
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.12.2025) சென்னை, கொளத்தூர், ஜி.கே.எம்.காலனியில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை திறந்து வைத்து, 15 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி, ஆற்றிய உரை.
கொளத்தூருக்கு வந்தால், ஒரு எனர்ஜி வந்துவிடும்; ஒரு உற்சாகம் வந்துவிடும்; வேகம் வந்துவிடும்; ஒரு புத்துணர்ச்சி வந்துவிடும்; அது எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் நன்றாக தெரியும்.
அதிலும், மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை எல்லாம் நான் பார்க்கிறேன். மணமக்களோடு இந்த விழாவில் நாம் எல்லாம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்ற விழாவாக இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நம்முடைய குடும்பத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தால், எப்படி மகிழ்ச்சியாக கலந்து கொள்வோமோ அதுபோல தான் இந்த திருமண நிகழ்ச்சியில் அத்தனை பேரும், நான் மட்டுமல்ல, நம்முடைய அமைச்சர் பெருமக்கள் மட்டுமல்ல, வந்திருக்கக்கூடிய அத்தனை பேரும், அந்த உணர்வோடு தான் இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறோம்.
யாராவது, “கொளத்தூர்” என்று பெயர் சொன்னாலே அது சாதனை! இல்லையென்றால் ஸ்டாலின்! என்று ஞாபகத்திற்கு வரக்கூடிய அளவிற்கு இந்த தொகுதியில் நான் இரண்டற கலந்திருக்கிறேன் என்று உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். ஏராளமான திட்டங்களை இந்தத் தொகுதிக்கு நிறைவேற்றி, இந்த கொளத்தூர் தொகுதியை நம்முடைய அமைச்சர் நேரு அவர்கள் சொன்னது போல, 234 தொகுதிகளுக்கு நான் இந்தத் தொகுதியை பார்க்கின்றபோது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது; மகிழ்ச்சியாக இருக்கிறது.
பயமும் இருக்கிறது என்றும் சொல்லலாம். அதுமட்டுமல்ல, உங்களுக்கெல்லாம் பொறாமையும் இருக்கிறது அதுதான் உண்மை. கெட்ட எண்ணத்தில் அந்த பொறாமை இல்லை; நல்லெண்ணத்தில் தான் பொறாமையாக இருக்கிறது. நாமும் இப்படி பணியாற்ற வேண்டும்;
நம்முடைய தொகுதிக்கு இந்த திட்டங்கள் வரவேண்டும் என்பதில் அவர்களும் இன்றைக்கு அந்தப் பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ கொளத்தூருக்கு மட்டும் நாம் இதை செய்துவிட்டோம் – மற்ற தொகுதியை கைவிட்டுவிட்டோம் என்று யாரும் நினைக்க வேண்டாம் – அனைத்துத் தொகுதியும் நம்முடைய தொகுதிதான். அதனால், எல்லார்க்கும் எல்லாம் என்பதை முன் வைத்து நம்முடைய பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறோம்.
என்ன சிறப்பு என்றால், ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒரு முறை, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நான் செல்வேன். ஆனால் கொளத்தூருக்கு மட்டும் எப்படியாவது 10 நாட்களுக்கு ஒரு முறை நான் வந்துவிடுவேன். வரவில்லை என்று ஒரு நாளைக்கு ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்தால், சேகர்பாபு அவர்கள் என்னை விடமாட்டார். ஒரு பட்டியலுடன் வந்துவிடுவார்.

அவர் வருவதற்கு முன்பு, Whatsapp-ல் பட்டியலை அனுப்பிவிடுவார். ஏனென்றால், திடீரென்று வழங்கும்போது நான் அதிர்ச்சி ஆகிவிடக் கூடாது என்று மிகவும் சாமர்த்தியமாக அந்த பட்டியலை அனுப்பிவிடுவார். அதில் 10 பட்டியலாவது நிச்சயமாக இருக்கும் – 2 அடிக்கல் நாட்டு விழா இருக்கும் – 2 திறப்பு விழா இருக்கும் – 2 கட்சி நிகழ்ச்சி இருக்கும் - இப்படி ஒரு பட்டியல் போட்டு வழங்கிவிடுவார்.
இப்படி வழங்கி, அந்த நிகழ்ச்சிக்கு வந்தால்தான் எனக்கு ஒரு திருப்தி ஏற்படும். 10 நாட்களுக்கு ஒரு முறை வந்தால் தான் எனக்கு உள்ளபடியே முழு திருப்தி உண்டாகும். என்னதான் நான் முதலமைச்சராக இருந்து பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணத்தை நடத்தி, பல அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் அல்லது சில பொது நிகழ்ச்சிகளுக்குச் சென்று பல வரவேற்புரைகளை தருகின்றபோது, அதில் எனக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியைவிட, இந்த கொளத்தூருக்கு நீங்கள் தருகின்ற வரவேற்பில் தான் அதிக மகிழ்ச்சி ஏற்படுவதுண்டு.
