சினிமா

அசுரனை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் இமயம் பாரதிராஜா..!

அசுரனின் நோக்கம், எவரையும் புண்படுத்துவது அல்ல... தமிழக மக்களை நாம் என்ற ஓருணர்ச்சிக்கு பண்படுத்துவதாகும் எனவே கசப்பை மறந்துவிட்டு அசுரன் படத்தை பாருங்கள் என இயக்குனர் இமயம் பாரதிராஜா கூறியுள்ளார்.

அசுரனை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் இமயம் பாரதிராஜா..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘அசுரன்'. இத்திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அசுரன் படத்தைக் குறித்து திரைத்துறையினர், சினிமா ரசிகர்கள் என பலரும் பாரட்டி வருகின்றனர். இந்நிலையில் ‘அசுரன்' படத்தை இயக்குநர் பாரதிராஜா பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''என் இனிய தமிழ் மக்களே, ‘தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை'யின் சார்பாக, உங்கள் பாரதிராஜா.

நமக்குள் சாதி சமய வேற்றுமைகள் இல்லை. இந்தக் கருத்தைத்தான் திரைப்படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். சாதி, சமயம், மொழி, இனம், நாடு போன்ற தற்சார்புப் பற்றுகளிலிருந்து (Self regarding sentiments) நீங்கியவர் வெற்றிமாறன்.

அதனால்தான் ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் துயரத்தை, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை, அவர்களது எழுச்சியை - அவர்களது வலியையும், அவமானத்தையும் உள்வாங்கி - திரைப்படமாக எடுத்திருக்கிறார்.

ஒடுக்கப்பட்டோரின் திரைப்படத்தை ஒடுக்கப்பட்டோர்தான் எடுக்க முடியும் என்பது பழங்கதை என்ற உண்மையை, நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் கரிசல்காட்டுச் சூறைக் காற்றின் வேகத்தில் உணர்ச்சிப் பெருக்குடன் ஒரு கதையாகச் சொல்லியிருக்கிறார்.

அசுரனை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் இமயம் பாரதிராஜா..!

ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த கலைஞர்கள் வெற்றிமாறனைக் காட்டிலும் சிறந்த படத்தினைக் கொடுக்கமுடியும், தங்களது நேரடி அனுபவங்களைக் கதையாகச் சொல்வதால். அப்படியான படங்கள் – அசுரனையும் மிஞ்சிய அப்படியான படங்கள் – தமிழில் ஓடட்டும். அப்படிப் படங்கள் வரும்போது அந்தப் படங்களை வரவேற்கிற முதல் தமிழனாக இந்த பாரதிராஜா ஓடோடி வந்து அங்கே நிற்பேன். ஆனால், என்னை முந்திக்கொண்டு வந்து நிற்கிற ஆள் வெற்றிமாறன்.

அதற்கு முன்னர், தமிழக மக்களாகிய நாம், அசுரனை வரவேற்போம். இந்தப் படத்தில் வருகிற ஒரு வசனம் குறிப்பிட்ட வகுப்பினரை - உயர் வகுப்பினராகத் தம்மை அறிவித்துக்கொள்கிற குறிப்பிட்ட வகுப்பினரைக் காயப்படுத்தியிருப்பதாகக் கருத்துகள் வெளிவந்தன. பின்னர், அந்த வசனமும் நீக்கப்பட்டுவிட்டது.

அசுரனை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் இமயம் பாரதிராஜா..!

அசுரனின் நோக்கம், தமிழக மக்களில் எவரையும் புண்படுத்துவது அல்ல; தமிழக மக்களை, ‘நாம்' என்ற ஓருணர்ச்சிக்குப் பண்படுத்துவதாகும்.

இருந்தபோதிலும், எவராவது புண்பட்டிருந்தால் வெற்றிமாறனின் சார்பாக, ‘தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை' தனது வருத்தத்தைத் தெரிவித்துப் கொள்கிறது. இப்படியொரு நல்ல திரைப்படத்தைக் கொடுத்தமைக்காக, வகுப்பு வேற்றுமைகள் ஒழிந்ததொரு தமிழ் நிலத்தைக் கனவுகண்டமைக்காக, வெற்றிமாறனின் பெருமையானது பாரதிராஜாவாகிய எனது பெருமையுமாகும்.

அதனாலேயே வெற்றிமாறனின் சார்பாக நான் கேட்டுக்கொள்வதெல்லாம் ... உங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து அந்த வசனம் நீக்கப்பட்டு விட்டது. கசப்பை மறந்துவிட்டுப் படம் பாருங்கள். உங்களுக்கும் பிடித்த படம் தான் என்று உணர்வீர்கள். ஒரு முறை பார்த்தால் பிறரையும் பார்க்கச்சொல்லி நீங்களே பரிந்துரை செய்வீர்கள்'' எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories