
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை இரத்து செய்து அதற்கு பதிலாக வி பி – ஜி ராம் ஜி என்ற புதிய சட்டமுன்வடிவை கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று (18-12-2025) கடிதம் எழுதியுள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2005 (MGNREGA)-ஐ இரத்து செய்து, அதற்குப் பதிலாக Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G), 2025 சட்டமுன்வடிவினை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்நாடு அரசின் ஆழ்ந்த கவலையையும் கடுமையான எதிர்ப்பையும் தெரிவிப்பதாக முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உருவாக்கச் (MGNREGA) சட்டமானது இந்தியாவின் கிராமப்புற வாழ்வாதார பாதுகாப்பில் ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், இது வேலைவாய்ப்பை வழங்கும் உத்தரவாதத்தை கோடிக்கணக்கான கிராமப்புற குடும்பங்களுக்கு வழங்குவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள்;
தமிழ்நாட்டில், இந்தத் திட்டம் 2006 முதல் செயல்படுத்தப்பட்டு, ஆண்டிற்கு சராசரியாக 30 கோடி மனித-வேலைநாட்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி, சுமார் 12,000 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். 2021-22 முதல் 2024-25ஆம் ஆண்டுவரை, சராசரியாக 30 கோடி மனித-வேலைநாட்கள் வேலையை வழங்கியுள்ளதாகவும், 2023-24 ஆண்டில் மட்டும் 40.87 கோடி மனிதநாட்கள் உருவாக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு 13,400 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
பாசனத்திற்கு ஜீவ நதிகள் இல்லாத பகுதிகளிலும், விவசாயப் பகுதிகளில் மழை குறைவாக பெய்யும் காலங்களிலும், பட்டியல் இன மக்கள் உட்பட பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இத்தகைய வேலை முறையே வருமானத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது என்று தனது கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சட்டமுன்வடிவில் உத்தரவாத வேலைவாய்ப்பை ஆண்டுக்கு 125 நாட்களாக அதிகரித்திருப்பது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாக இருந்தாலும், அதன் மற்ற விதிகள் இந்தத் திட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை பலவீனப்படுத்துவதாக உள்ளதுடன் மாநிலங்கள் மீது கடுமையான நிதிச்சுமைகளை சுமத்துவதுடன் கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வண்ணம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முதலமைச்சர் அவர்கள் இச்சட்டமுன்வடிவு மாநிலங்களின் நிதியையும், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழை கிராமப்புறத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சட்டமுன்வடிவு மீதான முக்கிய ஆட்சேபனைகள்:
தேவை அடிப்படையிலான ஒதுக்கீட்டிலிருந்து விநியோக அடிப்படையிலான ஒதுக்கீட்டிற்கு மாறுதல்:
இந்த சட்டமுன்வடிவில், ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் மாநிலவாரியான திட்ட ஒதுக்கீடுகளை நிர்ணயிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளது.

இது செலவினங்களுக்கு வரம்பு விதித்து, கூடுதல் செலவுகளை மாநிலங்களே ஏற்க வேண்டும் என்றும் கோருவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் தேவை அடிப்படையிலான தன்மையிலிருந்து மாறுபடுகிறது. காலநிலை மற்றும் புவியியல் காரணங்களால் தேவை அதிகமாக உள்ள தமிழ்நாட்டில், இத்தகைய நிர்ணயம் (உள்ளூர் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல், மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிடுவது) வேலை நாட்களையும் கூலியையும் குறைத்து, கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு பெருத்த இன்னல்களை ஏற்படுத்தும்.
மாநிலங்கள் மீது அதிகரிக்கும் நிதிச்சுமை:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், திறனற்ற தொழிலாளர்களுக்கான ஊதியச் செலவுகள் மற்றும் நிருவாகச் செலவுகள் முழுவதையும் ஒன்றிய அரசு ஏற்கிறது, மேலும் மூலப்பொருட்களுக்கான செலவில் 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்கிறது. ஆனால் இந்த புதிய சட்ட முன்வடிவில் ஊதியம், மூலப்பொருட்கள் மற்றும் நிருவாகம் ஆகியவற்றுக்கான புதிய 60:40 நிதிப்பங்கீட்டு முறை, ஏற்கெனவே நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் பல மாநிலங்கள் மீது பெரும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
அதிகப்படியான மையப்படுத்தல்:
இந்த சட்ட முன்வடிவின்படி வேலை உறுதியளிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதிகளை அறிவிக்கவும், திட்டங்களை தேசிய அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கவும் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் விதிகள், கிராம ஊராட்சிகளின் பரவலாக்கப்பட்ட திட்டமிடலைக் குறைத்து, அடிமட்ட ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் வகையில் உள்ளன.
மகாத்மா காந்தியின் பெயரை நீக்குதல்:
MGNREGA திட்டத்தின் பெயரை மாற்றுவது, மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ஜியம் மற்றும் அதிகாரப்பரவல் பற்றிய தொலைநோக்குப் பார்வையை சிதைக்கும் வண்ணம் உள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் அடிப்படையான தன்மையை மாற்றி, அதை ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்படும் வகையிலும், வரவுசெலவுத் திட்ட வரம்புக்குட்பட்ட ஒரு திட்டமாக மாற்றும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியும் இந்த சட்டமுன்வடிவானது மாநிலங்களின் வளர்ச்சி செயல்பாடுகளுக்கான வாய்ப்பைக் குறைப்பதுடன் ஜனநாயகத்தை மேம்படுத்த தடையாக அமைந்துவிடும் என்றும் பல்வேறு ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளதையும் முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமுன்வடிவானது, கோடிக்கணக்கான கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்படையச் செய்து, தமிழ்நாடு போன்ற சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளது என்றும் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, 2025 விபி-ஜி ராம் ஜி சட்டமுன்வடிவினை செயல்படுத்த வேண்டாம் என்று ஒன்றிய அரசை தாம் வலியுறுத்துவதாகவும் அதற்குப் பதிலாக, மாநிலங்களுடன் விரிவான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு, திருத்தங்கள் மூலம் வேலை நாட்களை 125 நாட்களாக அதிகரிப்பது மற்றும் விவசாயப் பருவகால இன்னல்களைத் தவிர்ப்பது போன்ற பிற நேர்மறையான அம்சங்களை சேர்த்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைத் தக்கவைத்து வலுப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தின் வாயிலாக இந்தியப் பிரதமர் அவர்களை வலியுறுத்தியுள்ளதுடன்;
நாட்டின் கிராமப்புற ஏழைகளுக்கு ஒரு வலுவான, தேவை அடிப்படையிலான வாழ்வாதாரமாகத் திகழும் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்வதை உறுதிசெய்திடும் பணியில் தமிழ்நாடு ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்கத் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.






