சினிமா

"லோக்கல் To மிஸ்டர்.லோக்கல்" : சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் பயணம் - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு!

"லோக்கல் To மிஸ்டர்.லோக்கல்" : சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் பயணம் - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் 2007ஆம் ஆண்டு ஒளிப்பரப்பான ‘கலக்கப் போவது யாரு: சீசன் 1’ மூலம் அறிமுகமாகி, பின்னர் அதே தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மாறி தனது பேச்சுத் திறமையால் பஞ்ச் வசனங்களையும், டைமிங் பர்ஃபாமன்ஸ்களையும் வீசி அனைவரின் மனதிலும் இடம்பெற்றவர். உலகத் தமிழர்கள் அனைவரையும் சிரிக்க வைத்து, தனது கடின உழைப்பால், சினிமா எனும் சிம்மாசனம் ஏறி, குறுகிய காலத்தில் உச்ச நட்சத்திரங்களுக்கு இணையான வரவேற்பை பெறும் நடிகனாக உயர்ந்திருக்கும் சிவகார்த்தியேனை அவரது பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்களோடு சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்.

ஒருவர் மிக வேகமாக வளர்ந்தால் ஒன்று சந்தேகம் வரும் அல்லது பொறாமை பொங்கும். சிவா விஷயத்தில் இரண்டாவதுதான் அதிகம் நடந்திருக்கிறது. ஆனால் இந்த வளர்ச்சிக்குப் பின்னால் எத்தனை அவமானம், எத்தனை நிராகரிப்புகள், எத்தனை வேதனைகள் இருக்கிறது என்பது சிவாவை நெருக்கமாக அறிந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

"லோக்கல் To மிஸ்டர்.லோக்கல்" : சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் பயணம் - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

அப்பாவுக்கு சிறையில் பணி என்பதால் குற்றவாளிகளை அவர்களது தண்டனைக் காலத்தில் பார்த்து வளரவேண்டிய சூழல் சிவாவுக்கு. குற்றவாளிகளை தண்டனை காலத்தில் பார்ப்பது எவ்வளவு பக்குவத்தை கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு ஊரில் நண்பர்கள் செட் ஆவதற்குள்ளாகவே அடுத்த ஊருக்கு செல்ல வேண்டியிருக்கும். அதனால் நண்பர்கள் இல்லாமல் பல நேரம் தனியாக பவுலிங் போட்டு, தனியாக பேட்டிங் செய்து, தனியாக ஃபீல்டிங் செய்து விளையாடியிருக்கிறார்.

பதின் பருவம் முடிந்து கல்லூரியில் காலடி எடுத்து வைத்த சில மாதங்களுக்குள் அப்பாவை இழந்து குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலைமை. தனக்குள்ளே இருந்த மிமிக்ரி திறமையை வெளிக்கொணர அவர் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல. வெறும் கைதட்டலுக்காக ஒரு மணி நேரம் மிமிக்ரி செய்துவிட்டு வீட்டுக்கு வந்து அடுத்த இரண்டு நாட்கள் தொண்டை வலியோடு துடித்திருக்கிறார். அம்மாவிடமோ அக்காவிடமோ சொன்னால் மிமிக்ரிக்கு தடை விழுந்துவிடுமோ என்று அதையும் மறைத்திருப்பார்.

‘கலக்கப்போவது யாரு?’ டைட்டில் ஜெயித்தபிறகு அதே டி.வியில் காம்பியரிங் செய்ய வாய்ப்பு வருகிறது. ஆனால் ரிஜெக்ட் செய்கிறார்கள். அன்று அவர் அடைந்த வேதனை. வளர்ந்து கொண்டிருக்கும்போதே திருமணம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலை. அம்மா பேச்சைத் தட்ட முடியாமல் சம்மதித்ததால் திருமண மேடையில் கழுத்தை நெரிக்கிறது பொருளாதார சூழல். வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக அதிக கூட்டம் வந்துவிட அவர்களை சாப்பிட வைக்க அம்மாவுக்கே தெரியாமல் எங்கெங்கோ கடன் கேட்க வேண்டிய சூழல். அதை அடைக்க அவர் பட்ட பாடு.. இது எல்லாமே சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மட்டும்தான்..

