சினிமா

5 சீசன்கள், 448 எபிஸோடுகள்... எப்படி இருக்கிறது Diriliş: Ertuğrul வெப் சீரிஸ்?

உலகம் முழுக்க இன்று கிறித்துவம் தொடங்கி இந்துத்துவம் வரை இஸ்லாமுக்கு எதிரான சித்தரிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், எர்துருள் தொடரின் தேவையை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

5 சீசன்கள், 448 எபிஸோடுகள்... எப்படி இருக்கிறது Diriliş: Ertuğrul வெப் சீரிஸ்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

Diriliş: Ertuğrul

கொரோனா காலத்தில் உருப்படியாக செய்த முக்கியமான விஷயங்களுள் ஒன்று எர்துருள் வெப் சீரிஸ் பார்த்தது.

மொத்தம் ஐந்து சீசன்கள். ஒவ்வொன்றிலும் குறைந்தது 90 எபிசோட்கள். கிட்டத்தட்ட 500 எபிசோட்கள். அதிர்ச்சியாக இருந்தாலும் நம்புங்கள். அதுதான் நெசம்.

இந்து வாழ்வியல், கிறிஸ்துவ வாழ்வியல், பவுத்த வாழ்வியல் போன்றவற்றை திரையில் பார்த்திருக்கிறோம். அதுபோல் இஸ்லாமியர் வாழ்வியலை அசலான அம்மதம் போற்றும் புனித நோக்கங்களுடன் திரையில் பார்த்ததில்லை. இஸ்லாமியர் வாழ்வியலை பிற நாட்டார் எடுத்திருப்பார்கள். உதாரணமாக Anthony Quinn-ன் ஒமர் முக்தார், மெசேஜ் போன்ற படங்களை சொல்லலாம். இஸ்லாமியரே அவற்றை எடுத்திருந்தாலும் ஐரோப்பிய திரைவடிவத்தின் தாக்கம் அவற்றில் இருப்பதை உணர முடியும். ஆனால் எர்துருள் அப்படி இல்லை. துருக்கியை சேர்ந்தவர்களால் ஒரு பெரும் பண்பாட்டு மீட்சிக்கான அடையாளமாக அச்சு அசலான இஸ்லாமிய வாழ்வியல் படமாக்கப்பட்டிருக்கிறது.

செல்ஜுக் சாம்ராஜ்யம் சரிந்து ஓட்டோமான் சாம்ராஜ்யம் தொடங்கப்படுவதற்கு முன்னால் இருந்த சூழல்தான் கதை. கயி என்கிற மேய்ச்சல் பழங்குடி இனத்தில் பிறந்தவர் எர்துருள். அங்கிருந்து தொடங்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்துக்கு அடித்தளமிடும் இடத்துக்கு எப்படிச் செல்கிறார் என்பதே மொத்த சீசன்களின் சாரம். Knight Templar எனப்படும் கிறிஸ்துவத்துக்கான வீரர்கள் ஒரு பக்கமும் மங்கோலியர்கள் ஒரு பக்கமும் இருந்து கொண்டு கான்ஸ்டாண்ட்டினோபிள் வணிகப்பாதைக்கு சண்டையிட்டுக் கொள்ளும் சூழல். அதே வணிகப்பாதையை எர்துருள் இறுதியில் வெல்கிறார்.

5 சீசன்கள், 448 எபிஸோடுகள்... எப்படி இருக்கிறது Diriliş: Ertuğrul வெப் சீரிஸ்?

நம் நாட்டின் தலையெழுத்தாகவும் ஒரு மேய்ச்சல் பழங்குடி வாய்த்திருப்பதால், மேய்ச்சல் பழங்குடி வாழ்வியலை அறிந்துகொள்ளும் ஆர்வம் இயல்பாகவே நமக்குள் படருகிறது. தலைமை பாணி, போர்கள், உடை, உணவு, குழு வாழ்க்கை முறை என பல விஷயங்களை திரையில் கொண்டு வர சிரத்தை எடுத்திருக்கிறார்கள். பெயர் போடும்போதே பேராசிரியர்களின் பெயர்களையும் போடுவது, கதைக்களம் கட்டுவதில் வரலாற்று ரீதியான அக்கறை எந்தளவுக்கு காண்பிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஒரு சாட்சி.

இசை பேரற்புதம். மென்மையாக காதலில் தொடங்கி அரசியலுக்கான வஞ்சம் வரை இசைத் துண்டுகள் அத்தனை அழகு. ஆடையலங்காரம், ஒப்பனை, கலை என எல்லா அம்சங்களும் சிறப்பாக இருந்தன. இன்னொரு அற்புதமான விஷயமும் உண்டு. சாம்ராஜ்யம், போர் என மிகப்பெரும் கதைப்பரப்பை சிக்கனமாக எடுப்பதற்கென சில லாவகங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவையும் ரசிக்கும் விதத்திலேயே இருக்கிறது.

உலகம் முழுக்க இன்று கிறித்துவம் தொடங்கி இந்துத்துவம் வரை இஸ்லாமுக்கு எதிரான சித்தரிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், எர்துருள் தொடரின் தேவையை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த தேவை பூர்த்தி செய்யவும் பட்டிருக்கிறது. உலக நாட்டுத் தலைவர்கள் பலர் எர்துருள் தொடரை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

எர்துருள் போல் அழகாக நாம் கூட சிந்துவெளி, ஆரிய-திராவிடர் வரலாற்று விஷயங்களையும் வேள்பாரி போன்ற புனைவுகளையும் பண்பாட்டு மீட்சி என்கிற நோக்கில் எடுக்கலாம். ஆனால் பொன்னியின் செல்வனைத்தான் எடுக்கிறோம். ஏனெனில் அதிகாரத்திலிருப்போரின் சிந்தனையே இங்கு எல்லாமுமாக இருக்கிறது.

‘எர்துருள்’ தொடர் நெட்பிளிக்ஸ்ஸில் இருக்கிறது. பாருங்கள்.

banner

Related Stories

Related Stories