இப்போது கூட என்னை காரில் அழைத்துக் கொண்டு வருகின்றபோது மாவட்டச் செயலாளரை துவக்கத்திலேயே கேட்டேன் – இருபுறமும் சாலையில் மக்கள் நிற்கிறார்களே, இளைஞர்கள், மகளிர், தாய்மார்கள் நின்று வரவேற்பு தந்து கொண்டிருக்கிறார்கள் – இறங்கி விடவா? என்று கேட்டேன். அருகில் சென்ற பிறகு இறங்கிக் கொள்ளலாம் என்று சொன்னார்.
நேரத்தின் அருமை கருதி சொன்னரா என்று தெரியவில்லை – இன்றைக்கு கூட பேசவில்லை, ஏதோ தொண்டை சரியில்லை என்று நினைக்கிறேன். உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதுவும் இருக்கலாம் – இருந்தாலும் பாதி தூரம் வந்தபிறகு அவரிடம் சொல்லாமலே நான் காரை விட்டு இறங்கிவிட்டேன். உங்களைப் பார்க்கின்றபோது, என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை – தானாகவே இறங்கிவிடுகிறேன் – அதுதான் விஷயம் வேறொன்றுமில்லை. எப்போதுமே, நான் அடிக்கடிசொல்வதுண்டு.
இந்தத் தொகுதியைப் பொறுத்தவரைக்கும், ஏதோ முதலமைச்சராகவோ மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்லை, ஏற்கனவே இருந்த எதிர்க்கட்சித் தலைவராக மட்டுமல்ல, ஏற்கனவே இருந்த மேயராக மட்டுமல்ல, எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்கள் செல்லப்பிள்ளையாக – குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைவதுண்டு. அப்படிதான் இருக்கிறேன்; நான் நம்புகிறேன்; நீங்களும் அந்த நம்பிக்கையோடு இருப்பீர்கள் என்று எனக்கு அந்த எண்ணம் உண்டு.
இந்தத் தொகுதியில் நாம் ஏற்படுத்தி வழங்கியிருக்கக்கூடிய திட்டங்களை பார்க்கின்ற போது, இது திராவிட மாடல் ஆட்சியின் திட்டம் என்று இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும் அது மக்களிடத்தில் பேசக்கூடிய, மக்களிடத்தில் பதியக்கூடிய அளவிற்கு பல திட்டங்களை நாம் இந்த தொகுதிக்கு ஆற்றியிருக்கிறோம்.

எடுத்துக்காட்டிற்கு சொல்ல வேண்டும் என்று சொன்னால், கொரோனா ஏற்பட்ட போது நாம் எதிர்க்கட்சியில் இருந்தோம் - கொரோனா காலகட்டத்திற்கு பிறகு, பணிச்சூழல் பெருமளவில் மாறிவிட்டது! குறிப்பாக, ஐ.டி. துறையில் வேலை செய்பவர்கள் - Work from Home செய்கிறார்கள். பல தொழில்முனைவோர் உருவாகியிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் Office Space வேண்டும் என்று சிந்தித்து தான் நாம் உருவாக்கியிருக்கும் திட்டம் தான் “முதல்வர் படைப்பகம்”!
அடுத்து, கொளத்தூர் தொகுதிக்கு மட்டுமல்ல இதனை சுற்றியிருக்கக்கூடிய பல்வேறு பகுதிகள் – மாதவரம் பார்க்கிறோம் – வடசென்னையில் இருக்கக்கூடிய பல பகுதிகளை பார்க்கிறோம் – இன்றைக்கு அரசு மருத்துவனைகளை எடுத்துக் கொண்டால், ராஜீவ்காந்தி அரசு மருத்துவனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை – இங்கெல்லாம் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அதனால் அந்த கூட்டத்தை ஓரளவு குறைக்கவேண்டும் என்பதற்காக, இங்கே ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த பெரியார் அரசு மருத்துவமனையில் தரத்தை உயர்த்தவேண்டும் என்று எளிதில் அணுகும் அளவிற்கு மருத்துவம் கிடைக்க வேண்டும் என்று திட்டமிட்டு ஒரு பெரிய மருத்துவமனையை உருவாக்கி ஸ்டான்லியை விட, ராஜீவ்காந்தி மருத்துமனையை விட, கிண்டியில் அமைந்திருக்கக்கூடிய அரசு மருத்துமனையை விட, சிறப்பான மருத்துவமனையில் ஒன்றாக இன்றைக்கு நம்முடைய பெரியார் அரசு மருத்துவமனை விளங்கிக் கொண்டிருக்கிறது!
