சினிமா

”விவேக்'ஸ் கிரீன் கலாம்” : விவேக்கின் கனவு திட்டத்தை தொடரும் செல் முருகன் - 5in1_Cinema துளிகள்!

”விவேக்'ஸ் கிரீன் கலாம்” : விவேக்கின் கனவு திட்டத்தை தொடரும் செல் முருகன் - 5in1_Cinema துளிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலக அளவில் 150 கோடி ரூபாயை வசூலித்த பீஸ்ட்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பீஸ்ட்'. கடந்த 13-ம் தேதி இப்படம் வெளியானது. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்த இந்த படத்தில், அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ், உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது. இந்நிலையில், திரைப்படம் வெளியான நான்கு நாளில் உலக அளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

விவேக்கின் கனவு திட்டத்தை தொடரும் செல் முருகன்

மறைந்த நடிகர் சின்னக் கலைவாணர் விவேக் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரின் உருவப் படத்தை தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் அவர்களும் செங்கல்பட்டு எஸ். பி. அரவிந்தன் ஐ. பி.எஸ். அவர்களும் திறந்து வைத்தனர். மேலும் விவேக்கின் கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை தொடரும் வகையில் இன்று விவேக்'ஸ் கிரீன் கலாம் என்ற பெயரில் மரம் நடும் திட்டத்தை விவேக் அவர்களின் நண்பரும் நடிகருமான செல் முருகன் இன்று காலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நண்பர்கள் துணையுடன் தொடங்கினார்.

நீச்சல் போட்டியில் சாதனை படைத்த மாதவன் மகன்

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், சிறுவயது முதல் பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்றுவந்த, 2022-ம் ஆண்டு டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியின், 1500 மீட்டர் பிரிவின் இறுதிப் போட்டியில் 10 பேர் கலந்துகொண்டனர். இதில், இரண்டாவது இடத்தைப் பிடித்து வேதாந்த் மாதவன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

நெஞ்சுக்கு நீதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க உருவாகிவரும் படம் ‘நெஞ்சுக்கு நீதி’. தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப்படத்தைப் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தை மே 20 ஆம் தேதி வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கே 'நெஞ்சுக்கு நீதி' என்பது குறிப்பிடத்தக்கது.

'மாயோன்' வெளியீட்டு தேதி அறிவிப்பு

சிபிராஜ் நடிப்பில் கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாயோன்’. சமீபத்தில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூ’ சான்றிதழ் அளித்திருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘மாயோன்’ திரைப்படம் வருகிற ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இந்த படத்தில் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார், பகவதி பெருமாள், உள்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories