உலகம்

இந்தியாவுக்கு புதிய நெருக்கடி : 25% வரி விதிக்க அதிபர் டிரம்ப் திட்டம் - என்ன செய்யப் போகிறார் மோடி?

இந்தியா, சீனா, வங்கதேசம், கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, தைவான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 14 நாடுகளைக் குறிவைத்து அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கை சர்வதேச வர்த்தக அரங்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் இதுகுறித்துத் தெரிவிக்கையில், “இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால் 17 சதவிகிதம் வரி வரம்பு நிர்ணயிக்கப்படும். ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால் 25 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தொழில்துறைக் கொள்கைகள், தொழிலாளர் பாதுகாப்பு நடைமுறைகள், நிதியுதவிகள் மற்றும் சந்தை அணுகல் கட்டுப்பாடுகள் அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்கா குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளது.

அமெரிக்காவின் அந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா ஏற்கவில்லை. இந்தியாவின் எந்தவொரு துறையிலும் கட்டமைப்பு ரீதியாக உபரி உற்பத்தித் திறன் இல்லை என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் இருதரப்பு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிச் சந்தைகளில் ஒன்றாக அமெரிக்கா இருப்பதால், இந்த வரி முன்மொழிவு அமலுக்கு வந்தால் இந்தியாவின் பின்னலாடை, ஆயத்த ஆடைகள், கடல் உணவு, காலணி, பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட ஏற்றுமதித் துறைகள் பாதிக்கப்படலாம்.

அமெரிக்கச் சந்தையில் இந்தியப் பொருட்களின் விலை அதிகரிப்பதுடன் போட்டித்திறனும் குறைய வாய்ப்புள்ளது.

இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் முன்மொழிவு, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவிலும் எதிர்கால வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளிலும் முக்கியத்துவம் பெறும்.

இதற்கான பொது விசாரணை 2027 ஜனவரி 25-ஆம் தேதி தொடங்க உள்ளது.

Also Read: “மாநில சுயாட்சி, உண்மையான கூட்டாட்சிக்கான தி.மு.க-வின் அறப்போர் தொடரும்” : மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!