சினிமா

தமிழ் சினிமாவின் பிரமாண்ட அடையாளமான இயக்குநர் ‘ஷங்கர்’ : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு தொகுப்பு.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட அடையாளமான இயக்குநர் ‘ஷங்கர்’ : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Subash Chandra Bose
Updated on

இமாஜினேஷன்லாம் நல்லாதான் இருக்கு! ஆனா, பட்ஜெட் எகிறிடுமே!

இது வெறும் லவ் ஸ்டோரி பா. இதுக்கு இவ்ளோ செலவு பண்ணணுமா?

இப்படி யோசித்த தமிழ் சினிமாவை பிரம்மாண்டமாக்கியது ஷங்கரின் படங்கள் தான். யாரும் யோசித்துக்கூட பார்க்க முடியாத விஷயங்களை ஷங்கர் திரையில் காட்டினார். சோசியல் டிஸ்டன்ஸிங் கொண்டு பழகி வந்த டபுள் ஆக்ஷன் ஹீரோக்களை, தொட்டுப் பேச வைத்தது மட்டும் இல்லாமல் கட்டித் தழுவவும் செய்தார். இன்று என்ஜினீயர்கள் சூழ் தமிழ் சினிமாவில், 26 வருடம் முன்பே டிப்ளமோ இன் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்துவிட்டு, கலைப் பயணத்தை ஒரு நடிகனாய் தொடங்கினார். ஆனால் இயக்குனராக அவர் செய்த சாதனைகள் அதிகம்.

ஜென்டில்மேன் - 1993

இது ஷங்கரின் முதல் படம். முதல் படத்திலேயே எப்படி இவ்வளவு பெரிய டீமுடன் களமிறங்கினார் என்பது, இன்று வரை எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. ஆனால், அவர் முதல் படமாக எடுக்க நினைத்தது, ஒரு பெண்ணின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்ட ஒரு கதை தான். அக்கதையை படமாக எடுத்தால் பெரிதாக வெற்றிபெற முடியாது என்று அவர் நண்பர்களின் அறிவுறுத்தலின் பேரில், ‘ஜென்டில்மேன்’ படம் உருவானது.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட அடையாளமான இயக்குநர் ‘ஷங்கர்’ : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

அந்த காலகட்டத்தில், தமிழில் தலை சிறந்த இயக்குனர்கள் கூட தங்கச்சி சென்டிமென்ட், அம்மா சென்டிமென்ட் என்று அரைத்த மாவை அரைத்துக்கொண்டிருந்த வேளையில், ராபின்ஹூட் போன்ற ஹீரோ கதாபாத்திரம், நெகடிவ் ஷேட் கொண்ட ஹீரோ, என்று கதையில் தொட்டு உருவாக்கத்திலும் புதுமையை புகுத்தினார். மற்ற ஸ்டீரியோடைப் ஹீரோக்களிடமிருந்து வேறுபட்டு நின்றதன் காரணத்தாலேயே அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

காதலன் - 1994

முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றி கண்ட இயக்குநர் என்று பெயர் வாங்கிய பின்பு, முன்னணி ஹீரோக்களின் கால் ஷீட்கள் சுலபபமாக கிடைத்திடும் சந்தர்ப்பம் இருந்தாலும், நடனமாடிக்கொண்டிருந்த பிரபு தேவாவை வைத்து கமர்ஷியல் காதல் படத்தை உருவாக்கினார். இன்று வரை காதல் கதை என்றால் நாயகியின் அப்பா தான் வில்லனாக இருப்பார்.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட அடையாளமான இயக்குநர் ‘ஷங்கர்’ : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

அந்த பேட்டர்னை மாற்றாமல் ‘காதலன்’ கதையை உருவாக்கினார். ஆனால், நாயகியின் அப்பாவை தமிழக ஆளுநராக உருவாக்கம் செய்தார். சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளின் பையன், தமிழக ஆளுநரின் பெண்ணைக் காதலிப்பது எனும் கதையே மக்களை விறுவிறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. உருவாக்கத்தில் மட்டும் பிரம்மாண்டம் இருக்கக்கூடாது, கதையிலும் பிரம்மாண்டம் இருக்கவேண்டும் என்பதையே காதலன் வாயிலாகச் சொன்னார்.

