உலகம்

அதிவேகமாக 10 மில்லியன் பயனர்கள்.. சாதனைகளை நொறுக்கித்தள்ளிய மெட்டாவின் 'Threads' செயலி !

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் கைப்பற்றி ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்தார். மேலும் கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இதனிடையே ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். இதுதவிர ப்ளூடிக் முறையிலும் எலான் மஸ்க் மாற்றத்தை கொண்டுவந்தார். அதன்படி தனிநபர், தனியார் அமைப்புகளுக்கு ப்ளூ டிக், அரசியல் பிரமுகர்கள், அரசு சார்ந்த அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக், தொழில் சார்ந்த நிறுவனங்களின் கணக்குகளுக்கு மஞ்சள் டிக் என அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் தற்போது மற்றொரு மாற்றமாக ட்விட்டரில் இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதுபோன்ற காரணங்களால் தற்போது ட்விட்டரை விட்டு பலர் வெளியேறி வருவதாக கூறப்பட்டது. இப்படி வெளியேறும் பயனர்களை ஈர்க்க ட்விட்டரின் போட்டி நிறுவனங்கள் பல தொடர்ந்து முயன்று வருகின்றன.

அந்த வகையில், ட்விட்டரின் நீண்ட நாள் போட்டியாளரான மெட்டா நிறுவனம் ட்விட்டருக்குப் போட்டியாக Threads என்ற புதிய செயலியை இன்று அறிமுகப்படுத்தியது. ஏழு நிமிடங்களில் சுமார் 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இந்த 'Threads' செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ள நிலையில், இரண்டு மணி நேரத்தில் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் புதிய கணக்காளர்களாக சேர்ந்துள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அதிவேகமாக 10 மில்லியன் பயனர்களை கொண்ட செயலி என்ற பெருமை 'Threads' பெற்றுள்ளது. இதன் மூலம் இது விரைவில் எலான் மஸ்க்கின் ட்விட்டருக்கு போட்டியாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. அதோடு ட்விட்டரில் 'Threads' செயலி உலகளவில் முதலிடத்தில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: கிரிக்கெட்டின் கௌரவத்தை சிதைத்த இங்கிலாந்து ரசிகர்கள்.. ஆஸ். வீரர்களின் குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்