தமிழ்நாடு

“தலைவா..! தளபதி உருவில் உன்னைக் காணுகிறது தமிழகம்!” : முரசொலி செல்வம் புகழாரம்!

தமிழகத்தை உன் வழியில நின்று உருவாக்கும் தளபதியின் உருவில் உன்னைக் கண்டு, நீ இல்லாத ஏக்கத்தைத் தணிக்கிறது தமிழகம்!

“தலைவா..! தளபதி உருவில் உன்னைக் காணுகிறது தமிழகம்!” : முரசொலி செல்வம் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கண் சிமிட்டும் நேரம் கூட எம் நெஞ்சம் விட்டு நீங்காத தலைவா!

“தமிழர்களே; தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும், கட்டுமரமாகத் தான் மிதப்பேன்... நீங்கள் அதிலே ஏறி பயணம் செய்யலாம்...” - என, அல்லும் பகலும் தமிழின நல்வாழ்வுக்காகவே மண்ணில் தோன்றி உழைத்த உன்னத முதல்வா!

உன் அருமை புரியாது உன்னை உதாசினப்படுத்திய காலத்திலும், உன்னை ஒரு காலத்தில் உணர்வார்கள்; உனக்காக ஏங்குவார்கள் என, உதாசினப்படுத்தியவர்களின் உன்னதத்துக்காக ஓய்வின்றி உழைத்தவனே!

தன்னலமற்ற பொது வாழ்க்கை என்பது, தாழம்பூவின் மணத்தைத் தொலைவிலிருந்து நுகர்வது போல அல்ல; அந்தப்பூவை எதிர்ப்புறமாகத் தடவுவதுபோ- என, பொது வாழ்வுக்கு இலக்கணம் சமைத்து வாழ்ந்து வரலாறான தலைவா!

“விவேகமெனும் வெள்ளி முளைத்து சாதிப்பித்து எனும் சனி தொலைந்தால்தான், சமத்துவம் எனும் ஞாயிறு தோன்றும்” - என, சாதிப்பித்தைச் சாய்த்திடும் நோக்கில் சமத்துவபுரங்கள் கண்ட சரித்திர நாயகனே!

“பதவிகள், பவிசுகள் வரும் போகும்; நிலைக்காது; தியாகம் மட்டுமே என்றும் நிலைக்கும். அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களாகி விடுவார்கள்; தியாகிகள், முன்னாள் தியாகிகள் ஆவதில்லை” - என, பதவி பெற்றவர்களுக்கு தலைக்கனம் ஏறாது தவிர்க்கதக்க பாடம் போதித்த பேராசானே!

“தலைவா..! தளபதி உருவில் உன்னைக் காணுகிறது தமிழகம்!” : முரசொலி செல்வம் புகழாரம்!

சமூக நீதியைப் புறக்கணித்து விட்டுத் தீட்டப்படும் எத்தகைய அரசியல் பொருளாதாரத் திட்டங்களானாலும் அவை, ஓட்டைக் குடத்தில் தண்ணீர் மொண்டிடும் முயற்சியாகவே அமையும் - என, சமூக நீதிச் சாசனம் எழுதிய சமூக நீதிக் காவலனே!

இதோ; உன் ஆட்சியை தமிழ்நாட்டிலே மீண்டும் உருவாக்கியுள்ளார், தளபதி ஸ்டாலின்!

“உழைப்பு... உழைப்பு... அதன் மறு வடிவமே ஸ்டாலின்” - எனப் புகழ்ந்து மகிழ்ந்தாயே; அந்த உழைப்பு - காலத்தை வென்ற கடும் உழைப்பு - கழக ஆட்சியை, கலைஞர் ஆட்சியை மீண்டும் உருவாக்கியே தீருவேன் எனக் கையில் கங்கணம் கட்டி, காலில் சக்கரம் கட்டி சூறாவளியாய்ச் சுழன்று சுழன்று ஆற்றிய உழைப்பு, கழக ஆட்சியை மீண்டும் உருவாக்கியுள்ளது.

உனது பேனா இட்ட பல கையெழுத்துக்களால் நவீனத் தமிழகம் உருவானது! இலட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர் இரத்தம் சிந்தியும் - பெற இயலாத உரிமைகளை, உன் பேனா சிந்திய ஒரு சொட்டு மை - பெற்றுத் தந்ததாக பொதுவுடைமைப் போராளி மணலி கந்தசாமி போன்றோர் போற்றிப் புகழ்ந்த உன் பேனா இப்போது, தளபதி கையில் இருந்து தொடர்ந்து சாதனைச் சரித்திரம் படைக்கத் தொடங்கி விட்டது.

தூள் கிளப்பும் துவக்கம்! அங்கிங்கெனாது எங்குமிருந்து குவிகிறது பாராட்டுப் புகழாரங்கள்! ‘இந்த மனிதருள் இத்துணை ஆற்றலா?’- என எண்ணிப் புகழ்வோர் எண்ணிலடங்காதவர்கள்! எதிர்பாராத இடங்களிலிருந்து கூட மனந்திறந்த பாராட்டுகள்!

‘இலட்சியம் என்பது எட்டிப் பறித்திடும் மல்லிகையன்று; ஏறிப்பறித்திடும் மாங்காயும், தேங்காயுமல்ல; எரிமலை மீது கொடி நாட்டல்!’- என, இலட்சியத்தை அடைவது என்பது எளிதான பாதையல்ல; நெருப்பாற்றில் நடத்தப்படும் நீச்சல் என நீ கூறிய பால பாடத்தைக் கற்றதின் எதிரொலியை தளபதி ஸ்டாலினின் ஒவ்வொரு அசைவிலும் காண முடிகிறது!

“இவன் தந்தை என்னோற்றான் கொல்...” என நீ உச்சிமோந்து பாராட்டும் வகையில் உன் கனவுகளை, நீ விரும்பி உருவாக்கிட நினைத்த ஒப்பற்ற தமிழகத்தை உன் வழியில நின்று உருவாக்கும் தளபதியின் உருவில் உன்னைக் கண்டு, நீ இல்லாத ஏக்கத்தைத் தணிக்கிறது தமிழகம்!

வெல்க தமிழகம்! வாழ்க தமிழ்!

- முரசொலி செல்வம்

banner

Related Stories

Related Stories