இந்தியன் - 1996

தமிழ் கமர்ஷியல் படங்களில் இது ஒரு கிளாசிக். 75 வயது முதியவர் சேனாபதி (கமல்), லஞ்சம் வாங்கும் அனைவரையும் கொலை செய்கிறார். ‘அவங்கள தண்டிக்கிறதுக்கு இவர் யாரு’ என மக்கள் மனதில் எழும் கேள்விக்கு ஃப்ளாஷ்பேக் மூலமாகப் பதில் சொல்கிறார் ஷங்கர். அந்த சேனாபதி ஒரு சுதந்திர போராட்ட வீரர். நாட்டுக்காக தன் உயிரையும் துச்சமாக எண்ணிப் போராடியவர்.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட அடையாளமான இயக்குநர் ‘ஷங்கர்’ : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

இன்னொரு பக்கம் சேனாதிபதியின் மகன் சந்துரு (கமல்) அப்பாவின் நேர்மையால் தனக்கு அரசாங்க வேலை கிடைக்கவில்லை என்று சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஒரு கட்டத்தில் தன் மகனும் அந்த தவறை செய்கிறான் என்று தெரிந்து "சந்துரு மேல எனக்கு தான் பாசம் ஜாஸ்தி, அவன் சின்ன குழந்தையா இருக்குற அப்போ, அவன தூக்கிக் கொஞ்சும் போது, மீச குத்துதுன்னு அழுவான். அவனுக்காக மீசைய இழந்த சேனாபதி. இப்போ அவன இழக்கவே தயாராகிட்டான்" என ஒரு வசனத்தில் ரசிகர்களை கன்வின்ஸ் செய்திருப்பார் ஷங்கர். இப்படிப்பட்ட மிகவும் சிக்கலான கதையை எடுக்கவே அனைவரும் பயப்படும் வேளையில், மூன்றே கால் மணி நேரம் எங்கும் சொதப்பாமல் எடுத்துக் காட்டியவர் ஷங்கர்.

ஜீன்ஸ் - 1998

“மூணு படங்களிலேயே ஹாலிவுட்டுக்கு நிகரான இயக்குநர் என பெயர் வாங்கியாச்சு.. இனிமே புதுசா என்னத்த இந்த மனுஷன் சாதிக்கப் போறார்” என எல்லாரும் நினைத்த சமயம், ‘ஜீன்ஸ்’ படம் மூலமாக, டபுள் ஆக்ஷன் படங்களின் தொழில்நுட்பத்தில் புதுமையை காட்டினார். அன்று வரை டபுள் ஆக்ஷன் கதாபாத்திரங்கள் ஒரே ஷாட்டில் சந்திப்பதே பெரிய கிராபிக்ஸ் என்று எண்ணிக்கொண்டிருந்த நிலை.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட அடையாளமான இயக்குநர் ‘ஷங்கர்’ : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

அந்த இரு கதாபாத்திரங்களையும் தொட்டுப் பேசவும், கட்டித் தழுவவும் வைத்தார் ஷங்கர். இந்த ஒரு விஷயமே இப்படத்தை பெரிய வெற்றிபெறச் செய்யும் வகையில் இருக்க, உலக அதிசயங்கள் அனைத்தையும் ஒரே பாட்டில் காட்டினார். அன்று வரை பாடல் காட்சியில் வெளியே சென்றுவிடும் ரசிகர்களை தங்கள் இருக்கையில் அமர்த்தியது இந்த அதிசய பாடல்.

