வைரல்

பெர்முடா ட்ரையாங்கிளுக்கு பின்னே இருக்கும் மர்மம் என்ன..? - போட்டு உடைத்த புத்தகம்!

பூமியிலிருந்து வேறு கிரகத்துக்கு செல்வதற்கான சுரங்கப்பாதை பெர்முடா முக்கோண கடற்பகுதியில் இருப்பதாக சொல்கிறார்கள்.

பெர்முடா ட்ரையாங்கிளுக்கு பின்னே இருக்கும் மர்மம் என்ன..? - போட்டு உடைத்த புத்தகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஒரு கடல்பகுதி கப்பல்களையும் விமானங்களையும் விழுங்க முடியுமா? முடியும் என்கிறார்கள். உதாரணமாக பெர்முடா ட்ரையாங்கிள் எனப்படும் பெர்முடா முக்கோணக் கடற்பகுதியை சுட்டிக்காட்டுகிறார்கள்.

வெளிக்கிரக ஜீவராசிகளின் இயக்கத்தில் இருக்கும் பகுதி பெர்முடா முக்கோணம் என சொல்லப்படுவதுண்டு. அங்கு காணாமல் போகும் விமானங்கள், கப்பல்கள் எல்லாவற்றையும் வெளிக்கிரகத்தில் இருந்து பறக்கும் தட்டு வந்து எடுத்துக்கொண்டு தங்கள் கிரகத்துக்கு சென்றுவிடுவதாக சொல்லப்படுகிறது. இன்னும் கொஞ்சம் அதிகமாக அறிவியல் தேவைப்படுபவர்கள் இன்னொரு விஷயம் சொல்கிறார்கள். அதாவது பூமியிலிருந்து வேறு கிரகத்துக்கு செல்வதற்கான சுரங்கப்பாதை பெர்முடா முக்கோண கடற்பகுதியில் இருப்பதாக சொல்கிறார்கள். சுரங்கப்பாதை என்றால் நம்மூரில் சாலையை கடப்பதற்கு இறங்கிச் செல்லும் சுரங்கப்பாதை அல்ல. பெர்முடாவில் இருப்பதாக சொல்லப்படும் சுரங்கப்பாதைக்கு பெயர் worm hole.

அது என்ன wormhole? புழுத்துளை என தமிழில் மொழிபெயர்க்கலாம். அதாவது புழுக்கள் புகுந்து செல்லும் அளவுக்கு குறுகிய துளை. அறிவியல் இந்த wormhole-க்கு ஒரு விளக்கம் கொடுக்கிறது. ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு செல்வதற்கு ஒரே வழி நேராக செல்வதாகத்தான் இருக்க முடியும். ஆனால் அது இல்லாமலும் ஒரு வழி இருக்கலாம் என்கிறது அறிவியல்.

அது என்ன வழி?

நீங்கள் செல்லவேண்டிய மொத்த தூரத்தையும் மடித்துவிட்டால், நீங்கள் செல்ல வேண்டிய இடம் மிக அருகில் வந்துவிடும். அது போன்ற ஒரு அண்டவெளி மடிப்பு பெர்முடா முக்கோணப் பகுதியில் இருக்கலாம் என ஒரு காரணம் சொல்கிறார்கள்.

பெர்முடா பகுதியில் செல்லும் கப்பலும் விமானமும் மேற்படி மடிப்புக்குள் மாட்டி விழுந்துவிட்டால், துளைக்குள் விழுந்தது போல் ஆகும். துளைக்குள் விழுந்து அடைகிற மறுமுனை அண்டவெளியின் மறுபக்கத்தில் இருக்கலாம் என்கிறார்கள். அதாவது நம் பூமியில் காணாமல் போன கப்பல்களும் விமானங்களும் அண்டவெளியின் வேறொரு பகுதியில் வேறொரு கிரகத்தில் வெளி வந்திருக்கலாம் என்பதே இந்தக் காரணத்தின் சாரம்.

இதெல்லாம் சாத்தியம்தானா என்கிற கேள்விக்கு சாத்தியமே என்கிறது அறிவியல்.

இன்னொரு காரணமும் பெர்முடா முக்கோணத்தின் மர்மத்துக்கு சொல்லப்படுகிறது. சார்லஸ் பெர்லிட்ஸ் என்பவர் 1974ஆம் ஆண்டில் ஒரு புத்தகம் எழுதினார். புத்தகத்தின் பெயர், ‘பெர்முடா ட்ரையாங்கிள்’. பரவலாக பலருக்கும் பெர்முடா மர்மத்தை கொண்டு சென்றது இந்த புத்தகம்தான். இப்புத்தகத்தில் பெர்முடா மர்மத்துக்கு காரணமாக எழுத்தாளர் சொல்லும் விஷயம், அட்லாண்டிஸ்!

2,300 வருடங்களுக்கு முன் இருந்த ப்ளாட்டோ என்கிற தத்துவ ஞானி உருவாக்கிய சொல் அட்லாண்டிஸ்!

அட்லாண்டிஸ் என்பது ஒரு தீவு நாடு. அதை கண்டுபிடித்தவர்கள் ஒரு பாதி கடவுளாகவும் ஒரு பாதி மனிதனாகவும் இருந்தவர்கள். ஒரு மிகப்பெரிய நாகரிகம் அங்கு பெரும் கப்பற்படை சக்தியுடன் இருந்தது. பல தீவுகளை உள்ளடக்கியது அட்லாண்டிஸ். தங்கம், வைரம், வைடூரியம் எல்லாம் அபரிமிதமாக கிடைக்கும் இடம். நவநாகரிக தொழில்நுட்பங்கள் இருக்கும் இடம்.

