உலகம்
ஆப்கானில் MMA-வை தொடர்ந்து செஸ் விளையாட்டுக்கு திடீர் தடை... தாலிபான் அரசின் அட்ராசிட்டிக்கு காரணம் என்ன?
கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியமைத்தது. அப்போது இருந்தே அங்குள்ள பல்வேறு சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டது. குறிப்பாக பெண்கள் கல்வி, வேலை உள்ளிட்டவைகளில் ஏற்பட்ட மாற்றம், மீண்டும் அந்நாட்டை பின்னோக்கி இழுத்து செல்கிறது.
மேலும் மத கலாச்சாரத்திற்கு மட்டுமே அந்நாட்டு தாலிபான் அரசு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தாலிபான் ஆட்சியமைக்கும் முன், பெண்கள் கல்வி, வேலை உள்ளிட்டவைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது என்று உறுதி அளித்தது. ஆனால் ஆட்சியமைத்த பின்னர் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதனையே செய்து வருகிறது. தாலிபான் அரசின் இந்த செயலுக்கு உலக நாடுகள் மத்தியில் பல கண்டனங்கள் எழுந்தாலும் அதனை கண்டும் காணாததும் போல் இருந்து வருகிறது.
அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கும் தற்போது காலவரையற்ற தடையை விதித்துள்ளது தாலிபான் அரசு. அதாவது இஸ்லாமிய மத சட்டமான ஷரியா சட்டத்தில் சூதாட்டம் தடை விதிக்கப்பட்ட ஒன்று. அந்த வகையில் செஸ் விளையாட்டையும் ஒரு சூதாட்ட விளையாட்டாக கருதி இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தாலிபான் விளையாட்டு இயக்குநரகத்தின் செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி கூறுகையில், சூதாட்டத்தை ஊக்குவிக்கக்கூடிய ஒரு விளையாட்டாக செஸ் விளையாட்டை கருதி தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் இந்த விளையாட்டு இஸ்லாமிய கொள்கைகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை மத அதிகாரிகள் பரிசீலிக்கும் வரை தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன்படி நேற்று முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், மத தலைவர்கள் இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் கொடுக்கும் வரை தடை உத்தரவு அமலில் இருக்கும். மேலும் இந்த தடை உத்தரவை மறு பரிசீலனை செய்ய எந்த கால அவகாசமும் கிடையாது.
ஏற்கனவே பாக்சிங், ஜூடோ, மல்யுத்தம் உள்ளிட்டவை அடங்கிய கலப்பு தற்காப்புக் கலைகள் (MMA) எனப்படும் விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கிருக்கும் விளையாட்டு வீரர்கள் செஸ் விளையாட்டை நோக்கி தங்கள் ஆர்வத்தை காட்டுகின்றனர். இந்த சூழலி இப்படி ஒரு தடை உத்தரவு அங்கு பலர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!