உலகம்

பெண்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்க தடை.. வழக்கை முடிக்க ரூ.5 கோடி கொடுக்கும் டிரம்ப்! #5IN1_WORLD

1) போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் உக்ரைன் அதிபர்!

ரஷியா உக்ரைன் போர் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மரியுபோல் நகரத்தின் மீதான ரஷிய தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மரியுபோலில் உள்ள பொதுமக்களை வெளியேற்றும்பொருட்டு ரஷியா போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளார். ஐநாவும், செஞ்சிலுவை அமைப்பும் சேர்ந்து 100க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்களை மரியுபோலில் இருந்து வெளியேற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்

2) பெண்களுக்கு டிரைவிங் லைசென்சு வழங்க தடை!

ஆப்கானிஸ்தான் தலீபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஒரு வித பீதியுடன் பொதுமக்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சில பெண்கள் வாகனங்களை ஓட்டி வந்தனர். இதையறிந்த தலீபான்கள் தற்போது அங்கு பெண்களுக்கு டிரைவிங் லைசன்ஸ் வழங்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3) தன் மீதான வழக்கை முடித்து வைக்க ரூ.5¾ கோடி கொடுக்கும் டிரம்ப்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், தனது பதவியேற்பு விழாவுக்காக கிடைத்த லாப நோக்கமற்ற நிதியை தன்னுடைய குடும்பத்தை வளப்படுத்த செலவு செய்ததாக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக வாஷிங்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் டிரம்ப் தரப்பு இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தது. லாப நோக்கமற்ற நிதியை சட்டவிரோதமாக பயன்படுத்திய வழக்கை முடித்துவைக்க 7,50,000 அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்குவதாக டிரம்பின் ஜனாதிபதி பதவியேற்பு குழு அறிவித்துள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள வாஷிங்டன் அட்டார்னி ஜெனரல் கார்ல் ரேசின் டிரம்ப் தரப்பிடமருந்து பெறப்படும் தொகை வாஷிங்டனில் செயல்படும் லாப நோக்கமற்ற 2 நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனவும் கூறினார்.

4) கோடையில் ஒரு உருமாறிய கொரோனா அலை வரலாம்!

சீனாவில் 2019-ம் ஆண்டு முதன்முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உருமாற்றங்களை அடைந்து, பரவி அல்லல்படுத்துகிறது. இது தொடர்பாக உலகளவில் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இஸ்ரேல் நாட்டில் உள்ள பென் குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி, அதுபற்றி ‘சயின்ஸ் ஆப் தி டோட்டல் என்விரான்மென்ட்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். அதன் முடிவு, இந்த கோடை காலத்தில் டெல்டா வைரஸ் அல்லது வேறொரு உருமாறிய கொரோனா அலை வரலாம் என்பதாகும்.

5) திருமண நாளில் மறக்க முடியாத சிறந்த பரிசை அளித்த மணமகன்!

பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் நடைபெறும் திருமணம் பற்றி நினைத்து பார்ப்பது கடினம். தனது திருமணத்திற்கு தன்னுடைய பெற்றோர் வரமுடியாது என மணமகள் நினைத்துள்ளார். ஆனால், அந்த சிறப்பு வாய்ந்த நாளில் மணமகளின் பெற்றோரை அவருடன் இருக்கும்படி உறுதி செய்து வருங்கால மணமகன் ஆச்சரியப்படுத்தி விட்டார். பிரேசிலில் இருந்து அவர்களை விமானத்தில் வரவழைத்து சற்று தொலைவில் மறைவாக அவர்களை நிற்க வைத்துவிட்டு மணமகளை மண்டபத்திற்கு வெளியே மணமகன் அழைத்து வருகிறார். அப்படி என்ன? தனக்கான பரிசு காத்திருக்கிறது என்ற வியப்பில் புன்முறுவலடன் வந்த மணமகள் பெற்றோரை பார்த்ததும் ஒரு கணம் உடைந்து போய்விட்டார். அப்படியே தரையில் அமர்ந்து அழுது விட்டார். பின்னர் எழுந்து ஓடி சென்று பெற்றோரை கட்டி தழுவி கொண்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Also Read: கேரளாவை அடுத்து.. பிரியாணி சாப்பிட்ட 24 பேருக்கு வாந்தி, மயக்கம்: உணவு பிரியர்கள் அதிர்ச்சி!