உலகம்

வலதுசாரிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறதா ஃபேஸ்புக்? - ஆதாரங்களை சேகரித்த ஊழியர் நீக்கம்!

ஃபேஸ்புக் நிறுவனம் வலதுசாரி சார்புடைய கணக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆதாரங்களை சேகரித்த மூத்த பொறியாளர் ஒருவரை வேலையை விட்டு நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் ஒருவர் அந்நிறுவனத்தில் உள்வட்டார செய்திகளை பகிரும் இணையதளத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் முக்கியமான வலதுசாரி கணக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றின் கணக்குகளில் பதியப்படும் போலிச் செய்திகளை சரி பார்க்காமல் வேண்டுமென்றே விட்டுவிடுவதாகத் தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் நிறுவனம் அந்த பதிவை நீக்கிவிட்டு, அதைப் பதிவிட்டவரையும் வேலையை விட்டு நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நடந்த ஃபேஸ்புக் நிறுவன கூட்டம் ஒன்றில் அதனுடைய பணியாளர்கள் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பர்க்கிடம் வலதுசாரி பக்கங்களுக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமை குறித்து கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது.

பிரெயிட்பார்ட் நியூஸ் என்ற செய்தி நிறுவனம் நிரூபிக்கப்படாத செய்தி வீடியோ ஒன்றை வெளியிட்டபின்னும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முகக்கவசங்கள் தேவையில்லை என்று செய்தி வெளியிட்ட நிலையிலும், ஃபேஸ்புக்கின் செய்தி பங்குதாரராக எப்படி நீடிக்க முடியும் என்றும் பணியாளர்கள் ஸக்கர்பர்க்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

ஃபேஸ்புக் நிறுவனம் பிரெயிட்பார்ட் பதிவிட்ட அந்த குறிப்பிட்ட வீடியோவை 6 மணிநேரத்தில் நீக்கிவிட்டது. ஆனாலும் அதற்குள்ளாக அந்த வீடியோவுக்கு 1 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துவிட்டன. மேலும் பலர் அதை ஷேர் செய்துள்ளனர்.

எந்த ஒரு பக்கமும் தொடர்ந்து போலிச்செய்திகளை பதிவு செய்தால் அந்த பக்கத்தின் வீச்சை ஃபேஸ்புக் கட்டுப்படுத்திவிடும் என்பது அந்நிறுவன விதிகளில் ஒன்று, ஆனால் சில வலதுசாரி பக்கங்கள் தொடர்ந்து போலிச்செய்திகளை பதிவு செய்தபின்னும் ஃபேஸ்புக் நிறுவனம் கண்டுகொள்ளாமல் விடுகிறது எனக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், இதைக் குறிப்பிட்ட ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளதாக வெளிவரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "வேலையில்ல அதனால பேங்க் வச்சிட்டோம்" - பண்ருட்டியில் எஸ்.பி.ஐ பெயரில் போலி வங்கிக் கிளை!