உலகம்

அகதிகள் குறித்த மசோதா : எதிர்த்த சொந்த கட்சி எம்.பி-க்கள்.. ரிஷி சுனக்கின் பிரதமர் பதவிக்கே ஆபத்து !

பிரிட்டனின் பழமைவாத ( கன்சர்வேடிவ் ) கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரது அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.

இதன் காரணமாக அவர் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர். இறுதிச்சுற்றில் வென்று லிஸ் ட்ரஸ் பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமராக தேர்வாகினார்.

இவர் பதவியேற்றதும் தொடர் எதிர்ப்பு காரணமாக 45 நாட்களில் பிரிட்டன் பிரதமர் பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக அடுத்த கன்சர்வேட்டிவ் கட்சி பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்றார்.

இவர் பதவியேற்ற சூழல் கடும் நெருக்கடிக்குள்ளாக அமைந்துள்ள நிலையில், நெருக்கடியை சமாளிக்க பல அதிரடி நடவடிக்கைகளை ரிஷி சுனக் எடுத்து வருகிறார். எனினும் பிரிட்டன் ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ள நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்பை ரிஷி சுனக்கும் சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் அகதிகள் குறித்த மசோதா ரிஷி சுனக்கின் பதவிக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. போர் அதிகம் நடக்கும் நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு அகதிகளாக வருவோரை கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு அனுப்ப "Stop The Boats" என்ற திட்டத்தை ரிஷி சுனக் அறிவித்தார்.

இந்த திட்டத்தை பிரிட்டன் உயர்நீதிமன்றமே நிராகரித்தும், ரிஷி சுனக் இதற்கு என அவசர சட்டத்தை கொண்டுவந்தார் . இது விரைவில் ஓட்டெடுப்புக்கு விடப்படும் நிலையில், இந்த மசோதா அவரது சொந்த கட்சி எம்.பிகளையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கன்சர்வேடிவ் கட்சியின் எம்பி ஆண்ட்ரியா ஜென்கின்ஸ் ரிஷி சுனக்கிற்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்குப் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், சிலரும் ரிஷி சுனக்கிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.இதனால் இந்த மசோதா தோல்வியை சந்தித்தால் ரிஷி சுனக் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டியிருக்கும் என்பதால் இது பிரிட்டன் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இவர் சபாநாயகரானால் பதவியேற்க மாட்டோம்.. புறக்கணித்த பாஜக MLAக்கள்: 8 முறை வென்ற MLA-க்கு எதிர்ப்பு !