உலகம்

அரண்மனையில் டாய்லெட்டை திருடிய கும்பல்.. 4 ஆண்டுகளுக்கு பிறகு 4 பேர் கைது செய்த போலிஸ்.. பின்னணி என்ன?

பொதுவாக வீடுகளில் கழிவறை இருப்பது வழக்கம். தற்போதுள்ள காலகட்டத்தில் அநேக வீடுகளில் வெஸ்டர்ன் டாய்லட் தான் உள்ளது. அந்த வகையில் பிரிட்டனில் உள்ள அரண்மனை ஒன்றில் சுமார் 50 கோடி மதிப்பிலான தங்க டாய்லெட் இருந்துள்ளது. அதனை 4 ஆண்டுகளுக்கு முன்னர் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தற்போது அந்த கும்பல் பிடிபட்டுள்ளது.

தங்கத்தில் சில உருவாக்கங்கள் இருப்பதுபோல் தங்கத்தில் டாய்லெட்டும் உள்ளது. மிகவும் ஆடம்பர வாழ்க்கையில் வாழும் சிலர் இதனை பயன்படுத்துவர். அந்த வகையில் இந்த தங்க டாய்லெட்டும் ஒரு பணக்காரர் தயாரிக்க கூறியிருக்கிறார். மௌரிசியோ கட்டெலா (Maurizio Cattelan) என்ற இத்தாலிய கலைஞர் உருவாக்கிய இந்த டாய்லெட்டானது 18 கேரட் தங்கத்தில் உருவாக்கப்பட்டது.

இந்த டாய்லெட்டுக்கு 'அமெரிக்கா' என்ற செல்ல பெயரும் உள்ளது. இந்த தங்க டாய்லெட்டை பொக்கிஷமாக பாதுகாக்காமல், வழக்கமாக நாம் பயன்படுத்தும் டாய்லெட் போலவே பயன்படுத்தப்பட்டது. பிரிட்டனுக்குச் சொந்தமான இந்த டாய்லெட் சில காலத்திற்கு பிறகு அமெரிக்காவில் காட்சிக்காக வைக்கப்பட்டது. அதன்படி நியூயார்க்கின் குகன்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் காட்சிக்காக வைக்கப்பட்டது.

தொடர்ந்து இதனை பார்வைக்கு மட்டுமின்றி, மக்கள் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து இந்த தங்க டாய்லட், பிரிட்டன் நாட்டின் ப்ளென்ஹெய்ம் என்ற அரண்மனைக்கு (Blenheim Palace) கொண்டுவரப்பட்டது. இந்த சூழலில் இங்கிருந்து இந்த தங்க டாய்லெட்டை கடந்த 2019-ம் ஆண்டு மர்ம கும்பல் ஒன்று திருடி சென்றுவிட்டது.

இதன் மதிப்பு இந்திய பணத்தில் சுமார் ரூ.50 கோடி மதிப்பாகும். இதனை திருடி சென்றதைத்தொடர்ந்து இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் இது தொடர்பாக பலரையும் கைது செய்தனர். சில மாதங்கள் கழித்து அந்த டாய்லெட்டும் மீட்கப்பட்டது. ஆனால், அதனை திருடி சென்றபோது சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதனை சரி செய்து மீண்டும் இருந்த இடத்தில் பயன்பாட்டுக்கு வைக்கப்படும் என்று அதிகாரிகள் அப்போதே தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளான மைக்கேல் ஜோன்ஸ் (38), ஜேம்ஸ் ஷீ (39), ஃபிரெட் டோ (35), போரா குச்சுக் (39) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வரும் நவம்பர் 28-ம் தேதி ஆக்ஸ்போர்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். தொடர்ந்து இவர்களிடம் கொள்ளைக்காக போடப்பட்ட திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read: "பின்விளைவுகளைப் பற்றி யோசித்து செயல்படுங்கள்" - பாகிஸ்தான் அரசுக்கு தாலிபான்கள் எச்சரிக்கை !