உலகம்
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 41 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை அறிவித்ததும் ஹமாஸின் கூட்டாளியும், லெபனானில் செயல்படும் அமைப்புமான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதோடு ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களை குறிவைத்து தாக்குதலும் நடத்தி வருகிறது.
இதில் ஹிஸ்புல்லாவின் உச்சபட்ச தலைவரும் அந்த அமைப்பின் பொதுசெயலாளருமான ஹசன் நஸ்ருல்லா, முக்கிய படை தளபதி இப்ராஹிம் அகில் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் பலரும் இஸ்ரேலில் துல்லிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லாவின் வாரிசாக கருதப்பட்டரும், ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹஷேம் சபிதீனும் கொல்லப்பட்டார். இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தித்தொடர்பாளர் முகமது அஃபீப் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ரஸ் அல் நபா பகுதியில் இஸ்ரேல் நேற்று வான்வெளித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தித்தொடர்பாளர் முகமது அஃபீப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் சில முக்கிய ஹிஸ்புல்லா தலைவர்களும் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று இஸ்ரேல் ராணுவம் கருத்து தெரிவித்துள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!