உலகம்

'இவர்கள் பேச்சை ஏற்க முடியாது'.. நித்தியானந்தா தரப்பு பிரதிநிதிகள் பேச்சை நிராகரித்த ஐ.நா!

திருவண்ணாமலையைப் பூர்வீகமாகக் கொண்ட நித்தியானந்தாவிற்குத் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு அயல்நாடுகளிலும் ஆசிரமங்கள் உள்ளன. இந்த ஆசிரமத்தில் சிறியவர்கள், இளம் பெண்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் நித்தியானந்தாவின் சத்சங்கத்தைக் கேட்டும் அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டும் சீடர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

கர்நாடகாவைத் தலைமையிடமாகக் கொண்டு பிடதியில் ஆசிரமம் அமைத்த நித்தியானந்தாவிற்கு கர்நாடகாவில் ஏராளமான சீடர்கள் உள்ளனர். இவர் மீது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்தல், பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் கைது நடவடிக்கைக்கு பயந்து நித்தியானந்தா வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றார். பின்னர் ஈக்வடாரில் தீவு ஒன்றை வாங்கி அதற்கு கைலாசா நாடு என பெயரிட்டு கொடியையும் வெளியிட்டு அதை தனிநாடாக அறிவித்து அங்கே தனது சீடர்களுடன் இருந்து வருகிறார். அவ்வப்போது கைலாசாவில் இருந்து கொண்டு வீடியோவையும் நித்தியானந்தா வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் கலந்து கொண்டு பேசியுள்ளனர். நித்தியானந்தா மற்றும் கைலாசாவில் உள்ள புலம்பெயர்ந்த 20 லட்சம் மக்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க சர்வதேச அளவில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்?” என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பினர். ஐ.நாவில் இவர்களின் பங்கேற்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஐ.நா கூட்டத்தில் நித்தியானந்தாவின் பிரதிநிதிகள் பேசிய கருத்து முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய ஐ.நா சபை அதிகாரி ஒருவர், "பிப்ரவரி மாதம் நடந்த ஐ.நா சபைக் கூட்டத்தில் கைலாசாவில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவர்கள் கூட்டத்திற்குத் தொடர்பில்லாத கருத்துக்களைத் தெரிவித்தனர். இதனால் இவர்கள் பேசிய கருத்துக்களை ஐக்கிய நாடுகள் சபை முற்றிலுமாக புறக்கணிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

Also Read: திரையரங்கு & OTT.. பிரபு தேவா முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை.. இன்று வெளியாகும் படங்கள் பட்டியல் இதோ !