முதல்வன் - 1999

‘இந்தியன்’ படத்தில் ஆதிகாலத்து அரசியலைப் பேசினாலும், தமிழ்நாட்டு அரசியலில் நடக்கிற பிரச்சனைகளை பேசும் விதமாகத்தான் ‘முதல்வன்’ படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் கதையை ரஜினிகாந்த் கேட்டுவிட்டு, ‘இது ரொம்ப அரசியல் பேசுற மாதிரி இருக்கு’ என ரிஜெக்ட் செய்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதற்குப் பிறகும் பல முன்னணி கதாநாயகர்கள் இந்த கதையை எடுத்து நடிக்க பயந்தனர். அவற்றைப் பொருட்படுத்தாமல், தன் கதை மேல் முழு நம்பிக்கை வைத்து அர்ஜூனை ஹீரோவாக வைத்து எடுத்தார்.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட அடையாளமான இயக்குநர் ‘ஷங்கர்’ : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கை, அதில் ஒரு காதல், அந்த காதல் கல்யாணத்தில் முடிய, ஒரு சின்ன அரசாங்க வேலைனு தன்னோட வாழ்க்கையை ஒரு வட்டத்திற்குள் வாழ்ந்துட்டு இருக்க ஹீரோ, ஓவர் நைட் ல ஒபாமா ஆயிட்டான்னு சொல்ற மாதிரி, ஒரே இன்டெர்வியூல தமிழ்நாட்டுக்கே முதல்வர் ஆகிடுறாரு. ஒருநாள் முதல்வராக அர்ஜூன் செய்யும் ஒவ்வொரு செயலும் சாமான்ய மக்களும் அரசியலை புரிந்துகொள்ளும் அளவிற்கு திரைக்கதை அமைத்து இருந்தாரு. ஒரு காட்சியில மக்கள் தங்களின் புகார்களை இந்த புகார் பெட்டியில் போடலாம்னு ஒரு பெட்டியை காட்டி இருப்பாரு. படத்தோட கிளைமாக்ஸ்ல அந்த பெட்டி முழுக்க மரத்துல இருந்து உதிர்ந்து விழுந்த பூக்களும் இலைகளும் நிறைந்து இருக்கும்.

பாய்ஸ் - 2003

இயக்கத்தில் யாரும் நினைத்துக் கூட பார்க்கமுடியாத உச்சத்திற்கு போயாச்சு. அடுத்து ஒரு பெரிய ஹீரோவ வச்சி படத்தை எடுக்கலாம்னு தான் யாரா இருந்தாலும் யோசிச்சிருப்பாங்க. ஆனா ஷங்கர் அப்படி யோசிக்காம, முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்கினார். இன்று வெளியாகி இருந்தாலும் அப்படம் ஒரு ட்ரெண்ட் செட்டராக ஆகியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு படம் தான் ‘பாய்ஸ்’. நிறைய சமூக கருத்துகளை ஷங்கரின் படங்கள் பேசுகின்றன என்ற சொற்களுக்கு பதிலடிகளாய் இப்படத்தின் கதையை அமைத்திருந்தார்.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட அடையாளமான இயக்குநர் ‘ஷங்கர்’ : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

"படிக்குற வயசுல லவ், இதெல்லாம் எங்க உருப்பட போகுது"னு சமூகத்தினராலும், பெற்றவர்களாலும் திட்டு வாங்கிட்டு இருந்த இளைஞர்களின் மனவேதனைக்கு விடை கொடுப்பதாய் இப்படம் இருந்தது. "லவ்லேயும் ஜெய்ச்சி வாழ்க்கைலயும் ஜெயிக்க முடியாதா!? " என்ற வசனம் அவர்களின் தாரக மந்திரமாகவும், "சரி க மே" பாடல் அவர்களின் தேசிய கீதமாகவும், இளைஞர்கள் கருதினார்கள். அப்படத்தில் நடித்த ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் சினிமாவில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அந்நியன் - 2005

