சினிமா

மீண்டும் இணைந்த ‘சிங்கம்’ கூட்டணி - சூர்யா 39 அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!

'சூரரைப் போற்று' படத்தின் பணிகள் முடிவடைவதற்குள் அடுத்தடுத்த 2 படங்களில் சூர்யா ஒப்பந்தமானது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மீண்டும் இணைந்த ‘சிங்கம்’ கூட்டணி - சூர்யா 39 அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சுதா கொங்கரா இயக்கத்திலான ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகர் சூர்யா, தனது அடுத்த படத்திற்காக ஹரியுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், ‘சூரரைப் போற்று’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதால் ஹரியுடனான அடுத்த படம் குறித்த தகவல் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளிவராமல் இருந்தது.

இதற்கிடையே, வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தனது 40வது படத்துக்காக சூர்யா இணைந்துள்ளார் என்றும் அதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்றும் அண்மையில் அறிவிப்பு வெளியானது. வெற்றிமாறன் சூரியுடனான படத்தை இயக்கவிருப்பதால் அது முடிந்த பிறகு சூர்யா படத்தை இயக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சூர்யாவின் 39வது படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்ற ரசிகர்களின் கேள்விக்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பதிலளித்துள்ளார். அதில், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யாவின் 39வது படத்தை ஹரி இயக்கவிருப்பதாகவும் அதற்கு ‘அருவா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், ‘சூரரைப் போற்று’ ரிலீஸானதும் ஏப்ரல் மாதமே படத்தின் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்ததோடு இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் ரிலீஸாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ‘அருவா’ படத்துக்கு, டி.இமான் இசையமைக்கவுள்ளார். சூர்யா-ஹரி கூட்டணியில் முதல் முறையாக டி.இமான் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே ‘ஆறு’, ‘வேல்’ மற்றும் ‘சிங்கம்’ படத்தின் 3 பாகங்கள் என 5 படங்களில் சூர்யாவும் - ஹரியும் இணைந்து பணியாற்றியுள்ளனர். மீண்டும் இருவரும் இணைந்தால் ‘சிங்கம்’ நான்காம் பாகமாகத்தான் இருக்கும் எனப் பேசப்பட்டு வந்த நிலையில் ‘அருவா’ முழுக்க முழுக்க ஃபேமிலி சென்டிமென்ட் கதையாக இருக்கும் என பேசப்படுகிறது.

முன்னதாக, அஜித்தின் ‘வலிமை’ படமும் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories