சினிமா

இணையத்தை ஆக்கிரமித்த வடிவேலு : மக்களின் உள்ளம் கவர்ந்த வைகைப்புயலின் அடுத்த படம் எது?

"நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ‘ரெட் கார்டு’ தடையை நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மறுபிறவி” என நடிகர் வடிவேலு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இணையத்தை ஆக்கிரமித்த வடிவேலு : மக்களின் உள்ளம் கவர்ந்த வைகைப்புயலின் அடுத்த படம் எது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தொடர்பான விவகாரத்தில் ஷங்கர் - வடிவேலு இருவருக்கும் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், வடிவேலு மீண்டும் முழுவீச்சில் நடிக்கவிருக்கிறார்.

ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.

அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு புகார் அளித்தது. பிறகு வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது. இதனால் வடிவேலுவால் பிற படங்களில் நடிக்க முடியாமல் போனது. அதற்குப் பிறகு 'கத்தி சண்ட', 'மெர்சல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும், முழுமையாக அவரால் திரையுலகில் கவனம் செலுத்த முடியவில்லை.

'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படம் தொடர்பாகத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் ஷங்கர் - வடிவேலு இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சுமுகமாக எந்தவொரு முடிவுமே எட்டப்படவில்லை.

இந்நிலையில் நேற்று அறிக்கை வெளியிட்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் வடிவேலு மற்றும் ஷங்கரின் நிறுவனத்துடன் பேசி சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

எனவே, விரைவில் வடிவேலு மீண்டும் முழு வீச்சில் நடிக்கத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனத்தின் ஒரு படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், இதை முன்வைத்தே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தன் மீதான தடை நீக்கப்பட்டது குறித்துப் பேசியுள்ள நடிகர் வடிவேலு, "நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ‘ரெட் கார்டு’ தடையை நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மறுபிறவி. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் எனது ரசிகர் மன்றம்.

மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன்முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு. நான் திரையில் தோன்றாத காலங்களில் என்னை உயிரோட்டமாக வைத்திருந்த மீம் கிரியேட்டர்களுக்கு நன்றி.

என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன். என்னை மீண்டும் திரைக்கு கொண்டுவந்ததன் மூலம் சுபாஷ்கரன் சபாஷ்கரன் ஆகிவிட்டார்.

சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர்’ படத்தில் செப்டம்பர் முதல் நடிக்க உள்ளேன். 2 படங்களில் கதாநாயகனாக நடித்துவிட்டு பின்னர் காமெடியனாகவும் நடிப்பேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories