கவிஞரும், எழுத்தாளருமான ஃபிரான்சிஸ் கிருபாவுக்கு பாடலாசிரியராக தொடர் வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளது ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம்.
‘கன்னி’ நாவல், ‘மல்லிகைக் கிழமைகள்’ உள்ளிட்ட சில கவிதைத் தொகுப்புகளைப் படைத்த எழுத்தாளரும், கவிஞருமான ஃபிரான்சிஸ் கிருபா, சில ஆண்டுகளாகவே சரியான வேலையில்லாமல் மன ரீதியான சிக்கல்களையும் அனுபவித்து வருகிறார்.
கடந்த வாரம், எழுத்தாளர் ஃபிரான்சிஸ் கிருபா ஒரு கொலை விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கோயம்பேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் உண்மை அறிந்து குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்.
ஃபிரான்சிஸ் கிருபா கைது செய்யப்பட்டதும், அவரது நண்பர்களும் வாசகர்களும் தங்களது உள்ளக் குமுறலை சமூக வலைதளங்களில் கொட்டித் தீர்த்தனர். அவருக்கு வேலை கொடுத்து, மீட்டெடுக்க வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், ஃபிரான்சிஸ் கிருபாவுக்கு பாடலாசிரியராக தொடர் வாய்ப்பு வழங்க முன்வந்துள்ளது ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம். இந்தச் செயலுக்காக, ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.