உலகம்

சிங்கிளாகவே வாழும் தென்கொரிய மக்கள்.. கல்லூரியில் டேட்டிங் பாடம்.. எச்சரிக்கை மணி அடிக்கும் ஆய்வு!

இளைஞர்களிடம் உறவுக்கான தேவையைக் காட்டிலும் அது கொடுக்கும் பயமே அதிகமாக இருக்கிறது.

சிங்கிளாகவே வாழும் தென்கொரிய மக்கள்.. கல்லூரியில் டேட்டிங் பாடம்.. எச்சரிக்கை மணி அடிக்கும் ஆய்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

தென்கொரியாவின் டோங்குக் மற்றும் க்யுங் ஹீ பல்கலைக்கழகங்களிலிருந்து ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. இங்கு உறவுகள், திருமணம் போன்றவை பற்றிய பாடத்திட்டங்கள் இருக்கின்றன.

டோங்குக் பல்கலைக்கழகத்தில் இருக்கும் பாடத்திட்டத்தின் பெயர் ‘திருமணமும் குடும்பமும்’. அந்தப் பாடத்திட்டத்தில் ஒவ்வொரு வருட முடிவிலும் ஒரு மாதத்துக்கு சக மாணவரை ‘Date’ செய்ய வேண்டும். யாரை டேட் செய்ய விரும்புகிறோமோ அந்த சக மாணவரை தேர்ந்தெடுத்து பேராசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். பேராசிரியர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக் கொண்டால் அந்த மாணவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

டோங்குக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் ‘திருமணமும் குடும்பமும்’ என்கிற பாடத்திட்டத்துக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக குறிப்பிடுகிறார்கள். ஆணை பெண்ணையும் பெண்ணை ஆணையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பை அப்பாடத்திட்டம் ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள். சில மாணவர்கள் காதலர்களாக அடுத்த கட்டத்துக்குச் சென்றாலும் பல மாணவர்கள் பட்டப்படிப்பு முடியும் முன்னமே பிரிந்து விடுவதாகவும் சொல்கிறார்கள். முக்கியமாக டேட்டிங் மற்றும் காதலுறவுகளின் வழியாக பக்குவப்பட்ட முதிர்ந்த மனநிலையை மாணவர்கள் அடைகிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள் பேராசிரியர்கள்.

டோங்குக் போலவே பாடத்திட்டம் வைத்திருக்கும் மற்றுமொரு பல்கலைக்கழகம் க்யுங் ஹீ பல்கலைக்கழகம். இங்குள்ள பாடத்திட்டத்துக்கு பெயர் ‘காதலும் திருமணமும்’! டோங்குக் பல்கலைக்கழகத்தில் ‘திருமணமும் குடும்பமும்’ என்ற பாடத்திட்டத்தை உருவாக்கிய பேராசிரியர்தான் க்யுக் ஹீ பல்கலைக்கழகத்திலும் ‘காதலும் திருமணமும்’ என்கிற பாடத்திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.

அவரைப் பொறுத்தவரை ‘டேட்டிங்’ என்பது பாடத்தில் இருப்பதை காட்டிலும் யதார்த்தத்திலும் எதிர்கொள்வதே முக்கியம் என்கிறார். அதனாலேயே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ப ஓர் இணையை ‘டேட்டிங்’குக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை பாடத்திட்டம் முன்வைக்கிறது. தனக்கு ஏற்ற இணைகளை எப்படி கண்டறிவது என்பதை பாடத்திட்டம் கற்றுக் கொடுப்பதாக பேராசிரியர் சொல்கிறார்.

டேட்டிங் என்பது என்ன? டேட்டிங் என்றால் நாம் புரிந்துகொள்ளும் ஆபத்தான விஷயங்கள் ஏதும் இல்லை. ஓர் உயிர் இன்னொரு உயிரை காதலுறவுக்காக கவரும் வழி. அவ்வளவுதான். பெண் மயிலை கவர்வதற்காக ஆண் மயில் தோகை விரித்து ஆடுவது போல இயல்பான விஷயம். ஒரு பெண்ணை ஓர் ஆணுக்கு பிடித்திருக்கிறது எனில், அவளிடம் பேசி, தன்னுடைய காதலை வெளிப்படுத்தி, அவளுடைய எண்ணங்களை தெரிந்துகொண்டு, தன்னுடைய காதலை அவள் ஏற்க வேண்டியதற்கான நியாயமான காரணங்களை சொல்லி, உணர்த்தி, பெண்ணின் மனதையும் வெல்லும் முறையே டேட்டிங் எனப்படுவது. அதாவது காதலுக்கான முதல் படி!

சிங்கிளாகவே வாழும் தென்கொரிய மக்கள்.. கல்லூரியில் டேட்டிங் பாடம்.. எச்சரிக்கை மணி அடிக்கும் ஆய்வு!

காதலை கூட அல்ல, காதலுக்கான முதல் படியையே கற்றுக் கொடுக்கும் நிலையில் தென் கொரிய நாடு இருக்கிறதெனில் அங்கு நிலவும் சமூகச் சிக்கலை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஓரு மயிலுக்கு கூட இருக்கக் கூடிய இயல்பான இணை கவர்தல் முறை, பரிணாமத்தின் உச்சியில் இருக்கும் மனிதனிடம் இல்லை என்பது மனித குலத்தின் விருத்திக்கான எச்சரிக்கை மணி.

2018ம் ஆண்டு தென்கொரிய நாட்டில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இருபதிலிருந்து நாற்பத்து நான்கு வயது வரையிலான தென்கொரிய மக்களில் பெரும்பாலானோர் காதல் உள்ளிட்ட எந்த உறவிலும் இல்லை. 26% ஆண்களும் 32% பெண்கள் மட்டுமே காதல் உறவுகளில் இருந்தனர். டேட்டிங்கில் கூட இல்லாத மிச்ச மக்களில் 51% ஆண்களும் 64% பெண்களும் தனியாகவே வாழ்க்கையை ஓட்டிவிட விரும்புவதாக சொல்லியிருக்கின்றனர்.

ஒவ்வொரு தென் கொரியனும் அமெரிக்கனை விட 250 மணி நேரங்கள் அதிகம் வேலை வாங்கப்படுகிறான். ஜெர்மானியனை விட 424 மணி நேரங்கள் அதிகம் வேலை வாங்கப்படுகிறான். வேலையில்லா திண்டாட்டமும் குறைவான ஊதியமும் யதார்த்த வாழ்விலிருந்து மனிதர்களை விலக்கி வைத்திருக்கிறது. 68% தென் கொரியர்கள் அவர்களின் வேலை வாழ்க்கையையே முக்கியமென கருதுகிறார்கள். 47% மேலான இளைஞர்கள் பொருளாதாரச் சுமைகளைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்.

அரசாங்கமும் குழந்தைப்பேறுக்கான உதவித் திட்டங்கள் பலவற்றை அறிவித்துப் பார்த்தது. திருமணம், உறவு போன்றவற்றால் ஏற்படும் பொருளாதாரச் சுமையை குறைப்பதற்கான பொருளாதார உதவித் திட்டங்களையும் கொண்டு வந்தது. எந்தப் பலனும் இல்லை. இளைஞர்களிடம் உறவுக்கான தேவையைக் காட்டிலும் அது கொடுக்கும் பயமே அதிகமாக இருக்கிறது.

இயல்பான இணை தேடலைக் கூட மறுக்கும் சமூகமாக நாம் மாறிக் கொண்டிருப்பது என்பது அத்தனை எளிய விஷயம் கிடையாது.

Related Stories

Related Stories