சாமான்ய மக்களை நாட்டையே எதிர்த்துப் போராட வைப்பதில் ஷங்கருக்கு ஆர்வம் ஜாஸ்தி என்பதற்கு இப்படமும் ஒரு எடுத்துக்காட்டு. அம்பி (விக்ரம்) ஒரு நேர்மையான வக்கீல். இவர் யாராவது சட்டத்தை மீறினால் சட்டப்படி வழக்குத் தொடர்வார். அவ்வாறே பல பிரச்சனைகளுள் சிக்கிக்கொள்கிறார். உடல் ரீதியாக அவர்களை எதிர்த்து சண்டை போட முடியாமல் தவிக்கிறார். அதன் வெளிப்பாடாகவே அந்நியன் என்ற குணாதிசயம் அவருக்குள் ஏற்படுகிறது.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட அடையாளமான இயக்குநர் ‘ஷங்கர்’ : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

அந்நியன் ஓர் ஆக்ரோஷமான குணாதியசம். சட்டங்களை மீறுவோர் மீதான புகார்களை அம்பி அந்நியன் இணையதளத்தில் பதிகிறார். பின்னர் அந்நியனாக மாறி, கருட புராணத்தின் படி தண்டனைகளை நிறைவேற்றுகிறார். இதற்கிடையில் நந்தினியை (சதா) அம்பி விரும்புகிறார். ஆனால் இவரது ‘ரூல்ஸ் ராமானுஜம்’ கேரக்டர் பிடிக்காமல் அம்பியின் காதலை நிராகரித்துவிடுகிறார் சதா. அதற்காக சதா விரும்பும் ரெமோ குணாதியத்தைப் பெறுகின்றார். விக்ரமின் நடிப்பிற்கு இப்படம் ஒரு மிகப்பெரிய சான்று.

சிவாஜி - 2007

என்னதான் ரஜினியின் ஸ்டைல் மட்டுமே அவரின் படத்திற்கும் ரசிகர்களுக்கும் போதும் என்றிருந்தபோது. ரஜினியை வெள்ளையாக காட்ட வேண்டும் என்ற அவரது கற்பனையும், அதற்காக அமைத்த திரைக்கதையும், ரஜினி ரசிகர்களின் எண்ணற்ற பாராட்டுகளைப் பெற்றது. வழக்கமான ஷங்கர் படம் என்ற பெயரை பெரும் அளவிற்கு ஊழலையும், லஞ்சத்தையும் அவர் எல்லா கோணத்திலும் இருந்து காட்டிவிட்டார். ஆனால் அதை அவரால் மட்டும்தான் திரும்பத் திரும்ப ரசிக்கும் படியாக உருவாக்க முடியும்.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட அடையாளமான இயக்குநர் ‘ஷங்கர்’ : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

கமர்ஷியலையும் சோஷியல் மெசேஜையும் ஒருசேரக் கொண்டு திரைக்கதை அமைப்பதில் ஷங்கருக்கு நிகர் அவரே என்ற வண்ணம் இப்படம் அமையப்பெற்றது.

எந்திரன் - 2010

ரொம்பவும் சிக்கலான ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதை. அதையும் சாமான்ய மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கினார் ஷங்கர். அதிகமாக அறிவியல் பேசாமல், "ரெட் சிப்" "ப்ளூ சிப்" என்று ஹீரோ- வில்லனை மக்களுக்கு எளியவகையில் புரியவைத்தார். இது அனைத்திற்கும் மேலாக பல வருடம் கழித்து வில்லன் ரஜினியை திரையில் கொண்டு சேர்த்த பெருமை ஷங்கரையே சாரும்.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட அடையாளமான இயக்குநர் ‘ஷங்கர்’ : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

திரையில் மனித காதலை பார்த்து சலித்துப்போய் இருந்த மக்களுக்கு ரோபோவின் காதல் புது அனுபவத்தை தந்தது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வகையில் அமையப்பெற்றது. அந்த ஆண்டு, உலகம் முழுதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த எந்திரன் திரைப்படமானது அதிக‌ வசூல் பெற்று தமிழ்த் திரைப்படங்களில் மிகஅதிக வசூல் அடைந்த திரைப்படம் என்னும் பெருமையைப் பெற்றது.

