உலகம்
"3 மாம்பழம்.. 10 லட்ச ரூபாயா..?" : ஏலத்தில் எடுத்த தமிழன் - சுவாரஸ்ய கதை !
இலங்கையிலுள்ள வவுனியா - கணேசபுரம் பகுதியிலுள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் அலங்கார திருவிழா உற்சவம் நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதியிலுள்ள பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்காக அந்த கோயிலுள்ள விநாயகருக்கு தினந்தோறும் பூஜைகள் செய்வது வழக்கம். அப்படி பூஜை செய்யும் விநாயகருக்கு பூ, பழங்கள், மாலை, உடை என பல்வேறு அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் நேற்றைய முன்தினம் நடைபெற்ற உற்சவத்தில் விநாயகருக்கு சாத்தப்பட்ட பொருட்கள் ஏலத்திற்கு விடப்பட்டது. அந்த பொருட்களையெல்லாம் பக்தர்கள் வாங்கி தங்களது வீட்டில் வைத்துக்கொள்வார். மேலும் அது இருந்தால் தங்களுக்கு வந்த தடைகள் நீங்கி, இனி நல்லதே நடைபெறும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இந்த விழாவில், விநாயகருக்கு அணிவித்த மாலை மற்றும் மாம்பழங்களை ஏலத்தில் எடுக்க பக்தர்கள் கடும் போட்டியிட்டனர். ஆனால் அந்த போட்டியையெல்லாம் முறியடித்து அதே பகுதியில் வசிக்கும் தமிழரான மோகன்குமார் என்பவர் அதனை ஏலத்தில் பெற்றுக்கொண்டார்.
3 மாம்பழங்கள் மற்றும் ஒரு மாலை ஆகியவையே 10 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து அந்த பகுதி மக்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். இவ்வாறு அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட பழங்களில், ஒன்றை கோயிலில் வைத்து அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார். பின்னர் இரண்டை வீட்டிற்கு கொண்டு சென்று குடும்பத்தார் உண்டுள்ளனர்.
இது குறித்து மோகன்குமார் கூறுகையில், "மாம்பழங்கள் விநாயகருக்கு. அந்த மாம்பழங்களை ஏலத்தில் வைத்தார்கள். மூலஸ்தானத்தில் வைத்து, பிறகு எழுந்தருளி பிள்ளையாரிடம் வைத்தார்கள். எழுந்தருளி பிள்ளையார் கோவிலை சுற்றி வந்ததன் பிறகு, பிள்ளையாருக்கு அணிவித்த பெரிய ஆண்டாள் மாலையொன்றும், இந்த மூன்று மாம்பழத்தையும் ஏலத்தில் விட்டார்கள்.
இந்த ஏலத்தை மூன்று நான்கு பேர் போட்டியாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஏலம் நடந்துகொண்டிருக்கும் போதே நாங்கள் கோவிலுக்கு போனோம். பிள்ளையார் மாம்பழத்தில் பிரசித்தி பெற்றவர் தானே, ஏலத்தை கேளுங்கள் என குடும்பத்தவர்கள் சொன்னார்கள். 2 லட்சத்துக்கு மேல் ஏலத்தில் போய் கொண்டிருக்கு, இந்தளவிற்கு கேட்க முடியாது என்றேன். கோவிலுக்கு ஒரு நேர்த்தி வைத்திருந்தோம்.
அதனால், அந்த நேர்த்தியுடன் கேளுங்கள் என குடும்பத்தார் கூறினார்கள். அதன் பிறகு கேட்டோம். இறுதியாக 9 லட்சத்து 70 ஆயிரம் வரை கேட்கப்பட்டது. நாங்கள் 10 லட்சம் ரூபாவிற்கு கேட்டு, அதோடு ஏலம் நிறைவு பெற்றது. பிள்ளையாரின் அருள் எங்களுக்கு கிடைத்தது." என்றார்.
மேலும் வீட்டிற்கு கொண்டு சென்ற மாம்பழங்களை சாப்பிட்டு, அதன் விதைகளை தனது தோட்டத்தில் விதைத்திருப்பதாகவும் கூறினார். 3 மாம்பழங்களை 10 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ள நிகழ்வு ஆச்சர்யத்திற் ஏற்படுத்தினாலும், அந்த பழங்களில் ஒன்றை கோயில் பக்தர்களுக்கு பகிர்ந்தளித்தது அப்புகுதி மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.
Also Read
-
வரி விதிப்பு விவகாரம் : “வராக்கடன் விதிமுறைகளை தளர்த்த வேண்டும்” - சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்!
-
“Oxford பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் திருவுருவப்படம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“கழகத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து, 13 முறை சிறை சென்றவர் குளித்தலை அ.சிவராமன்” : முதலமைச்சர் இரங்கல்!
-
ராகுல் பயணம் : “பீகாருக்கான எழுச்சி மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கான எழுச்சி” - முரசொலி தலையங்கம்!
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!