சினிமாவுக்கு வந்த பின்னர் இதைப் போல பல கடினமான சூழ்நிலைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறார். இப்போதும் சிவாவை சந்தோஷப்படுத்துவது பட ஓப்பனிங் மட்டுமல்ல. அவரது மகள் ஆராதனா. மனைவி ஆர்த்தி. அம்மா, அக்கா. இந்த நால்வர்தான் சிவாவின் சந்தோஷம். கடந்த 6 ஆண்டுகளாக சிவா தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை மாற்றவில்லை. 'கீப் யுவர் பேரன்ட்ஸ் ஹேப்பி... லைஃப் வில் பி தெ ஹேப்பியஸ்ட்...' சினிமாவில் பார்ட்டி நடந்தால் ஒரு ஓரமாக நின்று மற்றவர்கள் குடிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஜுஸ் மட்டும் குடித்துக்கொண்டிருப்பார். அது அவர் அம்மாவுக்கு அவர் செய்து கொடுத்த சத்தியம். சிவாவின் வாழ்க்கை எப்போதுமே சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கான பாடம்.

"லோக்கல் To மிஸ்டர்.லோக்கல்" : சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் பயணம் - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

டி.வி-யை தொடர்ந்து சினிமாவில் சாதிக்க தவமிருந்த சிவாவுக்கு இயக்குநர் பாண்டிராஜின் அறிமுகம் கிடைக்க அதன் விளைவாக உருவானது தான் ‘மெரினா’. 2012ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து தனுஷின் நண்பனாக ‘3’ படத்தில் நடித்திருந்தார். ஏற்கனவே ஹீரோவாக நடித்திருந்தாலும் கிடைக்கும் வாய்ப்புகளை இழந்துவிடக் கூடாது என்கிற காரணத்தால் அந்த கதாபாத்திரத்திற்கு சம்மதித்து நடித்திருந்தார்.

‘3’ படத்தில் தனுஷுக்கு இவர் கொடுத்த ஒவ்வொரு கவுன்டர்களும் ரசிகர்கள் மனதில் நின்றது. டி.வி ஷோக்களே சிவாவை தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேர்த்திட்ட நிலையில் சினிமா இவரை அடுத்தகட்டத்திற்கு முன்னேற்றியது. அடுத்து வந்த ‘மனம் கொத்திப் பறவை’ படத்தில் கிராமத்து நாயகனாக வந்தவருக்கு சென்னை நகரிலும் வரவேற்பு கிடைத்தது. சினிமாவுக்கு என்ட்ரியான முதல் ஆண்டே மூன்று படங்கள் ரிலீஸ், மூன்றுமே வெற்றியும் கூட.

2013ஆம் ஆண்டு மீண்டும் பாண்டிராஜின் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் விமலோடு சேர்ந்து நடித்தார். இரண்டாவது நாயகன் என்றாலும் தான் அறிமுகப்படுத்திய சிவாவுக்கு அதிகமான முக்கியத்துவத்தை கதையில் கொடுத்திருப்பார் பாண்டிராஜ். அந்த ஆண்டின் துவக்கம் கொடுத்த வெற்றி அடுத்து தனுஷின் தயாரிப்பில் வெளியான ‘எதிர்நீச்சல்’ படம் சிவாவுக்கு முக்கிய நடிகனுக்கான அந்தஸ்தை கோலிவுட்டில் தேடிக் கொடுத்தது. அனிருத்தின் இசையில் படத்தில் அமைந்திருந்த ஒவ்வொரு பாடலும் இன்றும் லூப்பில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதுவரை சிவாவை ஒரு ஹீரோ மெட்டீரியலாக ஏற்றுக்கொள்ளாத ரசிகர்களும் ஊடகமும் ‘எதிர்நீச்சல்’ படத்திற்கு பிறது முழுமையாக மாறியது.

‘எதிர்நீச்சல்’ படம் வெற்றி பெறவே, திரைத்துறையில் அவரது கிராஃப் ஒரேயடியாக மேலேறியது. சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் இடம்பிடித்தார். தொடர்ந்து வந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’ ஆகிய படங்களும் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் லிஸ்டில் சேர்ந்தன. இவற்றில் பொன்ராஜ் இயக்கத்தில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் டைட்டில் சாங்கை இவரையே பாடச் செய்து, சிவாவை ஒரு பாடகனாகவும் நமக்கு கொடுத்தார் இசையமைப்பாளர் டி.இமான். லட்சியத்தை நோக்கி ஓடும் இளைஞனாகவோ, அநியாயத்தை தட்டிக்கேட்கும் ஹீரோவாகவோ வராமல், வழக்கமான கதைகளுக்கு மாறாக தனக்குப் பொருந்தும்படியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த சிவாவுக்கு தொடர்ச்சியாக அனைத்து படங்களும் ஹிட்டாக அமைந்திருந்தது.

