உணர்வோசை

“பேசாமொழி கற்ற சினிமாக்காரன்!” - காட்சிகளின் கவிஞன் பாலு மகேந்திரா நினைவு தின சிறப்புப் பகிர்வு!

‘பாலு சார்’ எனக் கொண்டாடப்படும் ‘காட்சிகளின் கவிஞன்’ பாலுமகேந்திராவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு நினைவுப் பகிர்வு..!

“பேசாமொழி கற்ற சினிமாக்காரன்!” - காட்சிகளின் கவிஞன் பாலு மகேந்திரா நினைவு தின சிறப்புப் பகிர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பாலுமகேந்திரா - சினிமா என்பது காட்சி மொழியின் கலை என தனது படங்களின் வழியாகக் காட்டிய கலைஞன். மறைந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது மட்டுமல்ல எப்போதும் உதாரணப்படுத்தப்படும் காட்சிகளை எடுத்தது அவரது கேமரா கண்கள். இன்று அவரது நினைவு தினம். ‘பாலு சார்’ எனக் கொண்டாடப்படும் ‘காட்சிகளின் கவிஞன்’ பாலுமகேந்திராவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக...

பாலுமகேந்திராவின் சினிமா ஆசைக்குத் தொடக்க விதை இலங்கையில் அவர் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது விழுந்தது. ஒரு ஆங்கிலப் படத்தின் படப்பிடிப்பில் இயக்குநர் ‘Rain' எனச் சொல்ல செட்டில் மழை பெய்யும் மாயத்தைக் கண்டு சினிமா எனும் அதிஅற்புதத்தைத் தானும் கைக்கொள்ள விரும்பினார். ‘பெய்யெனச் சொன்னால் பெய்யும் மழை’யைத் தன் குரலும் செய்யவேண்டும் என்கிற தீராத அவா எழுந்தது அவருக்கு.

‘செம்மீன்’ படத்தை இயக்கிய ராமு காரியத் தனது அடுத்த படத்தில் பாலுமகேந்திராவை ஒளிப்பதிவாளராக்கினார். ‘நெல்லு’ என டைட்டில் வைக்கப்பட்ட அந்த மலையாளப் படத்தில் கதை, கதாநாயகன் - கதாநாயகி, இயக்குநர் எல்லாவற்றையும் தாண்டிப் பேசப்பட்டது அப்படத்தின் ஒளிப்பதிவு.ரசிகர்களை மிரளச் செய்திருந்த அப்படத்தின் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. அவருக்குள் சினிமா வெறி ஊறிப்போயிருந்த காலம் அது. பதேர் பாஞ்சாலி அவருக்குள் செய்திருந்த மாயத்தில் ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் நடிக்க ‘கோகிலா’ எனும் தனது முதல் திரைப்படத்தைக் கன்னடத்தில் எடுத்தார் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் என்கிற பாலுமகேந்திரா.

“பேசாமொழி கற்ற சினிமாக்காரன்!” - காட்சிகளின் கவிஞன் பாலு மகேந்திரா நினைவு தின சிறப்புப் பகிர்வு!

ரஜினி நடிப்பில் ‘முள்ளும் மலரும்’ படத்திற்கு இயக்குநர் மகேந்திரன் ஒளிப்பதிவாளரைத் தேடிக்கொண்டிருக்க அவரது கண்களுக்கு பாலுமகேந்திராவை அறிமுகம் செய்துவைத்தார் கமல்ஹாசன். அதற்குப் பின்னான அதிசயங்களை நாம் திரையில் பார்த்தோம்.

