உலகம்

நடந்து சென்ற சீக்கியர்களை தாக்கிய மர்ம நபர்கள்.. என்ன நடக்கிறது நியூயார்க்கில்? திட்டமிட்ட சதியா?

1) போலந்து அதிபர் கொல்லப்பட்ட விமான விபத்துக்கு யார் காரணம்?

போலந்து அதிபர் கொல்லப்பட்ட விமான விபத்துக்கு ரஷியாவே காரணம் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலந்து நாட்டின் அப்போதைய அதிபர் லெக் காசின்ஸ்கி கடந்த 2010-ம் ஆண்டு ‘டியூ-154 ஏம்’ விமானத்தில் ரஷியாவுக்கு சென்றார். இந்த விமானம் ரஷ்ய எல்லைக்குள் விழுந்து நொறுங்கியதில் அவருடன் சேர்ந்து 95 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்நிலையில், இந்த விமான விபத்து குறித்து விசாரிக்க போலந்து அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு ஆணையம், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய விசாரணைக்கு பின்னர் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், “விமானத்தின் இடதுபக்க இறக்கையில் முதல் குண்டும், மைய பகுதியில் இரண்டாவது குண்டும் வெடித்துள்ளது. ரஷ்ய தரப்பின் சட்டவிரோத தலையீடே இந்த சம்பவத்துக்கு காரணம். இந்த சம்பவத்தில் விமானிகளின் தவறு எதுவும் இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2) நியூயார்க்கில் சீக்கியர்களை குறிவைத்து தாக்கும் கும்பல்

அமெரிக்காவின் நியூயார்க் ரிச்மண்ட் ஹில் பகுதியில் இரண்டு சீக்கியர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளானவர்களிடமிருந்து சில பொருட்களை திருடிச் செல்ல வேண்டுமென்ற நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதிகாலையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு சீக்கியர்களை, மர்ம நபர்கள் கம்பால் தாக்கி அவர்களின் தலையில் கட்டப்பட்டிருந்த முண்டாசுகளை அவிழ்த்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

3) உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்க அமெரிக்கா திட்டம்

உக்ரைனுக்கு மேலும் ரூ.5 ஆயிரம் கோடி ராணுவ உதவி வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. உக்ரைனுக்கு மேலும் 750 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன் மூலம் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள், வெடிபொருட்கள், ராக்கெட்டுகள், மருந்துப்பொருட்கள் உள்பட பல்வேறு ராணுவ ஆயுதங்களை அமெரிக்கா வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

4) இந்தோனேசியாவில் டிரக் கவிழ்ந்து விபத்து- 17 பேர் உடல் நசுங்கி பலி

இந்தோனேசியாவின் மேற்கு பபுவா மாகாணத்தில் 29 பேருடன் சென்ற டிரக், பாறை ஒன்றில் மோதி கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.

விபத்தில் பலியானவர்கள் அனைவரும் சுரங்க தொழிலாளர்கள் ஆவர். ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காக மேற்கு பபுவா மாகாண தலைநகரான மனோக்வரி சென்ற போது இந்த விபத்து நேரிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். டிரக்கில் அளவுக்கதிகமாக ஆட்களை ஏற்றிச்சென்றதே விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.