சினிமா

“சினிமாவின் எந்தப் பகுதியிலும் இருக்கும் இவரது அத்தியாயம்” : கமல்ஹாசன் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

நடிகர் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு.

“சினிமாவின் எந்தப் பகுதியிலும் இருக்கும் இவரது அத்தியாயம்” : கமல்ஹாசன் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் தரத்தை உலக சினிமாவுக்கு நிகராகக் கொண்டு சென்றவர், இந்திய சினிமாவின் இலக்கணத்தை மற்றியமைத்தவர், தன் படங்களால் கோலிவுட்டின் மதிப்பை பன்மடங்கு உயர்த்திய கலைஞானி. ‘இவர் யார் என்று தெரிந்தவருக்கு அவர் தீ என்பதும் புரிந்திருக்கும்’. ஒன்றின் மீது நாம் கொள்ளும் காதல் என்பது நம்மை அதுவாகவே மாறச்செய்வது என்பது நடிகர் கமல்ஹாசனுக்கு முழுமையாகப் பொருந்தும். பல படங்களில் பட வேடங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் ஒரே படத்தில் பத்து வேடங்களில் நடித்த கலைமகன் இவர்.

படத்துக்குப் படம் மாறுபட்ட கதாபாத்திரம், மாறுபட்ட வேடங்கள் என தன்னைத்தானே செதுக்கிக்கொண்டார் கமல். இந்திய திரையுலகில் எந்த ஒரு முக்கியப் புள்ளியையும் நேரடியாக இணைத்துக் கோடு போடக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆளுமை கமல் மட்டுமே. அவர் பார்த்துப் பழகாத ஜாம்பவான்வளே கிடையாது, தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர் என அனைவரோடும் நடித்த கமலுக்கு வட இந்தியாவிலும் ராஜ்கபூர், தேவ் ஆனந்த், திலீப்குமார், அமிதாப் பச்சன்,ஷாருக்கான் வரை தொடர்பு இருக்கிறது.

“சினிமாவின் எந்தப் பகுதியிலும் இருக்கும் இவரது அத்தியாயம்” : கமல்ஹாசன் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

இவரின் திரைப்பயணத்தை சற்றே பின்னோக்கிப் பார்த்தால் கொஞ்சம் மிரட்சியாக இருக்கும். தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தற்போது உலக நாயகனாக ஜொலித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். ‘களத்தூர் கண்ணம்மா’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தொடர்ந்து 6 படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்திருந்தார். 1973ம் ஆண்டு ‘அரங்கேற்றம்’ படத்தில் கமல் குட்டி கதாநாயகனானார். அடுத்த 8 ஆண்டுகளில் தனது 100வது படத்தை எட்டிவிட்டார் கமல்ஹாசன். இந்த கலைஞனின் மதிப்பும் இந்த கலைக்காக அவரின் அர்ப்பணிப்பும் இதிலிருந்தே உங்களுக்கு தெரிந்திருக்கும்.

1974ல் வெளியான ‘கன்னியாகுமரி’ என்ற மலையாளப் படம் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்தார். இந்தப் படம் அவருக்கு அம்மொழிக்கான ஃபிலிம் ஃபேர் விருதினைப் பெற்றுத் தந்தது. தமிழ்த் திரையுலகில் நாயகனாக அவர் அறிமுகமான முதல் படம், கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’. இப்படத்திற்காக, அவருக்கு ஃபிலிம்ஃபேர் விருதும், தேசிய விருதும் கிடைத்தது.

1970களில், ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். ’16 வயதினிலே’, ‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’, ‘இளமை ஊஞ்சல் ஆடுகிறது’ போன்ற திரைப்படங்கள் அவ்விருவரின் கூட்டணிக்கு நல்ல எடுத்துக்காட்டு. பின்னர், தொடர்ந்து வெற்றிப் படங்களான ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘நீயா’, ‘கல்யாண ராமன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ராஜபார்வை’, ‘மூன்றாம் பிறை’ ஆகிய படங்கள் இவருக்குப் பல விருதுகளைத் தேடித்தந்தது.

“சினிமாவின் எந்தப் பகுதியிலும் இருக்கும் இவரது அத்தியாயம்” : கமல்ஹாசன் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

அதே சமயத்தில், அவர் இந்தித் திரையுலகிலும் கவனம் செலுத்தினார். ‘ஏக் துஜே கே லியே’, ‘சாகர்’, ‘ராஜ் திலக்’, கிரஃப்தார்’ ஆகிய திரைப்படங்கள் அவர் நடித்த இந்தி திரைப்படங்களில் சில. 1990களில் வெளியான ‘அபூர்வ சகோதர்கள்’, ‘குணா’, ‘தேவர் மகன்’, ‘மகாநதி’, ‘குருதிப்புனல்’, ‘இந்தியன்’, ‘அவ்வை ஷண்முகி’ போன்ற படங்கள், வெற்றிகரமான பாக்ஸ் ஆஃபிஸ் திரைப்படங்களாக உருவெடுத்தன. 1990ல், அவரது அற்புதமான நடிப்புத் திறமைக்காக, இந்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கியது.

இரண்டு ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப்பின் வெளியான திரைப்படம், ‘ஹே ராம்’. இது அவருடைய சொந்தத் தயாரிப்பான ‘ராஜ்கமல்’ பட நிறுவனத்தின் படைப்பாகும். பின்னர், ‘தெனாலி’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசூல் ராஜா MBBS’ போன்ற திரைப்படங்கள் நகைச்சுவைக்காகப் பெரிதும் பேசப்பட்டவை. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘தசாவதாரம்’ ஆகிய படங்கள் உலகளவில் பெரும் வெற்றியைத் தேடித்தந்தன. அவர் நடித்து, இயக்கி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான ‘விஸ்வரூபம்’ பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெற்று வெளிவந்த சில நாட்களிலேயே 120 கோடி வருவாயை ஈட்டியது.

“சினிமாவின் எந்தப் பகுதியிலும் இருக்கும் இவரது அத்தியாயம்” : கமல்ஹாசன் பிறந்ததின சிறப்புப் பகிர்வு!

கமல் பல படங்களுக்கு, பாடல்களும் எழுதியிருக்கிறார். மேலும், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் ஆங்கிலத்தில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியும் உள்ளார். கமல்ஹாசன், பரதநாட்டிய கலைஞர் என்பதால், பல படங்களுக்கு நடனக்கலைஞராகவும் இருந்துள்ளார்.

இப்படியாக அனைத்தையும் சினிமாவிலிருந்தே கற்றவர் கமல். தமிழ் சினிமா வரலாற்றையே க.மு, க.பி என்றே வரையறை செய்யும் அளவுக்கானது அவரது பங்களிப்பு. களத்தூர் கண்ணம்மா தான் தமிழ் சினிமாவின் வரலாற்றில் இவரது தொடக்கம். குழந்தை நட்சத்திரம், நடிகர், பாடலாசிரியர், பாடகர், வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர், நடன ஆசிரியர், ஒப்பனையாளர் என சினிமாவின் எந்தப் பகுதியில் இருந்து தொடங்கினாலும் அதில் கமல் எனும் அத்தியாயம் இருக்கத்தான் செய்யும்.

- சுரேஷ்

banner

Related Stories

Related Stories