ப்ளாட்டோவை பொறுத்தவரை அவரின் காலத்துக்கே அட்லாண்டிஸ் 9,000 வயதுக்கு முந்தைய நகரம். அவருடைய மூதாதையர்கள் தலைமுறை தலைமுறையாக அச்செய்தியை கொண்டு வந்து தனக்கு சேர்த்ததாக சொல்கிறார் ப்ளாட்டோ.

இப்போது எங்கே இருக்கிறது அட்லாண்டிஸ் தீவு?

கடலுக்கடியில்!

கடவுளின் சாபத்தால் பூகம்பமும் வெள்ளமும் வந்து கடலுக்கடியில் அட்லாண்டிஸ் தீவு மூழ்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த அட்லாண்டிஸ் தீவுதான் பெர்முடா முக்கோணக் கடல் பகுதிக்கு அடியில் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்தத் தீவுப்பகுதியில் இருந்து வெளிப்படும் சக்தி, கடலுக்கு மேல் மிதக்கும் கப்பல், பறக்கும் விமானம் ஆகியவற்றை இல்லாமலாக்கி விடுவதாக ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள்.

பெர்முடா ட்ரையாங்கிளுக்கு பின்னே இருக்கும் மர்மம் என்ன..? - போட்டு உடைத்த புத்தகம்!

வெவ்வேறு கற்பனைகள். வெவ்வேறு கதைகள். இது எதிலாவது உண்மை இருக்கிறதா?

2017ம் ஆண்டில் பெர்முடா ட்ரையாங்கிள் மர்மத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அறிவியலாளர் கார்ல் க்ரஸ்ஸல்நிக்கி என்பவர் பெர்முடா ட்ரையாங்கிள் மர்மத்தைப் போட்டு உடைத்தார். எல்லா கடற்பகுதிகளைப் போன்ற ஒரு சாதாரண கடற்பகுதியே பெர்முடா முக்கோணப் பகுதியும் என்றார். கப்பல்களும் விமானங்களும் பெர்முடா பகுதியில் காணாமல் போவதற்கு வேற்றுக்கிரக ஜீவராசிகளோ அட்லாண்டிஸ் தீவோ காரணம் இல்லை என்றார்.

எந்த தடாலடியான கற்பனைகளும் இல்லாமல் மிக இயல்பான மனிதத் தவறுகளும் வானிலை மாற்றங்களும் விபத்துகளும் மட்டுமே கப்பல்களும் விமானங்களும் அப்பகுதியில் காணாமல் போவதற்கு காரணம்.

பெர்முடா பகுதியில் காணாமல்போன விமானம் மற்றும் கப்பலின் எண்ணிக்கையை உலகின் பிற பகுதிகளில் காணாமல் போகும் விமானம் மற்றும் கப்பல்களின் எண்ணிக்கையுடன் பொருத்திப் பார்த்தால் பெரிய மாற்றம் ஏதும் இல்லை என்கிறது Lloyd's of London என்கிற காப்பீட்டு நிறுவனம். Lloyd's of London நிறுவனம் கடலில் நேரும் விபத்துகளுக்கும் காப்பீடு வழங்கும் நிறுவனம்.

பெர்முடா ட்ரையாங்கிள் பற்றிய மொத்த சர்ச்சைகளுக்கும் அடிப்படையாக இருந்தது The Bermuda Triangle என்கிற புத்தகம். சார்லஸ் பெர்லிட்ஸ் எழுதிய அப்புத்தகம் 1975ஆம் ஆண்டில் வெளிவந்தது. இப்போது வரை 30 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 2 லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியிருக்கிறது.

பெர்முடா ட்ரையாங்கிள் கொண்டிருந்த மர்மத்தில் உருப்படியாக விளைந்தது சார்லஸ் பெர்லிட்ஸ் போன்ற பல எழுத்தாளர்கள் மற்றும் சினிமா இயக்குநர்களின் வெற்றிகளும் வருமானமும் மட்டும்தான்.

மனிதர்களையும் மனித அறிவையும் நம்ப விரும்பாத மனிதனுடைய தாழ்வு மனப்பான்மையும் அவநம்பிக்கையும்தான் தன்னைக் காட்டிலும் ஏதோவொரு பெரும் இயக்கம், பெருஞ்சக்தி இருப்பதாக நம்ப விரும்புகிறது. அவன் நாசம் செய்திருக்கும் பூமியையும் மனித வாழ்வையும் வேறு ஏதோ வகையில் ஏதோ ஒன்று வந்து சரி செய்து விட வேண்டுமென அவன் ஏங்குகிறான். அதற்கென பல கதைகளை புனைகிறான். அக்கதைகளுக்கு காரண காரியம் கற்பிக்கிறான். யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாத கோழைத்தனத்துடன் ஓடி அக்கதைகளுக்குள் ஒளிந்து கொண்டு தனக்கான பாதுகாப்பை உருவாக்கிக் கொள்கிறான். உண்மையான பெர்முடா ட்ரையாங்கிள் மனிதனின் மனமே!

Related Stories

Related Stories