சினிமா

‘கண்டாமணி’யையும் காணாமல் போகச் செய்த கர்ணனின் “கண்டா வரச் சொல்லுங்க” ..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

‘கண்டாமணி’யையும் காணாமல் போகச் செய்த கர்ணனின் “கண்டா வரச் சொல்லுங்க” ..!!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்ணா வா டா!

என் ஊரில் திருவிழாக் காலங்களில் எப்போதும் ஒலிக்கும் ஒரு பாடல் "அங்கே இடி முழங்குது! கருப்பசாமி தங்கக் கலசம் மின்னுது!"

எப்படி இந்தப் பாடலை எத்தனை ஆண்டுகள் கழித்துக் கேட்டாலும் கருஞ்சட்டைக்காரன் எனக்கும் கூட மெய்சிலிர்த்துக் கருப்பசாமியைப் பார்க்கும் எண்ணம் உருவாகுமோ அதுபோல ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பாடலைக் கேட்டதும் கர்ணனைக் காண மனம் துடிக்கிறது இதன் காரணம் என்ன?

நன்றி
தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்,
ராம்ஜி ஆடியோஸ் மதுரை.

ஏன் மாரி செல்வராஜை நான் கொண்டாடுகிறேன் என்பதற்கு "கண்டா வரச் சொல்லுங்க" பாடலின் முதல் காட்சியில் இதை வைத்ததும் கூட ஒரு காரணந்தான்! இளையராஜாவை நீங்கள் இசைஞானி என்று மார்தட்டிக் கொண்டாலும் சந்தோஷ் நாராயணன் இசையில் செய்யும் புரட்சிக்கு இதுவே சான்று!

மக்களிசையை மக்களின் உணர்வை உயிரோடு உடல் கலந்தது போல் இசைக்கும் போது அந்த இசைக்கு இசையாதோர் எவருண்டு? தேக்கம்பட்டியில் மதுரையின் ராம்ஜீ ஸ்டுடியோஸில் தன் இசைக்கான உயிரைத் தேடுமிடத்தில் தான் இப்பாடலின் உயிர் உருக்குலையாமல் இருக்கிறது.

பாடல் 1 - கர்ணன் அழைப்பு என்று வந்ததும் விருமாண்டியில் வந்த அந்தக் காண்டாமணி போல் இருக்கப் போகிறதோ என்ற பெரும் ஆவலோடு காத்திருந்தேன்! ஆனால் காண்டாமணியையும் காணாமல் போகச் செய்யும் அளவிற்கு கர்ணன் மிரட்டிவிட்டான்!

பாடலின் துவக்கத்தில் நாதஸ்வரத்தைக் காட்டிய காலம் மாறி பறையை சுற்றி வைத்துப் பாடலைத் துவக்கி திடீரென சூரியனும் பெக்கவில்லை!
சந்திரனும் சாட்சியில்லை!
பாதகத்தி பெத்த புள்ள!
பஞ்சம் திண்ணு வளர்ந்த புள்ள!
என்று கிடக்குழி மாரியம்மாள் குரலில் இந்த வரியைக் கேட்கும் போதே தெரியும் இந்தப் பாடல் கர்ணனின் வருகையை பறைசாற்றப் படைக்கப்பட்டதோடு நம்மை உலுக்கப்போகிறதென!

அடுத்த நொடியே யாரோ ஒருவன் தீப்பந்தத்தைக் கையில் வைத்து சுவற்றில் இங்கும் அங்குமாய் இழுத்துக் கரையாக்கிக் கொண்டிருக்கிறான்!

சட்டென பறை இசையோடு
கண்டா வரச் சொல்லுங்க!
கர்ணன கையோடு கூட்டி வாருங்க
என்று மாரியம்மாள் பாடும் போது கர்ணனைத் தேடியேனும் கையோடு நாமே கூட்டி வர நம் மனமும் துடிக்கிறது!

