோகிலா மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். அடுத்து சிவகார்த்திகேயனின் `டாக்டர்', விஜய் நடித்த `பீஸ்ட்' படங்களும் இவர் இயக்கத்தில் வெளியானது. தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குகிறார். ரஜினியின் 169வது படமான இதற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

தற்போது இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், ப்ரியங்கா அருள் மோகன், ஐஸ்வர்யா ராய், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர் என்றும், பீஸ்ட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா தான் இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார் எனவும் இணையத்தில் தகவல்கள் உலவி வருகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேன்ஸ் திரைவிழாவில் `விக்ரம்' டிரெய்லர்!

கமல் நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் `விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ். அதன்படி இப்படத்தின் டிரைலர் வருகிற மே 18-ந் தேதி பிரான்ஸில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட இருக்கிறார்கள். பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் சங்கமிக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு தமிழ் படத்தின் டிரைலர் வெளியிடப்பட உள்ளது இதுவே முதன்முறை.

வெளியானது `சாணிக் காயிதம்' டிரெய்லர்!

`ராக்கி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் அருண் மாதேஷ்வரன். வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீணா ரவி நடித்திருந்த இந்தப் படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அருண் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது `சாணிக் காயிதம்'. இதில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு யாமினி ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்தப் படம் மே 6ம் தேதி அமேஸான் ப்ரைம் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

`ஹாஸ்டல்' படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!

சுமந்த் இயக்கத்தில் அஷோக் செல்வன், ப்ரியா பவானி ஷங்கர், சதீஷ், நாசர், ராமதாஸ், யோகி நடித்திருக்கும் படம் `ஹாஸ்டல்'. மலையாளத்தில் வெளியான Adi Kapyare Kootamani படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது இந்தப் படம். ப்ரவீன் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். ஏற்கெனவே இந்தப் படத்தின் டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளியான நிலையில், தற்போது படத்திலிருந்து ஸ்னீக் பீக் காட்சியை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப் படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது.

துவங்கியது சந்தானத்தின் 15வது பட ஷூட்டிங்!

சந்தானம் நடிப்பில் `ஏஜென்ட் கண்ணாயிரம்', `குலுகுலு' ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அடுத்ததாக பிரபல கன்னட இயக்குநர் பிரஷாந்த் ராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சந்தானம். இது சந்தானம் ஹீரோவாக நடிக்கும் 15வது படம். அர்ஜூன் ஜென்யா இசையமைக்கும் இந்தப் படத்திற்கான இசைப் பணிகள் சமீபத்தில் துவங்கியது.

தற்போது இதற்கான படப்பிடிப்பு பெங்களூரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கிறார். மேலும் இது தமிழ், கன்னடம் என இருமொழிகளில் உருவாகிறது. குறுகிய காலத்தில் ஷூட்டிங்கை முடித்து படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

banner

Related Stories

Related Stories