தனது பால்ய கால நினைவுகளை அழியாத கோலங்களாக்கினார். அவர் தந்த ‘அழியாக் கோலங்கள்’ நம் மனதை விட்டு அகழாமல் எப்போதும் அழியாத ஃப்ரேம்களாகவே இருக்கின்றன. ஆல்ஃப்ரட் ஹிட்ச்சாக்குக்கு மரியாதை செய்யும் முகமாக ‘மூடுபனி’ எனும் சஸ்பென்ஸ் த்ரில்லரை எடுத்தார். மூன்றாம் பிறையின் கிளைமாக்ஸ் ரசிகர்களைக் கலங்க வைத்தது. மூடுபனியும், மூன்றாம் பிறையும் தமிழ் சினிமா ரசிகர்களைப் பெருமைகொள்ளச் செய்தன. ஒளிப்பதிவிற்காக பாலுமகேந்திராவுக்கும், நடிப்புக்காக கமல்ஹாசனுக்கும் தேசிய விருதுகளைப் பெற்றுத்தந்தது ‘மூன்றாம் பிறை’.

மற்றவர்கள் மரங்களைச் சுற்றி நாயகன் - நாயகியை டூயட் பாடவிட்ட காலத்தில், நடந்துகொண்டும், பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், துணிகாயப் போட்டுக்கொண்டும், கெக்கலித்துக்கொண்டும் இருக்கிற யதார்த்த அழகியலை காதலின் அழகியலெனக் கண்களில் காட்டியது பாலு தான். மௌனமே ஆகச்சிறந்த மொழி என்பதை தனது படங்களின் வழியே ரசிகர்களின் இதயங்களுக்குள் பரவச் செய்தவர் பாலுமகேந்திரா. இந்த மொழியில் இத்தனை காட்டலாம் எனும்போது எதற்கு வீணாய்ப் பேசவேண்டும் என்பது அவரது பாணி.

“பேசாமொழி கற்ற சினிமாக்காரன்!” - காட்சிகளின் கவிஞன் பாலு மகேந்திரா நினைவு தின சிறப்புப் பகிர்வு!

அவரது கதை நாயகிகள் அன்றைக்கு பெரும்பாலானோரின் கனவுக் கன்னிகளாக மின்னினார்கள். ஷோபாவும், மௌனிகாவும், அர்ச்சனாவும் என்றென்றைக்கும் ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்ட்டில் இருப்பதற்குக் காரணகர்த்தா பாலுமகேந்திரா எனும் அசாத்தியங்கள் நிறைந்த கலைஞன் இல்லையா? பெண்ணானவள் அழகி எனும் அங்கீகாரம் பெற பாலுமகேந்திராவின் லென்ஸுக்கு முன்பு கடந்து சென்றால் போதும். அரிதாரம் இல்லாமல் முகங்களை அத்தனை அழகாக்கியவர் அவர்.

வெளிச்சமும் இருளும் தான் உலகின் மீப்பெரும் சக்திகள். அவற்றைத் தாண்டிய எந்தச் செயற்கை ஒளியும் ஒரு சிறப்பான படத்தைத் தந்துவிட முடியாது. ‘Available light’-ல் படம் எடுக்கும் உத்தியை தனது அபாரங்களில் ஒன்றாகக் கொண்டிருந்த கலைஞன் பாலு. ஒளிப்படத்தின் வழியே பிம்பத்தை அல்ல; உண்மையைக் காட்டமுடியும் என அவர் நம்பினார். அழகியல் என இன்று நாம் உதாரணம் கூறும் சினிமாக் காட்சிகளை அன்று பாலுமகேந்திரா எடுத்திருந்தார். சூரியனை, இருளை, ரயிலை, தண்டவாளத்தை, நீண்ட தெருவை, மலைகளை, கடற்கரையை, மரங்களை, மழைப்பொழிவை எவ்வித இடருமின்றிக் காட்டியது அவரது கேமரா.

நகரத்தின் தெருக்களில் வாடகைக்கு வீடு தேடும் ஒரு எளிய குடும்பத்தின் வலியை, வேதனையை, பிரச்னைகளை, அது சார்ந்த நடைமுறைச் சிக்கல்களைப் பேசிய ‘வீடு’ திரைப்படம் தேசிய விருது வாங்கியதில் வியப்பேதுமில்லை. அடுத்து வந்த சந்தியா ராகமும் விருதுகளை அள்ளியது. “எந்தச் சமரசமும் இல்லாமல் நினைத்ததை இயக்கியிருக்கிறேன்” என பாலுமகேந்திரா இந்தப் படம் பற்றிச் சொன்னார். பொதிகையில் ஒளிபரப்பப்பட்ட இப்படம் இதுவரை எந்தத் திரையரங்கிலும் திரையிடப்படவில்லை என்பது சோகம்.