"லோக்கல் To மிஸ்டர்.லோக்கல்" : சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் பயணம் - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

சினிமா துறையில் அறிமுகமாகி 3 ஆண்டுகளாக தோல்வியோ எதிர்மறையான விமர்சனங்களையோ பார்க்காத சிவாவுக்கு 2015ல் வெளியான ‘காக்கி சட்டை’ சற்று சறுக்கியது. தனது ஃபார்முலாவில் இருந்து சடாரென இவர் விலகி இந்தப் படத்தில் போலிஸாக நடித்திருந்தார். சிவாவை பக்கத்து வீட்டு பையனாகவே பார்த்துவந்த கோலிவுட் ரசிகர்களுக்கு திடீரென அவரை ஆக்‌ஷன் ஹீரோவாக ஏற்கமுடியாமல் போனது படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம். இந்த தோல்வியை தொடர்ந்து ஆண்டுக்கு மூன்று படங்கள் நடித்துவந்த சிவா அதை ஒன்று அல்லது இரண்டு படங்களாக குறைத்துக் கொண்டார்.

இதனையடுத்து இவர் மீது, வருடத்தில் குறைவான படங்கள் மட்டுமே நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. மேலும், அதிர்ஷ்டத்தில் இவர் திரையுலகில் வந்துவிட்டார் என்றும், பலர் விமர்சனம் செய்யத் தொடங்கினர். ஆனால் திறமையால்தான், நான் வெற்றி பெற்றேன் என்பதை நிரூபிக்கும் வகையில், அடுத்த ஆண்டு ‘ரஜினி முருகன்’ ‘ரெமோ’ என இரண்டு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்தார். மீண்டும் அவருக்கு சறுக்கல் தொடங்கியது. வேலைக்காரன் மற்றும் சீமராஜா ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. விமர்சனங்களும் சிவாவை சஞ்சலப்படுத்தியது.

ஆனால் “ வெற்றி என்பது நம்முடையது மட்டுமல்ல. நிறைய பேர் சேர்ந்து பார்வையாளர்களை திருப்திப்படுத்துவதன் மூலம் கிடைப்பது. சவாலான விஷயம். ஒரு பயம் இருக்கும். வெற்றி பெற்றுவிட்டால் அதிக மகிழ்ச்சி ஏற்படும். தோல்வியடைந்தால் எந்த தோல்வியும் நிரந்தரம் அல்ல. அடுத்து என்ன என்ற கேள்வி தான் இருக்கும்”. என பதில் கூறி அடுத்த அடிக்கு முன்னேறி தயாரிப்பாளராக உருவெடுத்தார். எம்.ஜி.ஆர் முதல் பாலச்சந்தர் வரை பலரும் இத்துறையில் தயாரிப்பாளராகி இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்களின் கனவை நனவாக்குவதற்காகத் தான். ஆனால் தன் நண்பனின் கனவை நனவாக்க தயாரிப்பாளராக மாறினார் சிவா. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் கேமியோவில் வெளியானது ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டையும் விவசாயத்தையும் மையப்படுத்தி உருவான இந்தப் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. ஹீரோவாக வெற்றியை எதிர்பார்த்த சிவாவுக்கு தயாரிப்பாளராக கிடைத்த இந்த வெற்றியையும் கொண்டாடித் தீர்த்தார்.

இந்த நேரத்தில் ரஜினியையும் சிவகார்த்திகேயனையும் ஒரு இடத்தில் பார்த்த ரசிகர் ஒருவர் 'இப்போதைய சூப்பர் ஸ்டார் ப்ளஸ் அடுத்த சூப்பர் ஸ்டார் என இரண்டு பேருடனும் சேர்ந்து ஒரு ஃபோட்டோ எடுத்துக்குறேன்' என்று கேட்க. 'நமக்கு சூப்பர் ஸ்டார்ங்கற பேர்லாம் வேண்டாம்ணே... அது அவர் ஒருத்தர்தான். எனக்கு சிவகார்த்திகேயன்ங்கற பேர் போதும்' என பதிலளித்தார் சிவா. ஆக, அவர் மாறவில்லை. நாம்தான் மாறிக்கொண்டிருக்கிறோம்.

