உலகம்

ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகக் கோரி வலுக்கும் போராட்டம் - என்ன நடக்கிறது கனடாவில்?

கனடா நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே கனடா நாட்டில் பெரும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. கனடா நாட்டுக்குள் அண்டை நாடுகளிலிருந்து லாரிகள் ஓட்டி வரும் ஓட்டுநர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென கோவிட் மூன்றாம் அலையை ஒட்டி கனடா நாட்டு அரசு அறிவித்திருந்தது.

மூன்றாம் அலை தொடங்கியபோது இப்படியான கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. அமெரிக்க - கனடா எல்லையைத் தாண்டும் லாரி ஓட்டுநர்கள் அத்தியாவசிய ஊழியர்கள் எனக் கருத்தில் கொள்ளப்பட்டு அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் எல்லை தாண்டி வரும் லாரி ஓட்டுநர்கள் கண்டிப்பாக தடுப்பூசிகள் போட்டிருக்க வேண்டுமென அமெரிக்கா கட்டுப்பாடு விதித்தது. அதைத் தொடர்ந்து கனடாவும் கட்டுப்பாடு விதித்தது. கனடாவுக்குள் நுழையும் ஓட்டுநர்கள் தடுப்பூசி போடவில்லை எனில், 14 நாட்கள் தனிமை சிகிச்சையில் இருக்க வேண்டும் என்பது கட்டுப்பாடு.

ஓட்டுநர்களுக்கான வருமானம் பாதிக்கப்படும் எனத் தொடங்கிய அதிருப்தி, கனடாவின் பழமைவாத கட்சியால் ஊதி பெருக்கப்பட்டு பெரும் போராட்டமாக உருவெடுத்தது. கட்டாயத் தடுப்பூசி, கட்டாய முகக்கவசம் முதலிய கட்டுப்பாடுகள் அனைத்தையும் விலக்க வேண்டும் என படு முட்டாள்தனத்துக்கு வளர்த்தெடுக்கப்பட்ட போராட்டம், கனடா நாட்டின் அதிபர் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்கிற இடத்தை அடைந்தது.

ட்ரூடோவுக்கு எதிரான பழமைவாத கட்சியின் போராட்டம் புதிதுமல்ல. 2019ஆம் ஆண்டிலும் Yellow Vest போராட்டம் இதே போல் லாரி வாகனங்களைக் கொண்டு பெருமளவில் வளர்த்தெடுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்துக்கான காரணம், கார்பன் வரி.

சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க, கார்பன் எரிபொருள் குறைக்கும் வகையில் எரிபொருள் வரி விதித்தார் ட்ரூடோ. காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றை சரி செய்ய, சாமானிய மக்கள் மீது வரியை சுமத்துவது சரியா என்ற கேள்வி இருப்பினும், அந்தப் போராட்டத்தைப் பின் இருந்து இயக்கிய பழமைவாத கட்சிக்கு வேறொரு காரணம் அடிப்படையாக இருந்தது. எண்ணெய் நிறுவனங்களுக்கு கார்பன் வரி பாதிப்பு ஏற்படுத்தும் என்றக் காரணம்!

தற்போதைய கட்டாய தடுப்பூசி கட்டுப்பாட்டைக் கூட கனடா விலக்கிக் கொண்டாலும் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி ஓட்டுநர்கள் தடுப்பூசி போட்டிருக்கவில்லை எனில் 14 நாட்கள் தனிமை சிகிச்சையில் இருக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவை நோக்கி இவர்களின் கை நீளவில்லை.

அமெரிக்கா - கனடா எல்லை, போராட்டத்தால் மூடப்பட்டிருப்பதால் பெரும் பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் தடைபட்டிருக்கின்றன. கட்டாயத் தடுப்பூசியை எதிர்த்துத் தொடங்கப்பட்ட போராட்டம் இப்போது ‘Freedom Convoy’ என விடுதலை முழக்கத்தைப் பெயராகச் சூட்டிக் கொண்டிருக்கிறது.

இத்தகையப் பின்னணியில்தான் ட்ரூடோ நெருக்கடி நிலையை அமல்படுத்தியிருக்கிறார். 30 நாட்களுக்கு நீடிக்கும் நெருக்கடி நிலையில், வணிக வழிகளை மறித்திருக்கும் கூட்டங்கள் கலைக்கப்படும். போராட்டங்களுக்கு நிதி வரும் வழிகளும் வங்கிக் கணக்குகளும் தடை செய்யப்படும். நேற்று ஆல்பெர்டா மாகாணத்தில் ஒரு லாரியில் சோதனையிடப்பட்டபோது துப்பாக்கிகளும் தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

‘அறவழிப் போராட்டம் என்கிற நிலையை இப்போராட்டம் தாண்டி விட்டதாக’ சொல்லும் ஜஸ்டின் ட்ரூடோ ‘வெகு விரைவிலேயே நெருக்கடி நிலை ரத்து செய்யப்படும்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அரசுக்கு எதிராக வலதுசாரிகள் நடத்தும் மக்கள் போராட்டங்கள் ஒன்றும் புதிதில்லை. 2019ஆம் ஆண்டில் பொலிவியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சோசலிசத் தலைவரான இவா மொராலஸ்ஸை கிறிஸ்துவ மதவாத எதிர்க்கட்சி ஒரு பகுதி மக்களின் போராட்டத்தைக் கொண்டு கவிழ்த்தது. போலவே ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களும் இதே ரகம்தான் ஒரே ஒரு வித்தியாசத்தைத் தவிர. சீனாவுக்கு எதிரான ஹாங்காக் போராட்டத்துக்கான நிதி வலதுசாரிகளிடமிருந்து வரவில்லை, அமெரிக்காவிலிருந்து வந்தது. அமெரிக்க ஆதரவில்தான் சீனாவுக்கு எதிராக அந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

நவதாராளமயத்துக்கு எதிராகக் கிளம்பும் இயல்பான மக்கள் எதிர்ப்பை, வலதுசாரிகள் கையகப்படுத்தி, தங்களின் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்வதே சமீப வருடங்களின் உலகப் போராட்ட வரலாறுகளாக இருக்கின்றன. அப்போராட்டங்களை இயக்கும் வலதுசாரிகளின் முகமூடியைக் கழற்றிப் பார்த்தால், அமெரிக்காவின் முகம் பல்லிளிக்கும்.

நவதாராளமயத்தை எதிர்த்து சோசலிசம் பக்கம் மக்கள் திரும்பி விடக் கூடாதென்பதற்காக அமெரிக்காவே வலதுசாரிகளைக் கொண்டு, எதிர்ப்பை வளர்த்தெடுத்து தனக்கு ஏற்றார்போல் பிறகு அதை தணித்தும் கொள்கிறது. எனினும் எதிர்ப்பு முழுமையாக தணிந்து விடுவதில்லை என்கிறது வரலாறு!

Also Read: வாட்ஸ் அப் பயனர்களே உஷார்... இனி ஹார்ட் விட்டால் 5 ஆண்டு சிறை ; 60 லட்சம் அபராதம் - எங்கு தெரியுமா?