அம்மாடி ஆலமரம்
மரத்துமேல உச்சிக் கிளை!
ஒத்த கிளி நின்னாக் கூட
கத்தும் பாரு அவன் பேர!
கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க!
என்ற வரி வரும் போதும் அந்தத் தீப்பந்தம் எதையோ கிறுக்கிக் கொண்டிருக்கிறது! அந்த ஒத்தக் கிளியும் அவன் பேரைச் சொல்லுமென்றால் அவன் யாரென்பது நமக்குப் புரியும்.

ஊரெல்லாம் கோயிலப்பா
கோயிலெல்லாம் சாமியப்பா
ஒத்த பூடங்கூட இல்லையப்பா
எங்கக் குடும்பத்துல ஒருத்தனப்பா!

என்ற வரி வரும் போது அவன் எங்களில் ஒருவன் என்று மாரியம்மாள் சொல்ல தீப்பந்தம் கிறுக்கிய கிறுக்கல் கரை, கர்ணனின் விழிகளாய் மாற கிறுக்கல் ஓவியமாய் உருப்பெறுகிறது!

"யாரு" என்று சந்தோஷ் அடுத்த வரியில் பாட ஒரு நொடி பாடலை நிறுத்தி யார் இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் என்று பார்க்க நினைத்தேன் அடுத்த நொடி மாரி திரையில் வந்து தாமிரபரணியில் கொல்லப்படாதவர்களையும், மறக்கவே நினைக்கிறேனையும் வாசித்து என் எழுத்தை உணர்ந்த உனக்கு இதில் என்ன சந்தேகம் இது என் வரிகளே என்று சொல்வது போல் அவரும் சந்தோஷும் எதிரெதிரே நிற்பதைப் பார்க்கும் போது மனதுக்கு அத்தனை மகிழ்ச்சி அளிக்கிறது!

கவசத்தையும் கண்டதில்ல!
எந்தக் குண்டலமும் கூட இல்ல!
வாள் தூக்கி நின்னான் பாரு!
வந்து சண்ட போட்ட எவனுமில்ல!

இந்த வரி வரும் போது கர்ணனின் ஓவியத்தோடு சேர்த்து இசைக்கும் பம்பை ஒலி மயிர் சிலிர்க்க வைத்து வா டா கர்ணா என்று நம்மைக் கத்த வைக்கும்! அடுத்த நொடி கர்ணனின் கரையால் வரைந்த ஓவியம் நிறைவுறும்! உடல் சிலிர்க்கும்! மெய் மறக்கும்! கர்ணனின் ஓவியத்தை மாரி எப்படி வேண்டுமானாலும் வரைந்திருக்கலாம்! ஆனால் இருள் மட்டும் இருக்குமிடத்தில் தீப்பந்தம் கொண்டு சுவற்றில் கரைகளாய் கர்ணன் பிறக்கிறான்!

ஆம் இங்கே சிலரின் வரலாறு இருட்டில் கிறுக்கப்பட்ட கரைகளினாலே உருவாக்கப்பட்டு ஓவியமாய் ஒளிர்கிறது! கர்ணன் வண்ணங்களிலே படைக்கப்பட்டிருந்தால் கூட இந்தத் தாக்கத்தை எனக்குக் கொடுத்திருக்க மாட்டான்! இருட்டைக் கிழித்துத் தீயின் கிறுக்கலில் கருப்பில் கர்ணனை உருவாக்கி இவன் எங்களில் ஒருவன் என்பதை நிரூபித்த மாரி செல்வராஜ் உருவாக்கும் கர்ணனைக் கண்டா வரச் சொல்லுங்க! அவனக் கையோட கூட்டி வாருங்க...
கர்ணன் வருவான் நமக்காக நம்மிலிருந்தே...!

நன்றி: அருண்.நா (ஃபேஸ்புக்)

banner

Related Stories

Related Stories