அடுத்து, கொளத்தூர் என்று சொன்னாலே வண்ணமீன்கள்தான் நமக்கு நினைவிற்கு வரும்! நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, வாக்காளர்களை சந்திக்க வந்தபோது வண்ணமீன் தொழில் செய்து கொண்டிருந்த தோழர்கள், தாய்மார்கள் அவர்களுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எல்லாம் இதற்கு ஏதாவது விடிவுகாலத்தை ஏற்படுத்த வேண்டும் – இதற்கு வசதிகள் செய்து தரவேண்டும் – எங்களுக்கு அங்காடிகள் கட்டித் தரவேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்தார்கள்.
அதில் பல சட்ட சிக்கல்கள் எல்லாம் இருந்தது. அந்த சட்ட சிக்கல்களை எல்லாம் நம்முடைய சேகர்பாபு அவர்கள் முன்னின்று, ஏதோ ஒரு துறை மட்டுமல்ல, பல துறைகள் உண்டு – வீட்டுவசதி வாரியம், மீன்வளத் துறை, சிம்டிஏ, மாநகராட்சி ஆகிய அனைத்துத் துறைகளுடன் கலந்து பேசி, அதை ஒழுங்குபடுத்தி, முறைப்படுத்தி, இன்றைக்கு வண்ணமீன்களை பெறுவதற்காக வரக்கூடியவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் உருவாக்கியிருக்கும் ஒரு மிகப்பெரிய, வெளிநாட்டில் கூட இப்படியொரு மையம் இருக்குமா? என்று சந்தேகம் வரக்கூடிய அளவிற்கு அந்த வர்த்தக மையத்தை நாம் உருவாக்கி இருக்கிறோம்.
அடுத்து, இங்கு இருக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க மினி ஸ்டேடியங்களை கட்டி இருக்கிறோம்.
தலைப்புச் செய்திகளாக சொல்ல வேண்டும் என்றால்,
கொளத்தூரில் இருக்கும் ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை எளிய வகையில் ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதற்காக, அரசு வேலை என்றால், அதில் சில விதிமுறைகள் எல்லாம் இருக்கிறது – உடனடியாக கிடைத்துவிடாது.
காத்திருக்க வேண்டும் – ஏற்கனேவ வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலட்சக்கணக்கானோர் பதிவு செய்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் தனிப்பட்ட முறையில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி 10-வது, 11-வது, 12-வது மாணவர்கள் படிக்கும், முதல்வர் கல்விச் சோலை என்ற அந்தத் திட்டத்தையும் உருவாக்கி இன்றைக்கு இளைஞர்களுக்கெல்லாம் வேலை கிடைக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்திருக்கிறோம்.
· மேயர் சிட்டிபாபு மேம்பாலம்
· கௌதமபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு
· முத்துமாரியம்மன் கோயில் குளம்
· மார்கெட் தெரு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
· திரு.வி.க.நகர் பேருந்து நிலையம்
· எஸ்.ஆர்.பி.கோயில் வடக்குத் தெருவில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் திருமண மண்டபம் – அந்த திருமண மண்டபத்திற்கு ஒரு பெரிய வரலாறு உண்டு. நான் முதன்முதலாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஆய்வு செய்தது அந்த மண்டபம் தான்.
பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, சமூக நலக் கூடமாக கட்டப்பட்ட கட்டிடம். கட்டப்பட்ட கட்டிடமாக இருந்தாலும், அது பாழடைந்து, யாரும் பயன்படுத்தமுடியாத வகையில், சமூக விரோதிகள் எல்லாம் அதில் புகுந்து அசிங்கப்படுத்தும் நிலையில் தான் அது இருந்தது.

அப்போது வந்தபோது, மக்கள் எல்லாம் என்னிடம் வைத்த கோரிக்கை இதை எப்படியாவது சுத்தம் செய்து ஒரு நல்ல சமூகநலக் கூடமாக உருவாக்கித் தாருங்கள் என்று சொன்னார்கள். சமூகநலக் கூடமாக அல்ல – ஒரு திருமண மண்டப மாளிகையாக பெருந்தலைவர் காமராஜர் பெயரில் உருவாக்கப்பட்டது.
பல்லவன் சாலை, ஜவகர் நகர் 1-ஆவது வட்டச் சாலை, ரங்கசாமி தெரு, சீனிவாசா நகர் என்று பல்வேறு இடங்களில் விளையாட்டுத் திடல்கள் என்று கொளத்தூரில் திரும்பும் பக்கமெல்லாம், புதிய புதிய கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கிறோம்!
இதன் தொடர்ச்சியாகதான், இன்றைக்கு, 17 கோடியே 47 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஜி.கே.எம். காலனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் பெரியார் நகர் அமுதம் அங்காடி ஆகியவற்றிற்கான திட்டப்பணிகளை தொடங்கி வைத்திருக்கிறோம்.
