உலகம்

ரூ. 225 கொடுத்தால்தான் ஒரு டாலர் கிடைக்கும்.. வரலாறு காணாத அளவு சரிந்த பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு !

கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷ்யா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது.

அதிலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைத்த நிலையில் கிட்டத்தட்ட இலங்கைக்கு நேர்ந்த நிலையைதான் தற்போது பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. போதிய வரி வருவாய் இல்லாத நிலையில், மக்களின் அடிப்படை தேவைகளை பாகிஸ்தான் அரசால் நிறைவேற்றமுடியவில்லை.

பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பின் மூலம் 2 வாரங்கள் மட்டுமே அந்நாட்டால் உணவு தானியங்களையும் கச்சா எண்ணெய்யையும் இறக்குமதி செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது. இதனால் வெகுசீக்கிரத்தில் பாகிஸ்தான் திவாலாகிவிடும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது அந்நாடு அடுத்த இலங்கையாக மாறிவருவதற்கான அறிகுறி என கூறப்படுகிறது. அதாவது டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 225 என்ற அளவில் மோசமாகியுள்ளது. இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத நிலையாகும்.

இதன் காரணமாக சர்வதேச நிதியமான ஐஎம்எஃப் தனது கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 6 .5 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியை விடுவிக்க வேண்டும் என்றும், சர்வதேச நிதியத்திற்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்புக் குறைந்துள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் உதவியை பாகிஸ்தான் எதிர்நோக்கியுள்ளது.

Also Read: சவூதி அரேபியாவில் கோல் அடிக்க தடுமாறும் ரொனால்டோ.. தொடரில் இருந்தே அவர் அணி வெளியேறியதால் அதிர்ச்சி !