உலகம்

10 நிமிடம் காதலிக்கு முத்தம்.. காது சவ்வு கிழிந்து காதலனுக்கு நேர்ந்த சோகம்.. சீன காதலர் தினத்தில் ஷாக்!

ஆண்டுதோறும் சர்வதேச அளவில் காதலர் தினம் பிப்ரவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனினும் காதலை பறைசாற்றும் விதமாக சில நாடுகளில் காதலர் தினம் வேறொரு நாளில் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் சீனாவில் ஆண்டுதோறும் 7 வது சந்திர மாதத்தின் 7 வது நாள் கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு சீனாவில் காதலர் தினம் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அங்குள்ள முக்கிய நகரங்களில் விழாக்கோலம் போல் காட்சியளித்தது. மேலும் காதலர்கள் தங்கள் காதலர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த சூழலில் காதலிக்கு காதலன் ஒருவர் ஆசையாய் முத்தமிட்டுள்ளார். அவரது காது சவ்வு கிழிந்து தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார்.

சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஜீஜியாங் மாகாணத்தின் வெஸ்ட் லேக் பகுதியை சேர்ந்த காதலன் ஒருவர், சீன காதலர் தினத்தில் தனது காதலியை சந்தித்துள்ளார். அப்போது பூரிப்பில் இருந்த அவர், உதட்டோடு முத்தம் கொடுத்துள்ளார். சுமார் 10 நிமிடங்கள் முத்தம் கொடுத்த அவருக்கு திடீரென காதில் இருந்து சட்டென்று சத்தம் கேட்டுள்ளது.

ஆரம்பத்தில் அதனை பெரிதாக எண்ணாததால், அவருக்கு வலி அதிகமாகியுள்ளது. தொடர்ந்தும் அவருக்கு காதும் கேட்காமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மருத்துவமனையை அணுகியுள்ளார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது காது சவ்வு வெடித்து கிழிந்துவிட்டதை கண்டறிந்தனர். இதையடுத்து அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 மாதங்கள் தொடர்ந்து அவர் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே போன்று கடந்த 2008-ம் ஆண்டு தெற்கு சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதலனுக்கு தொடர்ந்து முத்தம் கொடுத்து வந்துள்ளார். அவரது காதும் கேட்காமல் போயுள்ளது. அவர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், அவருக்கு சிறிதளவு காது கேட்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை குறிப்பிட்ட மருத்துவர்கள், நாம் அதிகளவு உணர்ச்சிவசப்படும்போது இது போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம் என்கின்றனர்.

இதே போல் முத்தம் கொடுக்கும்போது காதில் காற்றின் அழுத்தத்தில் ஒரு மாறுபாட்டை ஏற்படுத்தும். இதன் விளைவாக செவிப்பறையில் கிழிவு ஏற்பட்டு காது கேட்காமல் போக வாய்ப்புகள் உள்ளன. அதே போல் கோபப்படும்போதும், சண்டையின்போதும், விபத்தின்போதும் இது நிகழும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: ஒரு போட்டிக்கு ரூ.67.76 கோடி.. மொத்தம் ரூ.3,101 கோடி.. BCCI-ன் ஒளிபரப்பு உரிமையை வென்ற வயாகாம் 18 !