
அல்லு அர்ஜூன் படத்தில் ஒப்பந்தமான தமிழ் நடிகை...
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி தென்னிந்திய அளவில் வரவேற்பை பெற்ற படம் ‘நயட்டு’. மலையாளத்தில் மார்ட்டின் பிரக்டின் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘நயட்டு’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்செயலாக ஒரு குற்றத்தில் ஈடுபட்ட பின்னர் தப்பியோடும் 3 போலீஸ்காரர்களின் போராட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதற்கான பணிகளும் துவங்கின, இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கியுள்ள நடிகர் அல்லு அர்ஜுன் இதில் நாயகியாக அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாயகனாக சத்யதேவ் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்க கௌதம் மேனன் மற்றும் சுதீர் வர்மாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கௌதம் மேனன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை..!
சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ எனும் படத்தில் நடிக்கிறார். இதற்காக சிம்புவின் புதுவிதமான தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இந்த படம் சிம்பு ரசிகர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நடிகை ராதிகா, இப்படத்தில் சிம்புவின் தாயாராக நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை கயாடு லோகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மராத்தி நடிகையான இவர் ஏற்கனவே கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ராஜெக்ட் அக்னியை முழுநீள படமாக்கும் கார்த்திக் நரேன்?
தமிழில் வெளியாகியுள்ள "நவரசா" ஆந்தாலஜி தொடர் ரசிகர்கர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 9 ரசங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள 9 கதைகளும் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தது, ஆனால் ரிலீஸுக்கு பின் எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றமானதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். இதில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள "புராஜக்ட் அக்னி" பாராட்டுக்களை பெற்று வருகிறது. இப்பகுதியில் 'கல்கி' பாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் சாய் சித்தார்த் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார். இந்த ப்ராஜெக்ட் அக்னி முழு நீள படமாக உருவாக இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன, விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏமாற்றத்தால் இயக்குனர் அருண்பிரபு எடுத்த முடிவு...
‘அருவி’ பட இயக்குனரான அருண் பிரபு இயக்கத்தில் வெளியான படம் தான் ‘வாழ்’. வாழ்க்கையின் எதார்த்தத்தை இந்த படம் பதிவு செய்திருந்தாலும், பலருக்கும் ஏற்கமுடியாத படமாகவே வாழ் அமைந்தது. மேலும் அருவி படம் கொடுத்த தாக்கம் வாழ் படத்தில் தவறியதாலும் படம் தோல்வியை சந்தித்தது. இதனால் வருத்தமடைந்த அருண்பிரபு அடுத்து இயக்கவிருக்கும் படத்தை கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என முடிவு செய்து அதற்கான வேலைகளை துவங்கியுள்ளார். விரைவில் புதிய படத்துடன் அருண்பிரபு வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.








