உலகம்

சிறிய தவறால் 10 லட்சம் கோடியை இழந்த Google.. MicroSoft-ன் அதிரடியை சமாளிக்க முடியாமல் திணறல் !

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீடோடு OPEN AI என்ற மென்பொருள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகம் செய்தது. அதில் இருந்து இணையஉலகம் Chat GPT-யை பற்றியே தொடர்ந்து பேசி வருகிறது.

Chat GPT மென்பொருள் செயற்கை ரோபோ போல செயல்படும் ஒரு அமைப்பாகும். இதனால் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், நம்முடன் உரையாட முடியும், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நமது தேவைகளுக்கு ஏற்ப அனைத்து பதில்களையும் Chat GPT-யால் தரமுடியும். அதிலும் கல்வி நிலைய பயன்பாடுகளில் கடிதம் முதல் கட்டுரை வரை அனைத்தையும் இதனால் செய்யமுடியும்.

சுமார் 100 மொழிகளில் Chat GPT மென்பொருள் தற்போது கிடைக்கிறது என்றாலும் ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் இதன் திறன் சிறப்பாக இல்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் Chat GPT மென்பொருளை தனது தேடுதல் பொறியான BING-ல் இணைத்து லாபம் ஈட்ட மைக்ரோசாப்ட் முயற்சித்து அதற்கான செயலில் இறங்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் வந்தபிறகு இது தேடுதல் வலைத்தளமாக உலகளவில் ஆதிக்கம் செல்லும் கூகுள் நிறுவனத்துக்கு பெரும் சவாலாக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டது.

இதன் காரணமாக இதற்கு போட்டி செயலியை உருவாக்க கூகுள் நிறுவனம் முயன்று தற்போது 'Bard' எனப் பெயரிடப்பட்டிருக்கும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் ஆரம்பத்திலே தவறான தகவலை கூறி கூகிளின் இந்த செயலை பல்வேறு கேலிகளை எதிர்கொண்டுள்ளது.

தான் அறிமுகப்படுத்திய Bard என்ற செயலி குறித்து கூகுள் நிறுவனம் ட்விட்டரில் GIF ஒன்றைப் பதிவிட்டிருந்தது. அதில் அந்த செயலியிடம் 'என் 9 வயது மகனிடம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் எந்தப் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிச் சொல்லலாம்' எனக் கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில், அதற்கு பல்வேறு பதில்களை அளித்த Bard செயலி, இறுதியில் சூரியகுடும்பத்திற்கு வெளியே இருக்கும் ஒரு கோளின் முதல் புகைப்படத்தை எடுத்தது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிதான் " என கூறியிருந்தது.

ஆனால், கூகுளின் Bard செயலி குறிப்பிட்ட இந்த செய்தி தவறானது என ஆய்வாளர்கள் விளக்கமளிக்க அந்த தகவல் வைரலானது. உண்மையில் 2004-லேயே சூர்யகுடும்பத்திற்கு வெளியே இருக்கும் கோள்களின் படங்களை ஆய்வாளர்கள் படமெடுக்க தொடங்கிவிட்ட நிலையில், Bard செயலியின் இந்த கருத்தை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வந்தனர்.

மேலும், இந்த செய்தி கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் பங்குகளின் மதிப்பையும் கடுமையாக பாதித்தது. ஒரே நாளில் ஆல்ஃபபெட்டின் பங்குகள் சுமார் 8% குறைந்த நிலையில்,அதன் சந்தை மதிப்பில் சுமார் 100 பில்லியன் டாலர்களை (10 லட்சம் கோடி) ஆல்ஃபபெட் இழந்துள்ளது.