உலகம்

‘அவர் இந்து விரோதி’.. தலித் செயற்பாட்டாளர் நிகழ்ச்சி ரத்து : பாகுபாடு காட்டிய GOOGLE - வலுக்கும் கண்டனம்!

தலித் வரலாற்று மாதத்தை ஒட்டி கடந்த ஏப்ரல் 18ம் தேதி கூகுள் நிறுவனத்தில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தலித் உரிமைகள் அமைப்பின் சமத்துவ ஆய்வகத்தின் நிறுவனர் தேன்மொழி சௌந்ததராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவதாக இருந்தது.

இந்நிலையில், இந்நிகழ்விற்குக் கூகுள் நிறுவன ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து தேன்மொழி சௌந்ததராஜன் ஒரு இந்து விரோதி என கூறி நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இதையடுத்து உடனே கூகுள் நிறுவனம் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளது.

மேலும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கூகுள் மூத்த மேலாளர் தனுஜா குப்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் பன்முகத்தன்மையை நிலைநாட்ட முயற்சி செய்யக்கூடாதா என கூகுள் நிறுவனத்திற்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து கூறிய தேன்மொழி சௌந்ததராஜன்," சாதி, சமத்துவம் பற்றிய பேச்சுக்கு கூகுள் நிறுவனம் சட்டவிரோதமாக ரத்து செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை எனக்கு அதிர்ச்சிகரமாக உள்ளது. இதை வார்த்தையால் வெளிப்படுத்த முடியவில்லை.

இந்நிகழ்வை ரத்து செய்ய முயன்ற ஊழியர்களின் சாதிவெறியைக் கூகுள் நிறுவனம் ஆதரிப்பதுபோல் நடந்து கொண்டுள்ளது. இந்தப்போக்கு மிகவும் ஆபத்தானது. மனித உரிமைகள் பற்றிய உரையாடல்களைச் சாதிவெறியர்கள் விரும்புவதில்லை. கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தமிழ்நாட்டில் வளர்ந்தவர். அவருக்குச் சாதி பற்றித் தெரியாது என்பது நம்பும் படியாக இல்லை” என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வு சர்ச்சையானதை அடுத்து, எங்கள் நிறுவனத்தில் சாதிய பாகுபாடுகளுக்கு இடமில்லை. சாதிய பாகுபாட்டிற்கு எதிராகத் தெளிவான, வெளிப்படையான கொள்கையை நாங்கள் வைத்துள்ளோம் என கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Also Read: “தலைவா..! தளபதி உருவில் உன்னைக் காணுகிறது தமிழகம்!” : முரசொலி செல்வம் புகழாரம்!