உலகம்

அமெரிக்காவில் தலைதூக்கும் துப்பாக்கிக் கலாச்சாரம்: சுதந்திர தினவிழாவில் துப்பாக்கிச்சூடு - 6 பேர் பலி!

அமெரிக்காவின் சுதந்திர தினவிழா ஆண்டுதோறும் ஜூலை 4-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு 246-வது சுதந்திர தினம் நேற்று (ஜூலை 4) கொண்டாடப்பட்டது. இதற்கான அணிவகுப்பு ஐலேண்ட் பூங்கா என்ற பகுதியில் நேற்று இரவு தொடங்கியது. வழக்கம்போல் சுதந்திர தினத்தை கொண்டாட ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் குவிந்தனர்.

அப்போது அணிவகுப்பு தொடங்கிய சில நிமிடங்களிலே அங்கிருந்த வாலிபர் ஒருவர் ஒரு கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து திடீரென்று துப்பாக்கியை எடுத்து கண்ணனுக்கு தெரிந்த பொது மக்களை சரமாரியாக சுட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறி அடித்து அங்கிருந்து தப்பித்து ஓடினர்.

இந்த திடீர் துப்பாக்கி சூட்டில் சரமாரியாக குண்டு பாய்ந்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து காவல் அதிகாரி கூறுகையில், " இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ராபர்ட்-இ-க்ரைமோ என்ற 22 வயது மிக்க வாலிபர் ஒருவரை கைது செய்துள்ளோம். அவரிடமிருந்து அதிநவீன துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளோம். அந்த நபர் எதற்காக இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.

இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்த ஜோ பைடன், துப்பாக்கி கட்டுப்பாடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம் அமல்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே மீண்டும் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ம.பி-யில் மனைவியை அடித்து தெரு தெருவாக இழுத்து சென்ற கணவன்: மக்கள் கும்பலாக நின்று வேடிக்கை பார்த்த அவலம்