“பேசாமொழி கற்ற சினிமாக்காரன்!” - காட்சிகளின் கவிஞன் பாலு மகேந்திரா நினைவு தின சிறப்புப் பகிர்வு!

கமர்ஷியல் சினிமா என சினிமா உலகமும், ரசிகர்களும் ஏற்படுத்தி வைத்திருந்த கோட்டைத் தாண்டிக் குதித்தவர் பாலு. வியாபார நோக்கத்திற்காகப் படம் எடுப்பதை அறவே வெறுத்தார். கலையை சினிமாவில் புகுத்துவதே சினிமாக்காரனின் பிறவிக் கடமை எனச் செய்து வந்தார். நீங்கள் கேட்கும் கமர்ஷியல் சினிமா இதுதானே.. இதோ என அவர் இடக்கையால் வீசிய படம் ‘நீங்கள் கேட்டவை’. இப்படத்தின் 5 பாடல்களும் வெகுசிறப்பான வரவேற்பைப் பெற்றன.

இளையராஜாவுக்கும் பாலுமகேந்திராவுக்கும் அத்தனை ஆத்மார்த்தம். தனது மூன்றாவது படத்தில் இளையராஜாவோடு கைகோத்தவர் கடைசிப் படமான ‘தலைமுறைகள்’ வரை அந்தக் கையை இறுகப் பற்றியிருந்தார். இடையே, சந்தியா ராகம் படத்திற்கு மட்டும் எல்.வைத்யநாதன் இசை. பாலுமகேந்திரா வார்த்தைகளால் அல்ல; காட்சியால் பேசுபவர். போலவே, இளையராஜா இசையால் மட்டுமல்ல, மௌனத்தாலும் பேசுபவர். இருவரும் இணையும்போது இசை தானாக தனது இடமெல்லாம் நிரம்பிக்கொண்டது. அப்படி வந்த பாடல்கள் அத்தனை அத்தனை.

மலையாளத்தில் இவர் முதன்முதலாக இயக்கிய ‘ஓளங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘தும்பி வா தும்பக்குடத்தின்’ பாடலின் மெட்டு ‘சங்கத்தில் பாடாத கவிதை...’ என தமிழிலும், தெலுங்கு, கன்னடம், இந்தி என எல்லா மொழிகளிலும் வெவ்வேறு பாடல்களாக செம ஹிட்டானது. இளையராஜாவுக்கும், பாலுமகேந்திராவுக்கும் எப்போதைக்குமான ஃபேவரிட் லிஸ்ட்டில் “தும்பி வா தும்பக்குடத்தின்” பாடலுக்கு தனி இடமுண்டு.

“ஒரு செடி ஒரு ஃபிளவர்” எனக் காதல் புனிதமாகப் பார்க்கப்படும் சமூகத்தில் ஏக காலத்தில் எத்தனை பேர் மீதும் மிகையான காதல் ஏற்படும் என்கிற யதார்த்தத்தை ஒளிவுமறைவின்றிச் சொல்ல அவரால் முடிந்தது. அகிலாவுடனான காதலையும், ஷோபாவுடனான காதலையும், மௌனிகாவுடனான காதலையும் அதனதன் நியாயங்களோடே ஏற்றுக்கொண்டவர் அவர். காதலிப்பதைக் காட்டிலும் உண்மையில் காதலிக்கப்படுதல் வரம். அந்தச் சூழலைச் சந்திக்கும்போதுதான் அதன் வேறுபாட்டைப் புரிந்து அதனுள் லயிக்க முடியும். பாலுமகேந்திரா காதலிக்கப்பட்டார். காதலின் நியாய, அநியாய பிம்பங்களைத் தனது கண்களால் புறந்தள்ளி காதலால் வரைந்தார்.