கொளத்தூருக்கு ஒரு சிறப்புண்டு. நான் சில நேரங்களில், அனைத்து அமைச்சர்களிடமும் சொல்வதுண்டு. இன்றைக்கு மாநகராட்சி பள்ளியை எடுத்துக் கொண்டால், கொளத்தூரில் தான் அதிகம். மருத்துவமனையை எடுத்துக் கொண்டால், கொளத்தூரில் தான் அதிகம். நூல் நிலையங்களை எடுத்துக் கொண்டால், கொளத்தூரில் தான் அதிகம். அனைத்திலும் நாம் தான் அதிகம். இன்றைக்கு அந்த அளவிற்கு நம்முடைய திட்டங்கள், சாதனைகளை இந்த தொகுதிக்கு நாம் படைத்து வழங்கியிருக்கிறோம்.
அந்த மகிழ்ச்சியில், இந்த திருமண மாளிகையை திறந்து வைத்து, இன்றைக்கு இல்வாழ்க்கையை தொடங்கக்கூடிய ஒரு சிறப்பான நிகழ்ச்சியை நம்முடைய மணமக்களுக்கு உருவாக்கி இருக்கிறோம். 15 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கப் போகிறோம். நீங்கள் எல்லாம் மனதார வாழ்த்த வேண்டும். குறிப்பாக நாம் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு தான் அதிகமான திட்டங்கள், சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஏனென்றால், பெண்களை படிக்க வைத்தால், பெண்கள் முன்னேற்றினால், அந்த குடும்பம் சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில் தான். பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதற்கு காரணம் என்னவென்று கேட்டால், பெண்கள் நினைத்தால் எதையும் செய்யக்கூடியவர்கள். அதனால் தான் பெண்களுக்கு அதிகமான முக்கியத்துவத்தைத் தந்து கொண்டிருக்கிறோம். இன்னும்கூட சொல்ல வேண்டும் என்று சொன்னால், ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் தான் இருக்கிறார் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு.
என்னுடைய வெற்றிக்குப் பின்னாலும் என்னுடைய மனைவி தான் – நான் மட்டுமல்ல, சேகர்பாபுவாக இருந்தாலும் சரி, நேருவாக இருந்தாலும் சரி, இங்கு இருக்கக்கூடிய நீங்களாக இருந்தாலும் சரி.
ஓராண்டு காலம் நான் மிசாவில் இருந்தபோது, என்னுடைய மனைவி கோபித்துக்கொண்டு ஏதாவது முடிவு எடுத்திருந்தால் என்னுடைய நிலைமை என்னவாகியிருக்கும் நினைத்துப் பாருங்கள் – தாங்கிக் கொண்டு, பொறுமையாக இருந்து, எவ்வளவோ கொடுமைகள் எனக்கு வந்த நேரத்தில், என்னை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்திய காரணத்தினால்தான் இன்றைக்கு நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். அதுபோல தான் ஒவ்வொருவரும்.
அதனால் தான் மணமக்களிடத்தில் நான் பணிவோடு கேட்டுக் கொள்ள விரும்புவது, மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும் அந்த நிலையில் நீங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் சிறிது நேரத்தில் மணவிழாவை நடத்தி வைக்கப் போகிறேன். மணமக்களை நான் அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புவது, அழகான குழந்தைகளை நீங்கள் பெற்றெடுக்க இருக்கிறீர்கள்.
முன்பெல்லாம் திருமண விழாக்களில் கலந்து கொண்டு பெரியோர்கள் மணமக்களை வாழ்த்தும்போது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் என்று சொல்வார்கள். இப்போது என்னவென்றால், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று சொல்வதைவிட, அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள் என்று சொல்கிறார்கள்.
முன்பெல்லாம், சிவப்பு முக்கோணம் போட்டு, நாம் இருவர் நமக்கு மூவர் என்று இருந்தது - அது படிப்படியாக குறைந்து, நாம் இருவர் நமக்கு இருவர் என்று இருந்தது – இப்போது நாம் இருவர் நமக்கு ஒருவர் – நாளைக்கு இதுவும் மாறலாம் – நாம் இருவர் நமக்கு ஏன் இன்னொருவர் என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள் என்று ஏன் சொல்வதில்லை என்றால், மணமக்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதால் தான். கி.ஆ.பெ.விஸ்வநாதன் அவர்கள் ஒருமுறை சொல்கின்றபோது சொன்னார் – பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்றால் மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள், போகம், புகழ் ஆகிய 16 செல்வங்களை பெற்று மணமக்கள் சிறப்போடு வாழவேண்டும் என்பதாகும்.






