சினிமா

‘எல்லோருக்குமான பாடல்களை எழுதிய என்றென்றைக்குமான வழித்துணை’ நா.முத்துக்குமார்!

கடன் வாங்கிப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்த அப்பாவின் கூரைகளிலிருந்து நமக்குப் பாடல் மழை பொழிய வந்த வெண் மேகம் முத்துக்குமார்.

‘எல்லோருக்குமான பாடல்களை எழுதிய என்றென்றைக்குமான வழித்துணை’ நா.முத்துக்குமார்!
Art : A.Nanmaran
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

“புத்தகம் வெளியிட முடியாமல் தவிக்கும் சக கவிஞர்களுக்கு" தனது புத்தகத்திற்கு இப்படி ஒரு முன்னுரையைக் கொடுத்தவர் முத்துக்குமார். “இவரது புத்தகத்தை எந்தப் பக்கம் திருப்பினாலும் நல்லது மட்டுமே நம் கண்களுக்குத் தெரியும்” - நா.முத்துக்குமாரைப் பற்றி பாரதிராஜா இப்படி எழுதி இருப்பார். எல்லோருக்கும் பிடிக்கும் மனிதனாய் வாழ்ந்துவிட முடியுமா? எல்லோருக்கும் பிடிக்கும் வரிகளை எழுதிவிட முடியுமா?

வாழ்வின் எல்லா நேரங்களிலும், எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் கூடவே நடந்து வந்து, சாமானியனின் கைகள் கோர்த்து நடப்பது இசை என்றால், கடந்த 25 வருடங்களாக இசையோடு சேர்ந்து நம்மோடு பயணிக்கும் வரிகள் முத்துக்குமாரது வரிகள். "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே" என்று மகன்களுக்கும்/மகள்களுக்கும் 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்று அப்பாக்களுக்கும் சேர்த்து எழுதியவர் நா.முத்துக்குமார். ஒரே ஒரு வாழ்க்கையில் ஓராயிரம் மனிதர்களின் உணர்வுகள் பேசியவர்.

இயற்பியலில் இளங்கலை படித்த முத்துக்குமார் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலை படிக்கச் சென்ற கதை சற்று சுவாரஸ்யமானது, 'உன்னைத் தமிழ் பிரிவில் எப்படிச் சேர்ப்பது?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தான் எழுதிய தமிழ்க் கவிதைகள் நிறைந்த நோட்டு புத்தகங்களோடு தமிழ்த் துறைத்தலைவரைப் பார்க்கச் சென்ற முத்துக்குமாரையும், அந்த புத்தகங்களைப் படித்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்ற மெட்ராஸ் பல்கலைக்கழக தமிழ் பிரிவினரையும், நினைவுகூருகிறார் அவரது கல்லூரி கால நண்பர் வளவன் பெரியார்தாசன்.

‘எல்லோருக்குமான பாடல்களை எழுதிய என்றென்றைக்குமான வழித்துணை’ நா.முத்துக்குமார்!

படித்து முடித்ததும் சினிமா படம் இயக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்த முத்துக்குமார் படம் இயக்காதது அவருக்கு வருத்தம் அளித்திருக்குமா தெரியவில்லை, அவர் பாடலாசிரியராக கிடைத்தது இந்த கால் நூற்றாண்டின் ரசிகர்களுக்குக் கிடைத்த கொடை. கடன் வாங்கிப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்த அப்பாவின் கூரைகளிலிருந்து நமக்குப் பாடல் மழை பொழிய வந்த வெண் மேகம் முத்துக்குமார்.

இப்போது வேலை, குடும்பம் என்று மத்திய வயதுக்கான எல்லா கூறுகளையும் பார்த்துக்கொண்டிருக்கும் 90'ஸ் கிட்ஸ்க்கு பால்யத்தின் எல்லா கோணங்களையும் காண்பித்த பாடலாய் இருக்கிறது 'வெயிலோடு விளையாடி... வெயிலோடு உறவாடி...’ பள்ளிக் காதல், கல்லூரிக் காதல் என்று நமக்கிருக்கும் எல்லாக் கதைகளிலும் சில பாடல்கள் இருக்குமென்றால் அதில் முத்துக்குமாரின் பாடல்கள் நிச்சயம் இருக்கும்.

இன்று தமிழ் சினிமாவின் நம்பிக்கை மிகுந்தவர்களாக இருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் என எல்லோருக்குமான பயணத்தில் ஒரு அங்கமாகவே மாறிப்போனவர் நா.முத்துக்குமார். அவர்களுக்கு மட்டுமா நமக்கும் தான்.

‘எல்லோருக்குமான பாடல்களை எழுதிய என்றென்றைக்குமான வழித்துணை’ நா.முத்துக்குமார்!

'ட்ரெண்ட்' மாறிக்கொண்டே இருக்கிறது. சினிமாவுக்கு போய் படம் பார்ப்பது மாறி இப்போது NETFLIX-ல் படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம், இருப்பினும் ஒரு காதல் தோல்வியிலோ, கொண்டாட்டத்திலோ , மழை நாளிலோ, கடற்கரை ஓரங்களிலோ, ரயில் பயணங்களிலோ நம்மைப் போன்ற எல்லா வழிப்போக்கர்களுக்கும் துணையாகவே வருகிறார் நா.முத்துக்குமார்.

“பல முகங்கள் வேண்டும்; சரி மாட்டிக் கொள்வோம். பல திருப்பம் தெரியும்; அதில் திரும்பிக் கொள்வோம். கதை முடியும் போக்கில் அதை முடித்துக் கொள்வோம். மறு பிறவி வேண்டுமா..?” அவர் கேட்ட கேள்விக்கு அவரே பதிலாகி இருக்கிறார், இப்படி ஒரு தலைமுறையின், ஒரு காலத்தின் நீரோட்டத்தில் கலந்திட்ட முத்துக்குமாருக்கு இறப்பேது? இப்போதும் கூட உங்களின் பாடல்களைக் கேட்டவாறே எல்லோரும் பயணிக்கிறோம்.

- சௌமியா ராமன்

banner

Related Stories

Related Stories