"லோக்கல் To மிஸ்டர்.லோக்கல்" : சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் பயணம் - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

சிவாவை சுற்றிலும் நின்று பார்க்கும் நாம் அவரது வளர்ச்சியை வைத்து அவரது கேரக்டரை பற்றிய பிம்பத்தை மாற்றிக்கொள்கிறோம். ஆனால் அது உண்மையில்லை. நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பயணிக்க துவங்கிய சிவகார்த்திகேயனை பாடலாசிரியராகவும் மாற்றினார் அனிருத். நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்து வெளியான கோலமாவு கோகிலா படத்தில் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்திருந்த ‘கல்யாண வயசு’ பாடலை எழுதியது சிவா தான். இதனைத் தொடர்ந்து ஹே போயா, காந்தக்கண்ணழகி, இது என்ன மாயமோ ஆகிய பாடல்கள் சிவாவின் வரிகளால் உருவானது. இதே போல் தயாரிப்பாளராகவும் இவர் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘டாக்டர்’ என செலக்ட்டிவான படங்களை தயாரிக்கவும் செய்கிறார்.

ஹீரோவாக இவருக்கு கடந்த ஆண்டின் துவக்கத்தில் வந்த ‘மிஸ்டர். லோக்கல்’ தோல்வியை தந்திருந்தாலும் ஆண்டின் இறுதியில் வெளியான ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘ஹீரோ’ ஆகிய இரண்டு படங்களுமே ஹிட்டடித்தன. இவற்றில் நம்ம வீட்டுப் பிள்ளை படத்திற்கு கிடைத்த வரவேற்பு சிவாவுக்கு பெரும் மன நிம்மதியை அளித்தது. 2016ல் இருந்து ஹீரோவாக பெரிய ஹிட் கிடைக்காமல் இருந்த இவருக்கு இந்த ப்ளாக்பஸ்டர் ஹிட் அடுத்தடுத்த படங்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. தற்போது இவரின் நடிப்பில் ‘டாக்டர்’, ‘அயலான்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இந்த இரண்டு படங்களுமே இந்த ஆண்டின் அதிக எதிர்ப்பார்ப்பில் இருக்கும் பட்டியலில் இருக்கின்றன.

இப்போதைய நிலையில் ஓப்பனிங்தான் ஒரு ஹீரோவின் பொசிஷனை தீர்மானிக்கிறது. தமிழ்நாட்டில் ஓப்பனிங் இருக்கும் ஹீரோக்கள் நான்கே பேர் தான். ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன். எனவேதான் இந்த நான்கு பேரின் படங்களை மட்டும் MG எனப்படும் மினிமம் கியாரண்டி முறையில் வாங்கத் தயாராக இருக்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.

"லோக்கல் To மிஸ்டர்.லோக்கல்" : சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் பயணம் - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

சினிமாவுக்கு என்ட்ரியான இந்த 8 வருடத்தில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் பெரியதாகவே இருந்திருக்கிறது. படம் வெற்றியோ தோல்வியோ எதிர் நீச்சலில் துவங்கிய இவரது சினிமா கிராஃபின் ஏறுமுகம் இன்னும் அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது. மூன்றாம் கட்ட, இரண்டாம் கட்ட நடிகன் என்ற பேரையெல்லாம் தாண்டி இன்று முதற்கட்ட நடிகனாகவும் ஓப்பனிங்கில் மாஸ் காட்டும் ரசிகர்களை கொண்ட கலைஞனாகவும் உயர்ந்திருக்கிறார். இப்போதும் கூட இவரிடம் யாராவது சினிமாவில் பேரும் புகழும் கிடைத்தபின் நிறைய மாறிவிட்டீர்களா என்று கேட்டால் தான் இருக்கும் வீடும் காரும் மட்டுமே மாறியுள்ளதாகவும் தான் இன்றும் சத்யம் தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி படம் பார்க்கும் ரசிகனகாவே சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் எதார்த்தமான பதிலையே சொல்கிறார்.

இந்த எதார்த்தம் தான் இவரது ரசிகர்களுக்கு இவரிடம் பிடித்த ஒன்றாகவும் உள்ளது. 2007ல் மீடியாவிற்குள் வருவதற்கு முன்பு வரை லோக்கலாக இருந்த சிவகார்த்திகேயன் இன்று மிஸ்டர்.லோக்கலாக மட்டுமே மாறியிருக்கின்றாலொழிய தான் பெரிதாக ஏதும் மாறவில்லை என்பதை ஒவ்வொரு படத்தின் விழா மேடைகளிலும் உறுதிப்படுத்திக்கொண்டே தான் இருக்கிறார். உண்மையிலேயே ‘எதிர் நீச்சல்’ அடித்துத்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார் சிவா.

- சுரேஷ்

banner

Related Stories

Related Stories