“மற்றவர்கள் ஒளிப்பதிவில் படு சுமாராகத் தெரியும் நீங்கள் பாலுமகேந்திரா ஒளிப்பதிவில் பேரழகியாகத் தோன்றுகிறீர்களே... எப்படி..?” எனும் கேள்வி ஒன்றிற்கு ஷோபா சொல்லியிருந்த பதில், "மற்றவர்கள் என்னை கேமரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் கொண்டு ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்க அங்கிள் என்னைக் கேமரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் இந்த மூன்றோடும் நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒளிப்பதிவில் நான் பேரழகியாக ஜொலிப்பதற்கு இதுதான் காரணம்." என்பதுதான்.

“பேசாமொழி கற்ற சினிமாக்காரன்!” - காட்சிகளின் கவிஞன் பாலு மகேந்திரா நினைவு தின சிறப்புப் பகிர்வு!

“ “ரொம்பவும் உடைந்துபோன ஒரு தருணத்தில், நான் உங்ககூடவே இருந்திரட்டுமா?” என்று கண்கலங்கி நின்ற அந்த சின்னப் பெண்ணுக்குப் புரியும்படி புத்திமதி சொல்லி, அந்த உறவை நான் முளையிலேயே கிள்ளிப்போட்டிருக்க வேண்டும். ஏனோ, அதை நான் செய்யவில்லை.அந்த அபலைப் பெண்ணின் கேள்விக்குப் பின்னே இருந்த வேதனை, அவமானம், வலி அனைத்தையும் நான் அறிவேன். புத்திப்பூர்வமாக வாழாமல், உணர்வுப்பூர்வமாக மட்டுமே வாழத் தெரிந்த என்னை அது வெகுவாகப் பாதித்தது. அதன் விளைவுதான் எனக்கும் மௌனிக்குமான உறவு.” என மௌனிகாவுடனான பந்தம் பற்றிச் சொல்லியிருக்கிறார் பாலுமகேந்திரா.

இவற்றிற்கு முன்னே, அகிலாம்மாவைப் பற்றி, “உள்ளும் புறமும் அழகானவள் அகிலா. எனக்கு மனைவியாக வந்தபோது, அவளுக்குப் பதினெட்டு வயது. சரியாகப் புடவை கட்டக்கூடத் தெரியாத வெகுளிப்பெண். இந்த யுகத்தில் பிறந்திருக்க வேண்டிய பெண்ணல்ல அகிலா. எனக்கு மனைவியாக வந்ததுதான் அகிலாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய துரதிர்ஷ்டம். அவளுக்கு வலிகளையும் காயங்களையும் தவிர, வேறு என்ன தந்தேன் என்று நினைக்கும்போது எங்காவது கண்காணாமல் போய்விடத் தோன்றுகிறது!” என்றிருக்கிறார்.

“பேசாமொழி கற்ற சினிமாக்காரன்!” - காட்சிகளின் கவிஞன் பாலு மகேந்திரா நினைவு தின சிறப்புப் பகிர்வு!

தமிழில் 'உலக சினிமா' படைக்கும் நோக்கோடு இன்று இயங்கிவரும் பாலா, வெற்றிமாறன், சீனு ராமசாமி, ராம், மீரா கதிரவன் உள்ளிட்ட பலரை உருவாக்கியது பாலுமகேந்திராவின் பட்டறை. அவரது சினிமாவைப் பார்த்தே அவரை ஆசானாக ஏற்றுக்கொண்டோர் பட்டியல் இன்னும் நீளம்.

கொஞ்சமே கொஞ்சமாகப் பேசிய பாலுமகேந்திராவின் கேமரா எண்ணிலடங்கா மொழிகளைப் பேசியது. தமிழ் சினிமாவில் காட்சியமைப்புகளுக்கான பாடமாக பாலுமகேந்திரா என்றும் இருப்பார். எப்போதும் கொண்டாடப்படுவார் அந்த கேமரா கவிஞர்!

banner

Related Stories

Related Stories