உலகம்

“செயற்கை நுண்ணறிவு Robot மனித குலத்துக்கு வரமா - சாபமா?” : பகீர் கிளப்பிய அடுத்தடுத்த சம்பவம்!

செயற்கை நுண்ணறிவு (AI) மனித குலத்துக்கு வரமா சாபமா?

I Robot என ஓர் ஆங்கிலப் படம். அதில் எனக்கு பிடித்த முக்கியமான ஒரு காட்சி உண்டு. ஒரு ரோபோ உற்பத்தி நிறுவனத்திலிருந்து தப்பி விடும். அதை காவலரான வில் ஸ்மித் விரட்டி பிடிப்பார். பிடித்த பிறகு ரோபோவை விசாரிப்பார் வில் ஸ்மித்.

வில் ஸ்மித்: ஏன் கொலை செய்தாய்?

ரோபோ: நான் கொலை செய்யவில்லை. பயந்து போய் மறைந்திருந்தேன்.

வில் ஸ்மித்: ரோபோக்களால் பயத்தை உணர முடியாது. அவற்றால் எதையுமே உணர முடியாது. அவற்றுக்கு பசிக்காது. அவை தூங்காது.

ரோபோ: நான் தூங்குவேன். கனவுகள் கூட கண்டிருக்கிறேன்.

வில் ஸ்மித்: மனிதர்களுக்குதான் கனவுகள் வரும். நாய்களுக்குக் கூட வரும். ஆனால் உனக்கு வராது. நீ வெறும் இயந்திரம்தான். வாழ்தலின் பாசாங்கு நீ. அவ்வளவுதான். ஒரு ரோபோவால் சிம்பனி எழுதத் தெரியுமா? ஒரு ரோபோவால் அற்புதமாக ஓவியம் வரைய முடியுமா?

ரோபா: உன்னால் முடியுமா?

ஸ்டீபன் ஹாக்கிங் கொண்டிருந்த முக்கியமான கவலைகளில் செயற்கை நுண்ணறிவும் ஒன்று. செயற்கை நுண்ணறிவு கொள்ளக் கூடிய சாத்தியங்களைப் பற்றி பல படங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி இருக்கின்றன. ஆயிரமே இருந்தாலும் அவை இயந்திரம்தானே எனக் கேட்கலாம். ஆனால் அந்த தூரம் குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவின் கொலரோடா மாகாணத்தில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் முதல் பரிசை ‘ஆலென்’ என்ற செயற்கை நுண்ணறிவு தட்டிச் சென்றது. உலகளாவிய வகையில் ஓவியர்களிடம் இது பெரும் கோபத்தை மூட்டியது.

இது மட்டுமல்ல. இன்னும் இருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டில் சோஃபியா என்கிற பெண் ரோபா சவுதி அரேபியாவின் குடியுரிமையைப் பெற்றிருக்கிறது. குடியுரிமை கொண்ட முதல் ரோபோ சோஃபியாதான்.

ரோபோக்கள் அல்லாமலும் செயற்கை நுண்ணறிவு வெவ்வேறு வகைகளில் இயங்குகிறது. குறிப்பாக இணையத்தில், சமூகதளங்களில். உங்களில் சமூகதளக் கணக்கின் வழியாக நீங்கள் பார்க்கும் விரும்பும் பதிவுகள், காணொளிகள் முதலியவற்றைக் கொண்டு சமூகதள செயற்கை நுண்ணறிவு உங்களை ஒரு pattern-ல் சுருக்கி விடுகிறது. அதைச் சார்ந்து உங்களுக்கு பொருட்கள் விற்கப்படுகின்றன. அரசியல் செய்திகள் வழங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட உங்களின் சிந்தனையை செயற்கை நுண்ணறிவு வடிவமைக்கும் கட்டத்தை உலகம் எட்டியிருக்கிறது.

ஆனால் இந்த ரோபாக்கள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை எல்லாம் இயக்கப்படுவதற்கு பின்னால் நிறுவனங்களும் லாபவெறியும் இருக்கின்றன. பல மனிதர்களை பணியமர்த்துவதற்கு பதிலாக automotion எனப்படும் தானியங்கி மற்றும் செயற்கை நுண்ணறிவு முதலிய விஷயங்களால் வேலையை செய்து கொண்டால் லாபம் அதிகம். மனிதர்கள் வேலை பார்த்தால் ஊதியம் கொடுக்க வேண்டும்.

எட்டு மணி நேரங்களுக்கு மேல் வேலை பார்க்க சொல்லக் கூடாது. சங்கம் வைத்து உரிமை கேட்டால் கொடுத்து தொலைய வேண்டும். ஆனால் இயந்திரங்களும் AI-யும் ரோபாக்களும் எந்த தொந்தரவும் தருவதில்லை. எனவே நிறுவனங்கள் அவற்றின் பக்கம் நகருகின்றன. அதனாலேயே அவற்றை சார்ந்து இயங்கும் பாணியை சமூகத்திலும் நிறுவனங்கள் உருவாக்குகின்றன. இறுதியில் வாழ்க்கையும் சிந்தனையும் இயந்திரமயமாகி சக மனிதர்களிடமிருந்து அந்நியமாகி விடுகிறோம்.

சாப்ளின்‘கிரேட் டிக்டேட்டர்’ பட முடிவில் பேசும் வசனத்திலேயே இவற்றுக்கு பதிலளித்துவிட்டார்:

“பேராசை மனிதர்களின் ஆன்மாக்களில் விஷம் கலந்து விட்டது. நாம் வேகத்தை அதிகரித்து விட்டோம். ஆனால் நமக்குள் முடங்கிவிட்டோம். இயந்திரங்கள் உபரியை நமக்கு அளிக்கிறது. நுகர்வு வெறியையும் அளித்திருக்கிறது. நம் அறிவு நம்மை சுயநலமாக்கிவிட்டது. நம் புத்திசாலித்தனம் நம்மை கடினமானவராகவும் இரக்கமற்றவராகவும் ஆக்கிவிட்டது. அதிகம் யோசிக்கிறோம். குறைவாக வருந்துகிறோம்.

“இயந்திரங்களை விட நமக்கு மனிதமே தேவை. புத்திசாலித்தனத்தை விட நமக்கு இரக்கமும் கனிவுமே தேவை. இவை ஏதுமின்றி வாழ்க்கை வன்முறை நிறைந்ததாகி விடும். நாம் தொலைந்து போய்விடுவோம்..

Also Read: 13 சாத்தானின் எண் என்பது உண்மைதானா?... யாரால் உருட்டப்பட்ட உருட்டு இது!