நண்பன் - 2012

இந்தியில் வெளியான ‘த்ரீ இடியட்ஸ்’ படத்தின் ரீமேக் தான் ‘நண்பன்’. அமீர்கான் அங்கு நடித்து பலத்த பாராட்டுகளை பெற்ற படம்; அந்தளவுக்கு தமிழில் விஜய் ஈடுகொடுக்க முடியுமா என எல்லாரும் யோசித்த நேரத்தில் தான் ஷங்கர் இப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டார்.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட அடையாளமான இயக்குநர் ‘ஷங்கர்’ : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

மாஸ் ஹீரோவாக விஜய்யை திரையில் பார்த்துக்கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு, இப்படம் மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

ஐ - 2015

அர்னால்ட் என்ற பெயரில் உடற்பயிற்சிக் கூடத்தை நடத்திவருகிறார் லிங்கேசன் என்ற லீ (விக்ரம்). அவருக்கு ஆணழகன் போட்டியில் வெல்ல வேண்டும் என்பது கனவு. விளம்பர மாடல் அழகி தியா (எமி ஜாக்சன்) மேல் காதல்கொள்கிறார். தன் பிரச்னைக்காக லீ யை ஆணழகன் போட்டிக்கு செல்லவிடாமல் தன்னுடன் விளம்பர ஷூட்டிங்கிற்காக அழைத்துச் செல்கிறார் தியா.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட அடையாளமான இயக்குநர் ‘ஷங்கர்’ : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

பின் தியாவை அடைந்தாலும், பெரிய மாடல் என்று பெயர் பெற்றதாலும், ஒரு விளம்பர நிறுவனத்தின் மேல் பழி சொன்னதாலும், திருநங்கையான ஓஸ்மாவின் காதலை நிராகரித்ததாலும், அவரால் பாதிக்கப்பட்டதாய் கருதி, இந்திர குமார், ஜான், ஓஸ்மா, வாசுதேவன் ஆகிய நான்குபேரும் சூழ்ச்சி செய்து ஒருவித வைரஸை லீயின் உடம்பில் செலுத்திவிடுகின்றனர். அந்த உண்மையை அறிந்து லீ அவர்களை கொடூரமான முறையில் பழிவாங்குவது தான் கதை. அந்த பழிவாங்கும் பகுதிகளில் அந்நியன் கதை சற்று நினைவிற்கு வந்து சென்றாலும், இப்படத்திற்காக விக்ரம் மேற்கொண்ட உழைப்பு எந்த நடிகனும் செய்யாத ஒன்று.

2.O - 2018

ஷங்கர் இயக்கிய படங்களில் இப்படம் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. பாடலுக்காகவே பெரிதும் செலவு செய்றார் ஷங்கர் அப்டினு எல்லோரும் குறை சொல்லி வந்த ஷங்கர் 2.0 படத்துல அப்படி எந்த பாடலும் பெருசா வைக்கல. முழுக்க முழுக்க கதையை மட்டுமே சார்ந்து செலவுகள் செய்யப்பட்டிருக்கும்.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட அடையாளமான இயக்குநர் ‘ஷங்கர்’ : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

எந்திரனில் பெரிதாக அறிவியலைக் கையாளாத ஷங்கர் 2.O-வில் ஆரா என்ற விஷயத்தை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். ரஜினியும் அக்ஷய் குமாரும் போட்டி போட்டு நடித்ததாக இருக்கட்டும், பின்னணி இசையில் உலகத்தரத்தில் ரகுமான் கொடுத்ததாக இருக்கட்டும். அனைத்துமே பெரிய அளவில் படத்திற்கு பலமாக அமைந்தது. இறுதியில் வரும் 3.0 கேரக்டர் வியப்பின் எல்லை.

தமிழ் சினிமாவில் பிரமாண்டங்களின் அடையாளமாக உயர்ந்திருக்கும் இயக்குநர் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

banner

Related Stories

Related Stories