உலகம்

உயிருடன் புதைக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண்.. ஆஸி.யில் நடந்த சம்பவத்தின் பின்னணி என்ன?

ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவர் இளம்பெண் ஜாஸ்மின் கவுர். 21 வயதுடைய இவர், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நர்சிங் படித்து வந்துள்ளார். இந்த சூழலில் இவரும் தாரிக்ஜோத் சிங் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். எனவே ஒருமுறை இருவருக்கும் ஏற்பட்ட தகராறு முற்றிப்போகவே, ஜாஸ்மின் தனது காதலனுடன் இருந்த காதலை முறித்து கொண்டார்.

இதனால் தாரிக்ஜோத் சிங் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். தொடர்ந்து அவருக்கு மீண்டும் காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இருப்பினும் தனது முன்னாள் காதலனை அவர் கண்டு கொள்ளாமல் அவமதித்து வந்துள்ளார். இதனால் தனது காதலியை பழி வாங்க எண்ணியுள்ளார் தாரிக்ஜோத் சிங்.

அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு தனியாக சென்று கொண்டிருந்த ஜாஸ்மினை கார் ஒன்றை வைத்து கடத்தி யாரும் இல்லாத இடத்துக்கு கூட்டி சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பொறுமை இழந்த காதலன், ஜாஸ்மினை அடித்துள்ளார். பின்னர் அவரை ஒரு கேபிள் வயர்களால் கட்டிப்போட்டு குழி ஒன்றை தோண்டி அதில் உயிருடன் புதைத்து அந்த குழியை மூடி விட்டார்.

இதில் மூச்சுத் திணறி இளம்பெண் ஜாஸ்மின் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரிக்கையில், தாரிக்ஜோத் சிங் ஜாஸ்மினை கொன்றது தெரியவந்தது. மேலும் அங்குள்ள சிசிடிவி-ல் தாரிக்ஜோத் சிங், ஜாஸ்மினை கடத்தி சென்றது பதிவாகியிருந்தது.

அதனடிப்படையில் தாரிக்ஜோத் சிங்கை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றத்திலே தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி குற்றவாளி தாரிக்ஜோத் சிங்குக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: "போட்டி இருக்கலாம், ஆனால் ஏமாற்றலாமா ?" - மெட்டா மீது வழக்கு தொடரவுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு !